2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடாபியின் மகன் விடுவிக்கப்பட்டார்

Editorial   / 2017 ஜூன் 11 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் முன்னாள் தலைவரும், பதவியிலிருந்து அகற்றப்பட்டுக் கொல்லப்பட்டவருமான முஹம்மர் கடாபியின் இரண்டாவது மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, பொதுமன்னிப்பொன்றின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

தனக்கு அடுத்து, பதவிக்கு வருதற்கான, முஹம்மர் கடாபியின் தெரிவான சைஃப் அல்-இஸ்லாம், லிபியாவின் ஸின்டான் நகரத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக, அபு பக்கர் அல்-சித்திக் படைப்பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  

இந்நிலையில், சைஃப் அல்-இஸ்லாம், நேற்று முன்தினம் (09) விடுவிக்கப்பட்டதாக, அபு பக்கர் அல்-சித்திக் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், சைஃப் அல்-இஸ்லம், பொதுமக்களுக்குக் காண்பிக்கப்படவில்லை.   

இடைக்கால அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே, சைஃப் அல்-இஸ்லாமை விடுவித்ததாக, அபு பக்கர் அல்-சித்திக் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. லிபியாவின் கிழக்கைத் தளமாகக் கொண்ட குறித்த அரசாங்கம், சைஃப் அல்-இஸ்லாமுக்கு ஏற்கெனவே பொதுமன்னிப்பு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

எவ்வாறெனினும், லிபியத் தலைநகரான திரிபோலியிலுள்ள நீதிமன்றமொன்று, சைஃப் அல்-இஸ்லாம் சமுகமளிக்காமலேயே, அவருக்கு, மரண தண்டனைத் தீர்ப்பு அளித்திருந்தது. திரிபோலி அமைந்துள்ள லிபியாவின் மேற்கு, கிழக்கைத் தளமாகக் கொண்ட அரசாங்கத்துக்கெதிரான, ஐக்கிய நாடுகளினால் ஆதரவளிக்கப்படும் தேசிய இணக்க அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.   

நைஜருக்குச் செல்ல முற்பட்டபோது, பாலைவனமொன்றில், 2011ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, பின்னர், சில விரல்கள் இல்லாமல் தோன்றியிருந்தார். கடாபி அரசாங்கத்தின் பிரதிநிதியாக, மேற்குலகில், சைஃப் அல்-இஸ்லாம் அடிக்கடி தோன்றியிருந்தார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமர்சனங்களை எதிர்நோக்குகின்ற சைஃப் அல்-இஸ்லாம் கடாபிக்கு, லிபியாவில் சிறிய ஆதரவு காணப்படுகின்ற நிலையில், அரசியலுக்குள் மீண்டும் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக, தனது தந்தையால் மேற்கொள்ளப்பட்ட தோல்வியில் முடிவடைந்த முயற்சிகளில், மனிதத்துக்கெதிரான குற்றங்களைப் புரிந்தமைக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால், சைஃப் அல்-இஸ்லாம் வேண்டப்படுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .