2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிறைவேற்றுத் துறையின் தலையிலேயே குட்டிய நீதித்துறை

Editorial   / 2023 மார்ச் 07 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்றுத் துறையின் தலையிலேயே குட்டிய நீதித்துறை

பெப்ரவரி 23ஆம் திகதி, பாராளுமன்றத்துக்கு வருகைதந்து. உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை; நடத்துவதற்கு தேர்தல் ஒன்றில்லை” எனக் கூறியதையடுத்து கொதித்தெழுந்த ஐக்கிய மக்கள் சக்தியினர், “ஜனநாயக உரிமையை தா”,“தேர்தலை நடத்து” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எம்.பிக்கள், சபையின் நடுவே இறங்கி, செங்கோலுக்கு அருகில் செல்லமுயல்களில், தன்னுடைய ஆசனத்தில் இருந்து எழுந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.

ஆர்ப்பாட்டம், அக்கிராசனத்தை மறைத்து முன்னெடுக்கப்பட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜனாதிபதியின் இந்த உரைக்குப் பின்னர், சமூக வலைத்தளங்களிலும் பொது வெளிகளும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, கேலியும் கிண்டல்களும் உச்சம் தொட்டன.  அந்தளவுக்கு ஒவ்வொரு விடயத்தையும் ‘புட்டுப்புட்டு’ வைத்தும் கேலி செய்தனர்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது முதல் மூன்று தெரிவுகளாகும் என்று, பொதுவெளியில் உரையாற்றும் போது ஜனாதிபதி கூறிவருகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. எனினும், ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக தேர்தலை நடத்தவேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இதில், நிறைவேற்றதிகாரம் தலையிடக்கூடாது; தலையிடவும் முடியாது.

நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படக்கூடியதாக செயற்படுவது, ஜனநாயகத்தை ஆபத்துக்கு உள்ளாக்கி விடும் என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில், ‘52 நாள் ஆட்சி’ நிறைவேற்று, நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகிய மூன்று தூண்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டை தோற்றுவித்திருந்தது. இறுதியில் நீதித்துறையின் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டிய நிலைமை, ஏனைய இரு தரப்புகளுக்கும் ஏற்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதியில்லை என்ற சாக்குப்போக்கை கூறிவந்த ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அதன் பங்காளிகளின் தலையில் ஓங்கி ஒரு ‘குட்டு’ப் போட்டதைப் போல, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, யாரும் தடுத்துவைத்திருக்க முடியாதென உயர்நீதிமன்றத்தால் மார்ச் 3ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, ஜனநாயகத்துக்கு கிடைத்த தீர்ப்பாகுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக, உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் பிரகாரம், மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தவேண்டும். ஆக, அதற்கு இன்னும் இரண்டுவார காலமே இருக்கிறது. அதற்குள் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதே சால சிறந்தது. இல்லையேல், மூன்று தூண்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்திவிடும் என்பதே எமது அவதானிப்பாகும்.  06.03.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X