2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கைம்பெண்களுக்கு கரம்கொடுத்துக் கரைசேர்க்கத் திட்டம் தீட்டுங்கள்

Editorial   / 2021 ஜூன் 23 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைம்பெண்களுக்கு கரம்கொடுத்துக் கரைசேர்க்கத் திட்டம் தீட்டுங்கள்

ஒரு வருடத்துக்குள் நினைவுகூர வேண்டிய நாள்கள் பலவிருந்தாலும், முக்கியமான நாள்கள் பல, நாள்காட்டிக்குள்ளே அடக்கப்பட்டு விடுகின்றன.   கொண்டாட்டங்கள், பரிசுகளை வழங்கும் நாள்களைத் தவிர, ஏனைய நாள்கள் அனைத்துக்கும் அதேகதிதான். அவ்வாறான நாள்களில் ஒன்றாகவே சர்வதேச விதவைகள் நாளான இன்றைய (ஜூன் 23) நாளை, பார்க்க வேண்டியிருக்கிறது.

கணவனை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் கைப்பெண்களின் நிலை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே, உலகம் முழுவதும் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கைம்பெண்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து அவதானித்து, அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும் எனும் நோக்கிலேயே ஐ.நா பொதுச் சபையில், 2010 டிசெம்பர் 23ஆம் திகதி, தீர்மானத்தை நிறைவேற்றி, இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.

காபூன் நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி, சில்வையோ ஒடிம்பாவின் கோரிக்கையின் பிரகாரமே சர்வதேச கைம்பெண்கள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

ஐ.நாவின் தரவுகளின் பிரகாரம், கணவனை இழந்த 250 மில்லியனுக்கும் மேற்பட்ட கைம்பெண்கள் உலகளாவிய ரீதியில் வாழ்கின்றனர். இலங்கையில், உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் மட்டும் சுமார் 40ஆயிரத்துக்கு மேற்பட்ட கைம்பெண்கள் ஜீவியம் நடத்துகின்றனர். 

விதவைகளின் தலைவிதி பற்றி, ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருப்போர் கவனத்தைச் செலுத்துவதே இல்லை. யுத்தத்துக்குப் பின்னர், வட மாகாணத்தைத் தமிழர்களும் கிழக்கைத் தமிழரும் முஸ்லிம்களும்  ஆட்சியதிகாரம் செய்தனர். அக்காலப்பகுதியிலேனும் கைம்பெண்களின் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகும்.

யுத்தத்துக்குப் பின்னர், பெருமெடுப்பில் படையெடுத்த நுண்கடன் நிறுவனங்கள், விதவைக் குடும்பங்களையும் பெண்கள் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்களையும் தங்கள் வலைக்குள் விழச்செய்துவிட்டன.

‘நுண்கடன்’ எனும் பொறிக்குள் விழுந்த பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ‘குட்டிபோட்ட’ வட்டிகளைக் கட்டமுடியாது, தன்னுயிரை மாய்த்துக்கொண்டமை செய்திகளாகின. இன்னும் சில பிரதிநிதிகள், வட்டிக்காகப் பாலியலை இலஞ்சமாகவும் கோரியிருந்தமை, வெட்கித் தலைக்குனியச் செய்தன.

தங்களுடைய கைகளில் அதிகாரம் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, தம்மக்களின் மேம்பாட்டுக்காக, ஆகக் கூடுதலான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கலாம். எனினும், அரசியல் தீர்வு எனும் போர்வைக்குள் சிக்கி, அதிகாரத்தைத் தக்கவைக்கும் பயணத்தில் பயணித்தமையால், மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் கையேந்தும் நிலைக்குள் விழுந்துவிட்டனர்.

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் அல்லது, முழுமையாக அங்கவீனமடைந்துள்ள குடும்பத்தலைவனைக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு, பெண்களே தலைமை தாங்குகின்றார்கள். எவ்விதமான வருமானங்களும் இன்றி, ஏதோவொரு தொழிலைச் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றுகின்றார்கள். அவ்வாறானவர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக, முறையான திட்டங்களை வகுக்கவேண்டியது, ஆட்சியதிகாரத்தில் இருப்போரின் தலையாய கடப்பாடாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .