2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனநாயக அடக்குமுறைக்காக ஆரம்பப்புள்ளி இடப்பட்ட கரிநாள்

Editorial   / 2021 நவம்பர் 17 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக அடக்குமுறைக்காக ஆரம்பப்புள்ளி இடப்பட்ட கரிநாள்

ஜனநாயக நாடொன்றில், அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின், அங்கு ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதாகவே அர்த்தப்படுத்தப்படும்.

அவ்வாறான சம்பவங்கள் நேற்று (16) தென்னிலங்கையில் நிகழ்ந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. பொலிஸார், படைத்தரப்பினர், புலனாய்வாளர்கள் ஆகியோரின் சட்டத்துக்குப் புறம்பான இவ்வாறான செயற்பாடுகள், தென்னிலங்கைக்கு வேண்டுமென்றால், புதிதாய் இருக்கலாம். ஆனால், வடக்கு, கிழக்கைக் பொறுத்தமட்டில், அவை அன்றாட நிகழ்வுகளாகும். 

ஒவ்வொன்றுக்காகவும் நீண்ட வரிசைகளில் காத்துக்கொண்டிருக்கும் யுகத்துக்குள், ஆட்சியாளர்கள் நாட்டைத் தள்ளிவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காத்திருக்கும் வரிசைகளின் பட்டியல், எரிபொருள் வரை நீண்டு நிற்கிறது. அந்நியசெலாவணி பிரச்சினையால், கால்கடுக்க நிற்கும் வரிசைகளின் பட்டியல், இன்னும் நீண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

மக்களின் மீதான சுமை, தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் திணிக்கப்படும் நிலையில்தான், ஐக்கிய மக்கள் சக்தி, ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக, வெளிமாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் வருகைதந்தனர்.

அவ்வாறு வந்தவர்கள், தாம் வந்த பஸ்களிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். ஆங்காங்கே திடீரென முளைத்த சோதனைச் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸார், “கொழும்புக்கு ஏன் செல்கின்றீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, கொவிட்-19 சுற்றாடல் வழிகாட்டியை சுட்டிக்காட்டி திருப்பியனுப்பிவிட்டனர்.

  நியாயமாகதான் நடக்கின்றோம் என்றால், மக்களின் போராட்டத்துக்கு அரசாங்கம் அச்சமடையத் தேவையில்லை. மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தால் கொரோனா அலை உருவாகுமென்றால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் பங்கேற்கும் கூட்டங்களின் மூலம்,  கொரோனா அலை உருவாகாது என்பதற்கு உத்தரவாதம்தான் என்ன? கொரோனா பொது எதிரி என்பதை சகலரும் நினைவில் கொள்க!

கொரோனா போர்வைக்குள் இருந்துகொண்டு, ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் தீர்மானத்தால், கொழும்பில் மட்டுமே முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்ட இடங்களில் எல்லாம் முன்னெடுக்கப்பட்டன.

ஆக, ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ எனும் தொனிப்பொருளை, அரசாங்கமே பரவலாக்கிவிட்டது. கொழும்புக்கு வரும் தனியார் பஸ்களை மட்டுமே திருப்பி அனுப்பியதன் ஊடாக, ‘ஒரேநாடு, ஒரே சட்டம்’ என்பதும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒருசில விடயங்களை மட்டுமே இலக்குவைத்து, கொரோனா போர்வைக்குள் இருந்துகொண்டு, சுகாதார வழிகாட்டல்களைத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனநாயக நாடொன்றில், அதுவும் ‘ஒரேநாடு, ஒரே சட்டம்’ அமலாக்க எத்தனிக்கும் நிலையில், வீதிக்கு குறுக்கே இரும்பு முள்வேலியைப் போட்டு, மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது அடக்குமுறைக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்ட கரிநாளாகும். வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், எந்நாளும் கடைப்பிடிக்கப்படும் ஒருமுறைமையாகும் என்பதை நினைவுறுத்துகின்றோம். (16.11.2021)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .