2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக்கிண்ணம் 2018 - இரண்டாம் சுற்றும், இரண்டாவது காலிறுதியும்

Editorial   / 2018 ஜூலை 06 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச. விமல்
 
உலகக்கிண்ண தொடர்களில் அதிக விறுவிறுப்பாக நடைபெற்றதும், பல எதிர்பாராதா முடிவுகளையும் தந்த இரண்டாம் சுற்றுப் போட்டிகளை உள்ளடக்கிய தொடராக இந்த தொடரை கருத முடியும். இந்த சுற்றில் பலமான அணிகள், உலகக்கிண்ணத்தை வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணிகள் என கருத்தப்பட்ட அணிகள் பல வெளியேற்றப்பட்டுள்ளன. அதிக ரசிகர்களை உள்ளடக்கிய அணிகள் வெளியேறியதன்  காரணமாக விறு விறுப்பு குறைவைடையும் வாய்ப்புகளுள்ளன. ஆனாலும் இம்முறை காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவாகியுள்ள அணிகள் கடந்த முதல் சுற்றிலும் சரி, இரண்டாம் சுற்றிலும் சரி அவர்கள் விளையாடிய விதம்   ரசிகர்களினால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக  இனி வரும் போட்டிகள் வித்தியாசமான விறு விறுப்பினை தரும். அதிலும் தோல்வியடைந்து வெளியேறிய அணிகளின் ரசிகர்கள் இந்த அணிகளின் பக்கமாக திரும்பியுள்ளார்கள். அதிலும் பெல்ஜியம் மற்றும் ரஸ்சியா அணிகளுக்கான ரசிகர்கள் தற்போது அதிகம்.  அதேவேளை குறித்த அணிகளின்  பலம் பற்றி அறிந்து கொள்ளவும் இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. உருகுவே அணி ஆரம்பத்தில் கால்பந்தின் ஜாம்பவான். பின்னர் வீழ்ச்சியடைந்தார்கள். இம்முறை அவர்கள் சிறப்பாக விளையாடுவதனால் அவர்கள் பக்கம் பலரின் பார்வை திரும்பியுள்ளது. அதே போன்று பெல்ஜியம் அணி சிறப்பாக விளையாடுவதனால் இம்முறை அவர்கள் உலகக்கிண்ணத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
 
இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் விறு விறுப்பினை தந்த இரண்டு அணிகள் காலிறுதிப் போட்டிகளில் சந்திக்கவுள்ளன. பிரேசில் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் அவை. கடந்த முறை உலகக் கிண்ண தொடரில் முதல் மூன்றிடங்களுயும் பெற்ற அணிகளான ஜேர்மனி, ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து  ஆகிய அணிகள் காலிறுதிப்போட்டிகளுக்குள்  இல்லை. நெதர்லாந்து அணி உலககிண்ண தொடரிலேயே இல்லை.  கடந்த முறை உலககிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளுக்கு  தெரிவான அணிகள் மூன்று மாத்திரமே இந்த உலககிண்ண தொடரில் விளையாடவுள்ளன. பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகளே அவை. இந்த மூன்றணிகளில் பிரேசில் அரையிறுதிப்  போட்டிகளுக்குத் தெரிவானது. எனவே பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் தொடர்ச்சியான பலமாக காணப்படும் அணிகள். எனவே இரண்டு அணிகளும் மோதும் போது நிச்சயம் போட்டியின் இறுக்கத்துக்கு குறைவிருக்காது.
பிரேசில் அணி ஒரு சமநிலை முடிவினை முதல் சுற்றில் பெற்றுக்கொண்டது. ஆனால் பெல்ஜியமணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இது மனவளவில் பெல்லிஜிம் அணிக்கு பலத்தை வழங்கும். சுவிற்சலாந்து அணியுடன் பிரேசில் அணி தடுமாறியது. எனவே நாங்கள் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் விளையாடுவார்கள். கால்பந்தின் ஜாம்பவான்கள் 94, 98, 2002 என தொடர்ச்சியாக மூன்று தடவைகள் இறுதிப்போட்டிகளுக்கு தெரிவானவர்கள் அதன் பின்னர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகவில்லை. இரண்டு தடவைகள் காலிறுதிப்போட்டிகளுடனும், ஒரு தடவை அரை இறுதிப் போட்டியுடனும் வெளியேறினார்கள். இம்முறை உலக கிண்ண சம்பியன் பட்டத்தை குறிவைத்து கடுமையாக விளையாடுவார்கள் என நம்பலாம். 
 
