2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தேவையேற்படின் வெளியேறுவேன்’; ‘முடிக்காமல் வெளியேறேன்’

Editorial   / 2017 மே 30 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தல், ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பழைமைவாதக் கட்சியின் தலைவரும் பிரதமருமான தெரேசா மே, தொழிலாளர் கட்சியின் ஜெரெமி கோர்பைன் ஆகியோர், தொலைக்காட்சியில் தோன்றி, தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கேள்விகளைக் கொண்டு, இருவரிடமும் தனித்தனியாகக் கேள்விகள் கேட்கப்பட்டு, இந்த நிகழ்ச்சி, நேற்று  ஒலிபரப்பாகியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கான “பிரெக்சிற்” வாக்கெடுப்பு வெற்றிபெற்றுள்ள நிலையில், வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் எந்தக் கட்சி பங்குபெறும் என்பதே, தற்போதைய கேள்வியாக அமைந்துள்ளது.

இதில், எவ்வாறான இணக்கப்பாடு எட்டப்படுவதை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்ட போது பதிலளித்த பிரதமர் மே, “சரியான ஒப்பந்தத்தைப் பேரம்பேசுவதற்கு நாமிருப்போம். ஆனால், நான் சொன்னது என்னவென்றால், மோசமான ஒப்பந்தத்தை விட, ஒப்பந்தமே இல்லாதிருப்பது சிறந்தது. [ஒப்பந்தப் பேச்சுகளிலிருந்து] வெளியேறுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், மே, பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறுவதற்கான தனது துணிவை வெளிப்படுத்தியிருந்தார். ஏனைய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதைத் தடுப்பதற்கு, பிரித்தானியாவை, அவ்வமைப்புத் தண்டிக்கக்கூடும் என்றும், மே, முன்னர் தெரிவித்திருந்தார்.

இதே விடயத்தில், மிதவாதப் போக்கை, கோர்பைன் வெளிப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையில் ஒப்பந்தமொன்று பெறப்பட முடியாத நிலை ஏற்பட்டால், என்ன செய்வார் என அவரிடம் கேட்டபோது, “ஒப்பந்தமொன்று அங்கு காணப்படும். ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்படுவதை, நாங்கள் உறுதி செய்வோம்” என்று பதிலளித்தார்.

இந்தத் தேர்தலில், பிரதமர் மே தலைமையிலான பழைமைவாதக் கட்சிக்கே வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அண்மைய நாட்களாக, அதன் ஆதரவு, குறைவடைந்து வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், முதியவர்களுக்கான பராமரிப்புக்காக, அவர்களை அதிக பணம் செலவளிக்கச் செய்யும் திட்டம், பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .