2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை எதிர்த்து கண்ட ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி. அன்சார், வசந்த சந்திரபால

ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுக வளாகத்தில் வைத்து கடற்படைத் தளபதியினால் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்குதல் நடத்திய கடற்படைத் தளபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த கண்ட ஆர்ப்பாட்டம், இன்று திங்கட்கிழமை (12) காலை, அம்பாறையில் நடைபெற்றது.

அம்பாறை மணிக்கூட்டிக் கோபுரத்துக்கு அருகாமையில் நடைபெற்ற இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட மும்மொழி  ஊடகவியலாளர்கள், பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர்.

'அரசே ஊடகவியலாளர் மீது கை வைக்காதே', ஊடகங்கள் மஹிந்த அரசாங்கத்திலும் அடக்குமுறை, மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்திலும் அடக்கு முறையா', 'அரசே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடு' மற்றும் 'ஊடகவியலாளர்களை நசுக்காதே, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து' போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

'துறைமுகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்தினைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கடற்படை தளபதியினால் தாக்குதல் நடத்தப்பட்டமையானது கண்டிக்கத்தக்க பாரதூரமான செயற்பாடாகும்.

'ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டுவிட்டு சுதந்திரமாக நடமாட கடற்படைத் தளபதிக்கு இடமளிக்கக்கூடாது, அவரின் செயற்பாடானது ஜனநாயக ரீதியற்றதும், மனித உரிமை மீறும் செயலாகும்.

'எனவே, இவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்து ஊடக சுதந்திரத்தை நல்லாட்சி அரசாங்கம் நிலைநாட்ட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X