12 ஆவது தடவையாக உலகக்கிண்ண தொடரில் விளையாடும் பெல்ஜியமணி இரண்டு தடவைகள் மட்டுமே காலிறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். 1986 ஆம் ஆண்டு நான்காமிடத்தை பெற்றவர்கள், கடந்த முறை  காலிறுதிப்போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். அதிகம் பிரபலமானவர்கள் இல்லை. அதிக எதிர்ப்பார்ப்புகள் இல்லை. அதனால் அவர்கள் மீது அழுத்தம் குறைவு. எனவே இவர்களினால் சிறப்பாக விளையாட முடிகிறது. தங்கள் சுய விளையாட்டினை(Own Game) அவர்கள் விளையாடுகிறார்கள். எனவே வெற்றி பெறக்கூடியதாகவுள்ளது. இவர்கள் ஜப்பான் அணியினை இரண்டாம் சுற்றுப்போட்டியில் இலகுவாக வெற்றி பெறவில்லை என்பதும் இறுதி நேரத்தில் வெற்றி பெற்று தப்பி பிழைத்து வந்தார்கள் என்பதும் இவர்களை முளுமையாக நம்பமுடியாமைக்கான காரணமாக உள்ளது.
 
இம்முறை காலிறுதிப் போட்டிகளில் விளையாடும் எட்டணிகளில், நான்கணிகள் முன்னாள் சம்பியன்கள்.  இந்த அணிகளில் குறைந்தது ஒரு முன்னாள் சம்பியன் அணி அடுத்த சுற்று வாய்ப்பினை இழக்கப்போகிறது. கூடியது மூன்றணிகள் வாய்ப்பை இழக்கலாம். இது ஒரு சுவாரசியமான விடயமாகவுள்ளது. முன்னாள் சம்பியனும், கூடுதலான தடவைகள் உலகக்கிண்ணத்தை வென்ற பிரேசில் அணி உலகக்கிண்ணத்தை வென்றதன் பின்னர், சம்பியனாகி அடுத்த சம்பியன் பட்டத்தை வெல்ல நீண்ட காலம் எடுத்துக்கொண்ட இரண்டாவது தடவை இதுவாகும். எனவே அவர்கள் இம்முறை இலகுவாக  விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடந்த போட்டியில் அவர்கள் மெக்சிகோ அணியுடன் விளையாடிய விதம் நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரேசில் அணியின் பலமான அணியாக வெளிக்காட்டியது. நெய்மரினை மையப்படுத்தி விளையாடுவதும், நெய்மர் தான் பந்துகளை அதிகம் கோலினை நோக்கி எடுத்துச் செல்வதும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எதிரணியினர் அவரை குறிவைத்து விளையாடுகிறார்கள். மெக்சிகோ வீரர்கள் நெய்மரினை மைதானத்தில் உருட்டி எடுத்தார்கள். 
 
மெக்சிகோ அணி ஆரம்ப போட்டிகளில் விளையாடிய விதம் மிக அபாரமாக இருந்தது. குறிப்பாக முன்வரிசை வெளிப்புற வீரர்கள் (Extreme) பந்துகளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்ற விதம் சிறப்பாக இருந்தது. பிரேசில் அணியுடனான போட்டியில்  முடியவில்லை. மெக்சிகோ அணி பந்தினை தங்கள் கட்டுப்பாட்டில் அதிகம் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் கோலை நோக்கி பந்துகளை செலுத்தியது குறைவு. இரண்டு தடவைகள் மாத்திரமே அவ்வாறு அடித்துள்ளார்கள். ஆனால் பிரேசில் அணி அவ்வாறு 10 தடவைகள் உதைத்துள்ளார்கள். ஆக பிரேசில் அணியின் பின் வரிசை பலமாக இருந்துள்ளது. காலம் காலமாக பிரேசில் அணியின் பலமும் அதுவே. மெக்சிகோ அணி 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவானதில்லை. தொடர்ச்சியான ஏழாவது தடவையாக இரண்டாம் சுற்றுடன் வெளியேறியுள்ளார்கள்.
 
