2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராணுவப் பாடசாலைகளை மூடியது துருக்கி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் இராணுவத்தினரால், அந்நாட்டு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராகக் கடந்த மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முயற்சிக்கான எதிரொலியாக, நாட்டின் இராணுவப் பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதாக, ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் அறிவித்துள்ளார்.

இராணுவப் புரட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக முடிவுற்றுள்ள போதிலும், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி ஏர்டோவான் போராடி வருகிறார். குறிப்பாக, புரட்சியைத் தொடர்ந்து அவர் எடுத்துவரும் நடவடிக்கைகள், உள்;ரிலும் வெளிநாட்டிலும் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளன.

எனினும், தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்துவரும் ஏர்டோவான், இராணுவத்தினரைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், இராணுவப் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். தவிர, இராணுவப் படைகளை, பாதுகாப்பு அமைச்சரின் கட்டளைகளுக்குக் கீழ் கொண்டுவந்துள்ளார்.

இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான தேசிய புலனாய்வு முகவராண்மை, பொதுப் பணியாளர்களின் பிரதானி ஆகியோர், பாதுகாப்பு அமைச்சருக்குக் கீழானவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். தற்போது, அவர்கள் பிரதமர் அலுவலகத்துக்குக் கீழேயே காணப்படுகின்றனர்.

அவர்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதன் மூலம், தனது மேற்பார்வையில் கீழ் அவர்கள் வருவார்களென அவர் எதிர்பார்க்கிறார். எனினும் இதற்காக, அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

ஏற்கெனவே, அரசியலமைப்பைத் திருத்தி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்த முயலும் ஏர்டோவான், இந்த மாற்றங்கள் மூலம், அதை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

குறித்த புரட்சி முயற்சியைத் தொடர்ந்து, இராணுவத்தைச் சேர்ந்த 1,700 பேர், இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில், நாட்டின் அட்மிரல்களிலும் ஜெனரல்களிலும் 40 சதவீதமானோர் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, இந்தப் புரட்சியின் பின்னால், அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியத் தலைவரான பெதுல்லா குலன் என்பவரே காணப்படுவதாக, துருக்கி தெரிவித்து வந்த போதிலும், தற்போது அதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புரட்சியில், பெதுல்லா குலன், வெறுமனே ஒரு கருவி எனவும், அதன் பின்னால் சூத்திரதாரி இருப்பதாக, ஜனாதிபதி ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஏர்டோவானின் முன்னைய பேச்சுகளில், சூத்திரதாரி என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். வழக்கமாக, மேற்கத்தேய நாடுகளைச் சுட்டிக்காட்டவே - குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவை - அவர் அப்பதத்தைப் பயன்படுத்துவது வழக்கமாகும். எனவே, இந்தப் புரட்சியின் பின்னால் அமெரிக்கா காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாகவே கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X