2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கலைக்க களமிறக்கப்படுவது குண்டர்கள் கூட்டமா?

Editorial   / 2023 மார்ச் 13 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க களமிறக்கப்படுவது குண்டர்கள் கூட்டமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கொழும்பிலும், பிரதான இடங்களில் மட்டுமன்றி, வெளியே சிறு, சிறு நகரங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

புதிய வரிக்கொள்கை, வரி அதிகரிப்புக்கு எதிராக, மின் கட்டண அதிகரிப்பு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்த்தரப்பில் இருக்கும் அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் அமைப்புகளும் ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

கொழும்புக்கு வெளியே வடக்கு, கிழக்கை தவிர்த்து முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீது பெரும்பாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மீது கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன. நீர்த்தாரை பிரயோகங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அருகே அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட கண்ணீர்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், நீர்த்தாரை பிரயோகத்தில் மலம் கலக்கப்பட்டதாகவும், இரசாயன மூலகங்கள் கலக்கப்பட்டதாகவும் அதனாலேயே, ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமன்றி, வீதியோரத்தில் சென்று கொண்டிருந்தவர்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனினும், பாடசாலை மாணவர்கள் மீதும் இந்த அரசாங்கம் கண்ணீர்ப்புகை குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டதென எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் குற்றஞ்சாட்டின.

அவ்வகையான குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாடசாலைகளுக்கு அண்மித்த பிரதேசங்களில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவேண்டாமென பாராளுமன்றத்தில் வைத்து வலியுறுத்தினார். எனினும், ஆர்ப்பாட்டத்தை கலைக்கச் சென்றிருந்த கலகமடக்கும் பொலிஸார் குண்டாந்தடிகளை வைத்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக முதுகுப்புறத்தில் காட்டுக் கம்புகளையே வைத்திருந்துள்ளனர்.

அவ்வாறான கம்புகளை வைத்திருந்தமை, முதுகுப் புறத்திலிருந்து அவற்றை எடுத்தமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில்தான், ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்காக பொல்லுகளுடன் வருபவர்கள் யார்? அவர்கள் அவன் கார்ட்டால் இயக்கப்படும் குழுவா? என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
 
எனினும், பாராளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதியன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் தற்போதை செயற்பாட்டை முடக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதற்கு பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. 13.03.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .