2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இஸ்‌ரேல், பலஸ்தீனம் செல்கிறார் ட்ரம்ப்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 21 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப், தனது விஜயத்தின் ஓர் அங்கமாக, இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும், இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பல தசாப்தங்கள் நீளும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அந்த எதிர்பார்ப்புகளுடன் செல்கிறார்.

இன்று பிற்பகல், இஸ்‌ரேலுக்குச் செல்லவுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இன்று இரவு, இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கவுள்ளார். அவரது இந்தச் சந்திப்பு, ஜெருசலேத்தில் இடம்பெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, மேற்குக் கரைக்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸைச் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, கடந்த வெள்ளிக்கிழமை, சவூதி அரேபியாவுக்குச் சென்ற ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, அங்கு உச்சபட்ச வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக, சவூதி அரேபியாவுக்கு, 110 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான ஆயுத விற்பனையில் ஈடுபடுவதற்கு இணக்கம் காணப்பட்டது. இது, யேமனில் பொறுப்பற்ற முறையில் தாக்குதல்களை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற சவூதி அரேபியாவுடன், ஐ.அமெரிக்கா மேற்கொள்ளும், உயர்ந்த பெறுமதியுடைய ஆயுத ஒப்பந்தமாகும்.

தனது நாட்டில், கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில் மேற்கொள்ளப்படும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த விஜயத்தில் அவர், வத்திக்கான், பெல்ஜியம், இத்தாலி ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .