2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘எனக்கெதிரான விசாரணையை இடைநிறுத்தக் கோருவேன்’

Shanmugan Murugavel   / 2017 மே 21 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் மாபெரும் இறைச்சி வணிக நிறுவனமொன்றின் தலைவரான ஜோஸ்லி பட்டிஸ்டா, கடந்த மார்ச்சில் மேற்கொண்ட கலந்துரையாடலின் ஒலிப்பதிவானது, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மாற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிக்கும் வரை, தனக்கெதிரான விசாரணையை இடைநிறுத்துமாறு நீதிமன்றத்தை கோரவுள்ளதாக, பிரேஸில் ஜனாதிபதி மிஷெல் தெமர், நேற்று  (20), தெரிவித்துள்ளார்.   

ஜனாதிபதி மாளிகையில் ஆற்றிய உரையொன்றிலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி தெமர், தான் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யமாட்டார் எனவும், ஜனாதிபதியாகத் தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.   

எவ்வாறெனினும், குறித்த ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையைக் கண்டறியுமாறு, நீதிமன்றத்தில், உத்தியோகபூர்வமாக, ஜனாதிபதி தெமர் விண்ணப்பத்தை முன்வைத்த பின்னர், ஜனாதிபதி தெமருக்கெதிரான விசாரணையைத் தொடருமாறு, சட்டமா அதிபர், நீதிபதிகளிடம் கோரியுள்ளார்.   

தனது தண்டனையைக் குறைப்பதற்காக, உண்மையைக் கூறும் மன்றாட்டப் பேரச் சாட்சியமளிப்பாக, கடந்த வாரம் பட்டிஸ்டா வழங்கிய, தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலந்துரையாடலின் ஒலிப்பதிவானது, மாற்றியமைக்கப்பட்ட தன்மைகளைக் கொண்டிருப்பதாக, சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன,   

இந்நிலையில், ஒலிப்பதிவானது முழுமையாகக் கையளிக்கப்பட்டதாகவும், மாற்றப்படவில்லையெனவும், பட்டிஸ்டாவின் நிறுவனம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மாபெரும் ஊழல்களில் ஒன்றில், சாட்சியாக வரக்கூடிய ஒருவருக்குப் பணம் கொடுத்து, அவரை அமைதியாக்குவதற்கு, ஜனாதிபதி தெமர் ஆசீர்வாதம் வழங்கினார் என்றே பட்டிஸ்டாவின் சாட்சியத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X