2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தீவிரமாக பரவும் வைரஸூகளும் மருந்துகளுக்கான தட்டுப்பாடும்

Editorial   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரமாக பரவும் வைரஸூகளும் மருந்துகளுக்கான தட்டுப்பாடும்

நாட்டில் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸூகளால் பலரும் பாதிக்கப்பட்டு, பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவுக்குப் பின்னர், ஒரே நேரத்தில் நாட்டின் பல பாகங்களிலும் வைரஸூகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

இந்த வைரஸூகளால் பெரும்பாலும் சிறுவர்களே கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு 60க்கும் 70க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான சிறுவர்கள், பாதிக்கப்படு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என தேசிய ​தொற்றுநோய்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காய்ச்சல் உட்பட, இன்புளுவன்சா, டெங்கு, கொவிட் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்குகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், கொரோனா வைரஸ் ​தொற்றுக்காலத்தில் அதிலிருந்து பாதுகாப்பதற்காக, கடைப்பிடித்த சுகாதார கட்டுப்பாடுகளை அவ்வாறே கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

கொவிட்-19 தொற்றின் தாயகமென அறியப்பட்ட சீனா, கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தாக்கத்துக்கு கடுமையாக முகங்கொடுத்துக்கொண்டே வருகின்றது. அண்மைய நாள்களில், அதன் வீரியம் அதிகரித்துள்ளது. அங்கு தீவிர கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், கட்டுப்பாடுகளை நீக்கினால், சுமார் 20 இலட்சம் பேர் வரையிலும் உயிரிழக்க நேரிடுமென சீன மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த எச்சரிக்கையை அந்நாட்டுக்கு மட்டுமானதாக நினைத்துவிடக்கூடாது.

இவ்வாறான நிலையில், நமது நாட்டில் ஒருபக்கம் வைரஸூகள் பல ஏககாலத்தில் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகின்றமையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க வைத்தியசாலைகள் சிலவற்றில், எந்தவொரு நோய்க்கும் சாதாரண வலிநிவாரணி குளிசைகளே வழங்கப்படுகின்றன.

இலங்கையை பொறுத்தவரையில், 30 இலட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 10 இலட்சம் பேர் தடுக்கக்கூடிய பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 10 ஆயிரம் பேர் இதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ள பட்டியலில் உள்ளனர் என்றும் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

பல வகையான தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் தினமும் 30 இலட்சம் பேர் மருந்துகளை உட்கொள்கின்றனர். மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக அவ்வாறானவர்கள் முறையாக மருந்துகளை உட்கொள்வதில்லை. நபரொருவருக்கு நாளொன்றுக்கு தேவையான குளிசைகளில் சரிபாதியை மட்டுமே விநியோகிக்கக்கூடியதாக உள்ளது. அந்தளவுக்கு நாட்டின் மருத்துவத்துறை உக்கிரமான வீழ்ச்சியை கண்டுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், 10 ஆயிரம் வல்லுநர்கள் நாட்டைவிட்டு ​வெளியேறிவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோய்களால் பீடிக்கப்படுவதில்  இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமாயின், நோயெதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கவேண்டும். அதற்கு போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் அவையெல்லாம் சாத்தியப்படாது.

என்றாலும் தொற்றா நோய்களில் பீடித்துக்கொள்ளாமல் தற்பாதுகாத்துக்கொள்ளவேண்டும். தொற்று நோய்கள் குறித்து அவதானமாகவே இருக்க வேண்டும். (06.12.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X