முதற் தடக்கையாக உலகக்கிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளை எட்டி பார்க்கும் ஜப்பான் அணியின் கனவினை பெல்ஜியம் அணி இறுதி நிமிடங்களில் தகர்த்து. ஆசை காட்டி மோசம் செய்த நிலை போன்ற நிலை ஜப்பான் அணிக்கு ஏற்பட்டது. ஒரு ஆசிய அணி உச்சம் தொட முடியாமல் போய்விட்டதே என்ற கவலை ஆசிய ரசிங்கர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு நல்ல அணியுடன் போராடி அவர்களை தடுமாற வைத்துள்ளார்கள் என்ற நிலையினை ஜப்பான் ஏற்படுத்தியது. 
 
ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் கடுமையாக காணப்பட்டது. தொடர்ச்சியான ஆறாவது தடவையாக உலகக்கிண்ண தொடரில் விளையாடிய ஜப்பான் அணி மூன்றாவது தடவையாக இரண்டாம் சுற்றுடன் வெளியேறியுள்ளார்கள். ஒன்றுவிட்ட ஒரு தடவை இரண்டாம் சுற்று வாய்ப்பை பெற்றவர்கள் அடுத்த முறை முதல் சுற்றுடன் வெளியேறுவார்களா அல்லது காலிறுதிப்போட்டிகளுக்கு செல்வர்களாக என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
பெல்ஜியம் மற்றும் ஜப்பான்  அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் விறு விறுப்பாகவே நடைபெற்றது. முதல் பாதி கோல்களின்றி நிறைவடைய இரண்டாம் பாதியின் ஆரம்பித்திலேயே ஜப்பான் அணி அடுத்தடுத்த இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. பெல்ஜியமணி அதன் பின்னர் கோல்கள் அடிக்கும் முனைப்புடன் வேகமாக விளையாடினார்கள். ஜப்பான் அணியும் சளைக்காமல் அதே போலவே விளையாடினார்கள். ஆனாலும் ஜப்பான் அணியினர்  கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் தவற விட்டார்கள். அதுவே அவர்களின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. பெல்ஜியம் அணிக்கும் அவ்வாறான வாய்ப்புகள் கிடைத்த போதும் ஜப்பான்  அணியின் கோல் காப்பாளர் அதனை தடுத்தார். இருந்தாலும் 69 வது நிமிடத்தில் முதல் கோலினை அடித்த பெல்ஜியமணி அடுத்த 5 நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து சமன் செய்தது. இரண்டாம் பாதியின் மேலதிக நேரமும் நிறைவடையப்போகிறது என எதிர்பார்த்திருக்க ஜப்பான் அணி கோல் ஒன்றை அடிக்க முயற்சி செய்து தவறவிட அந்த வாய்ப்பினை தமக்காக மாற்றி 30 செக்கன்கள் மீதமுள்ள நிலையில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. தப்பினோம் பிழைத்தோம் என இப்போது அவள் காலிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ளார்கள்.
 
பந்தயக் காரர்கள் பிரேசில் அணிக்கு உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். பெல்ஜியம் அணிக்கு ஐந்தாமிட வாய்ப்பு. எனவே பிரேசில் வெல்லுமென்ற எதிர்ப்பார்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பிரேசில் அணி தரப்படுத்தல்களில் இரண்டாமிடம். பெல்ஜியம் மூன்றாமிடம். அடுத்தடுத்த அணிகள். ஆகையால் சம பல அணிகள் எனக்கூற முடியும். ஆக இந்த உலகக்கிண்ண தொடரின் கடுமையான போட்டியாக இந்தப்போட்டியினை நாம் பார்க்கலாம்.   பிரேசில் அணி உலகக்கிண்ண தொடரில் ஒரு தடவை பெல்ஜியம் அணியினை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு பெல்ஜியமணி பதிலடி வழங்குமா அல்லது பிரேசிலின் ஆதிக்கம் இந்த உலகக்கிண்ண தொடரில் தொடருமா என்பதனை இன்று இரவு 11.30 இற்கு ஆரம்பிக்கும் இரண்டு அணிகளுக்குமான போட்டியின்  முடிவு சொல்லும்.
 
இரண்டாம் சுற்று முடிவுகள் 
பிரேசில் Vs மெக்சிகோ 2 - 0
பெல்ஜியம் vs ஜப்பான் 3 - 2

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .