2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'கிழக்கு அலெப்போ வெளியேற்றத்தை ஈரானே குழப்புகிறது'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் அலெப்போ நகரத்தில், போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட கிழக்கு அலெப்போவின் பெரும்பகுதி, சிரிய அரசாங்கப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு எஞ்சியிருக்கும் மக்களையும் போராளிகளையும் வெளியேற்றும் நடவடிக்கையை, ஈரானே குழப்புகிறது என, எதிரணிப் போராளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிழக்கு அலெப்போவில், போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பகுதிகளில் ஏறத்தாழ 99 சதவீதத்தை, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் படைகள் கைப்பற்றியுள்ளவெனக் கருதப்படுகிறது.

எஞ்சியுள்ள பகுதிகளில் இப்போது சுமார் 30,000 பொதுமக்கள் காணப்படுவதோடு, போராளிகளும் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றனர் எனக் கருதப்படுகிறது. இவர்களை வெளியேற்றுவதற்கான இணக்கம், கடந்த வியாழக்கிழமை எட்டப்பட்டு, வெளியேற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் மறுநாள் வெள்ளிக்கிழமை, இந்த இணக்கம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, அலெப்போவிலிருந்து வெளியேறும் பாதையையும், ஆர்ப்பாட்டம் செய்த ஒரு பிரிவினர் மூடியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, புதிய இணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கான பேரம்பேசல்கள், போராளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்றன. ஆனால், வியாழக்கிழமை இடம்பெற்ற இணக்கத்தை, ஈரானே குழப்பியதாக, எதிரணிப் போராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தப் பேரம்பேசலில் பங்குபற்றும் போராளிக் குழுக்களில் ஒன்றான அஹ்ரர் அல் ஷாம் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவரான முனிர் அல் சாயலின் தகவலின்படி, போராளிக் குழுக்களால் முற்றுகையிடப்பட்டுள்ள ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களின் முற்றுகை தளர்த்தப்பட்டாலேயே, கிழக்கு அலெப்போவிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட முடியுமென ஈரான் தெரிவித்துள்ளது. அந்தக் கிராமங்களில், சுமார் 20,000 பேர் காணப்படுகின்றனர் எனக் கருதப்படுவதோடு, அவர்களில் சுமார் 4,500 பேர், அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகளாவர்.

"ஈரானும் அதன் பிரிவினைவாதக் குழுக்களும், முற்றுகைக்கு உள்ளாகியுள்ள அலெப்போவில் எமது மக்கள் தொடர்பான மனிதாபிமான நிலைமையைப் பயன்படுத்தி, அல்-பௌவா, கெப்றயா ஆகிய பகுதிகளிலுள்ள தமது குழுக்கள் வெளியேறும் வரை, [கிழக்கு அலெப்போவிலிருந்து] எமது மக்கள் வெளியேறுவதைத் தடுக்கின்றன" என, முனிர் அல் சாயல் தெரிவித்தார்.
ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் போராளிக் குழுக்களான லெபனானின் ஹிஸ்புல்லாவும் ஈராக்கைச் சேர்ந்த ஏனைய ஷியா முஸ்லிம் ஆயுதக் குழுக்களுமே, கிழக்கு அலெப்போவிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்த குழுக்கள் என, சாயல் குற்றஞ்சாட்டுகிறார்.

கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேறிய மக்கள், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் திரும்பி வருவதையும்; கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் திரும்புவதையும்; சோதனைச் சாவடிக்கு அருகில் வைத்துக் கொள்ளையடிக்கப்படுவதையும் காட்டும் காணொளிகளும் ஊடக அறிக்கைகளும், கிழக்கு அலெப்போவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. ஆனால், மக்களுக்காக எதையும் செய்யத் தயராக இருப்பதாக, சாயல் தெரிவிக்கிறார்.
"பிரிவினைவாத ஆயுததாரிகளே பொறுப்புக் கூற வேண்டியவர்கள். ஆனால், அலெப்போவிலுள்ள எங்களது மக்களின் பாதுகாப்பே எமது முன்னுரிமை எனவும் அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான அத்தனை வழிகளுக்கும் தயராக இருக்கிறோம் எனவும் நாம் எச்சரிக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு அலெப்போவில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தாங்கள் வெளியேற அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில், வீதிகளில் காணப்படும் மக்கள், கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .