2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திடீரென பிரதிஷ்டையான சிவலிங்கமும் கனவில் தோன்றிய புத்தரும்

Editorial   / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திடீரென பிரதிஷ்டையான சிவலிங்கமும் கனவில் தோன்றிய புத்தரும்

வடக்கு,கிழக்கில் பெரும்பான்மையாக செறிந்து வாழும் தமிழ்பேசும் மக்களின் கலாசாரத்தையும் இருப்பையும், முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாடுகள் ஏதோவொரு ரூபத்தில் முன்னெடுக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.

ஆட்சிகள் மாறினாலும், பௌத்த-சிங்கள மயமாக்கல் இன்னுமே கைவிடப்படவில்லை. அது மாற்றுவடிவில், மிகவும் சூட்சுமமான முறையில் அரங்கேற்றப்படுகின்றன. இவை இனங்களுக்கு இடையிலான கசப்புணர்வை இன்னுமின்னும் இறுக்கமாக்கும்.

சிறுபான்மையின மக்களின் வழிபாட்டிடங்களை அடாத்தாக கைப்பற்றல், தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வைக்குள் மறைந்துகொண்டு பாரம்பரிய காணிகளையும் வழிபாட்டிடங்களையும் கைப்பற்றல் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.

இல்லையேல், படைமுகாம்களை அமைத்து, அதில் புத்தர் சிலைகளை வைத்துவிடல்; அரச மரங்களை நாட்டிவைத்து அதற்கு கீழே விஹாரைகளை நிர்மாணித்தல்; அல்லது புத்தர் கனவில் வந்து, சிலையொன்றை வைத்து வணங்கச் சொன்னார் என்றெல்லாம் பல நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

சிவராத்திரி நாளான 18ஆம் திகதி சனிக்கிழமைக்கு முதல் நாளன்று, யாழ். வடமராட்சி கிழக்கு, முடங்குதீவு பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தை அறிந்திருப்பீர்கள்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரத்தின் கீழ்,   வெள்ளிக்கிழமை (24) இரவு, புத்தரின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. மறுநாள் சனிக்கிழமை (25) ஊரவர்கள் அறிந்து அவ்விடத்தில் கூடியதுடன், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமையால், அந்த புத்தர் சிலையை இராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர்.

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால், அவ்விடத்தில் வழிபடுவதற்காக புத்த பெருமானின் சிலையை  வைத்தேன் என அவ்விடத்தில் புத்த சிலையை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் எதிர்கால சந்ததியினருக்கு பிழையான வழிகாட்டல்களாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவை, மதங்களுக்கு இடையிலான கசப்புணர்வை தூண்டுவதற்கான தணலாகும் என்பது மட்டுமே யதார்த்தமாகும்.

“ஆண்டவன் மனித குலத்துக்கு வழங்கிய அருமையான கொடை அறிவியல். எதிலும் அடிப்படையை ஆராயும் அறிவியலே சமுதாயத்தின் மூலதனம் ஆகும்” என அப்துல் கலாம் தெரிவித்துள்ளமை பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும். 

“புதியன கண்டறிதல், புதியன கண்டுபிடித்தல், புதியன புனைதல், படிப்படியான சிறு மாற்றங்களால் நம் எண்ணங்களையும் தீர்வுகளையும் தொடர்ந்து செம்மையாக்கும் வழிமுறையே படைப்பாற்றலாகும்” என்றார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உணவு, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், வியூகம் வகுத்தல் ஆகிய ஐந்து அம்சங்களுடன் ஆறாவதாக இன்னோர் அம்சமான ‘கடவுள் நம்பிக்கை’ என்பதையும் சேர்த்துக்கொள்ளுமாறு கலாம் கேட்டிருந்தார். எனினும், கடவுள் நம்பிக்கையை பிற்போக்குத்தனமாகவும் மதங்கள், இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்த எத்தனிக்கக்கூடாது என்பதே எமது கருத்தாகும். இதையே, நமது காலத்தில் வாழ்ந்த அப்துல் கலாமும் வலியுறுத்திக் கூறுகின்றார்.  (27.02.2023)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .