2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடைசி உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் நட்சத்திரங்கள்

Shanmugan Murugavel   / 2019 மே 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரானது இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், மகேந்திர சிங் டோணி, லசித் மலிங்க, கிறிஸ் கெய்ல், ஷொய்ப் மலிக், டேல் ஸ்டெய்ன், ஹஷிம் அம்லா, பப் டு பிளெஸி, மஷ்ரபி மோர்தஸா, றொஸ் டெய்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணத் தொடராக இது விளங்கவுள்ள நிலையில், தமது கடைசி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பவர்கள் என எதிர்பார்க்கப்படுபர்வகளை இப்பந்தி ஆராய்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கையில் தோன்றிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரொருவரான லசித் மலிங்க, இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தவகையில், 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின்போது தனது உச்சத்தை வெளிப்படுத்தியிருந்த 36 வயதாகும் மலிங்க, தனது நான்காவது உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, மலிங்க தவிர இலங்கையின் உலகக் கிண்ணக் குழாமில் இடம்பெற்றுள்ள முன்னாள் தலைவரான அஞ்சலோ மத்தியூஸும் அண்மைக் காலமாக உபாதைகளால் அடிக்கடி அவதிப்படுகையில், 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின்போது 36 வயதாகும் நிலையில் அப்போது விளையாடுவது சந்தேகமென்ற நிலையில் அவரின் கடைசி உலகக் கிண்ணமாகவும் இதுவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்த தந்த மகேந்திர சிங் டோணியின் இறுதி உலகக் கிண்ணமாக இதுவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 38 வயதாகும் டோணி, நான்காவது தடவையாக உலகக் கிண்ணத்தில் இம்முறை பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, உலகில் தோன்றிய மிகச்சிறந்த இருபதுக்கு – 20 போட்டி வீரரொருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல், இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக முன்னரே அறிவித்துள்ள நிலையில், 40 வயதான அவர் தனது ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை விளையாடவுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், சகலதுறைவீரர்களான மொஹமட் ஹபீஸ், ஷொய்ப் மலிக் ஆகியோர் தத்தமது கடைசி உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடவுள்ளனர். இருவரும் உலகக் கிண்ணத் தொடருடன் தமது ஓய்வுகளை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 39 வயதாகும் ஹபீஸ், 38 வயதாகும் மலிக் ஆகியோர் தமது மூன்றாவது உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, தென்னாபிரிக்க பொறுத்தவரையில் அவ்வணியே தமது கடைசி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் பல வீரர்களை தமது குழாமில் உள்ளடக்கியுள்ளது. அணித்தலைவர் பப் டு பிளெஸியிலிருந்து, ஹஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹீர், ஜெ.பி டுமினி உள்ளிட்டோருக்கு இந்த உலகக் கிண்ணத் தொடரே இறுதி உலகக் கிண்ணத் தொடராக அமையவுள்ளது.

அந்தவகையில், 35 வயதாகும் பப் டு பிளெஸி, 36 வயதாகும் ஹஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், ஜெ.பி டுமினி, 40 வயதாகும் இம்ரான் தாஹீர் ஆகியோர் தமது மூன்றாவது உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை பங்கேற்கின்றனர். இதில், இம்ரான் தாஹீர், ஜெ.பி டுமினி ஆகியோர் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நியூசிலாந்தைப் பொறுத்தவரையில் அவ்வணியின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரரான றொஸ் டெய்லர், தனது கடைசி உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ளார். அந்தவகையில் 36 வயதாகும் றொஸ் டெய்லர், தனது நான்காவது உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் கருத்துகளை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, பங்களாதேஷைப் பொறுத்த வரையில் அவ்வணியின் தலைவரான மஷ்ரபி மோர்தஸா பங்கேற்கும் இறுதி உலகக் கிண்ணத் தொடராக இம்முறை உலகக் கிண்ணத் தொடர் அமையவுள்ளது. அந்தவகையில், 36 வயதான மஷ்ரபி மோர்தஸா, தற்போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காணப்படுகின்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஷ்ரபி மோர்தஸா, 34 வயதாகும் மகமதுல்லா, 33 வயதாகும் முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரும் அண்மைய காலங்களில் காயங்களால் அவதிப்படுகின்ற நிலையில், அவர்களின் கடைசி உலகக் கிண்ணத் தொடராக இது அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் தனது கடைசி உலகக் கிண்ணத்தில் விளையாடுபவராக லியம் பிளங்கெட் மாத்திரமே காணப்படுகின்றார். 34 வயதான பிளங்கெட், தனது இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை விளையாடவுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் தமது முதலாவதும் கடைசியுமான உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை விளையாடப் போகின்றவர்களாக 36 வயதாகும் ஷோண் மார்ஷ், 32 வயதாகும் நேதன் கூல்டர்நைல் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில், 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறும்போது நேதன் கூல்டர்நைலுக்கு 36 வயதே ஆகும் என்றபோதும், தொடர்ச்சியாக உபாதைகளால் அவதிப்படுகின்ற நேதன் கூல்டர்நைல், அவ்வளவு காலமும் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்பாரா என்பது சந்தேகத்துக்கிடமானதொன்றாகக் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .