2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகள்:இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

இலங்கை கல்வி அமைச்சினால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையேயான தேசிய மட்டத்திலான  விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் பதினொரு போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஏற்கெனவே முதல் சுற்றுப் போட்டிகள் 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.

இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் ஆண்கள் பெண்களுக்கான பதினொரு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள், பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் குருநாகல் மாளிகபிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் 15, 17, 19 வயதுப் பிரிவினர்களுக்கு இடையே நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 1035 வீரர்களும் பெண்கள் பிரிவில் 1035 வீராங்கனைகளுமாக மொத்தம் 2070 பேர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

ஆண்கள், பெண்களுக்கான ஹொக்கி விளையாட்டுப் போட்டிகள் மாத்தளை  பேனாட் அலுவிகார விளையாட்டரங்கு, எட்வேட் ஹொக்கி விளையாட்டரங்கிலும் இடம்பெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 300 வீரர்களும் பெண்கள் பிரிவில் 300 வீராங்கனைகளுமாக சுமார் 600 பேர் வரை கலந்து கொள்ளவுள்ளார்கள்.

ஆண்கள் பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் வாதுவ ஸ்ரீ சுமங்கலா ஆண்கள் வித்தியாலயம் மகாஜனா விளையாட்டரங்கு, வாதுவ நகரசபை மைதானம், பாணந்துறை வாதுவ மத்திய மகா வித்தியாலய விளையாட்டரங்கிலும் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 240 வீரர்களும் பெண்கள் பிரிவில் 240 வீராங்கனைகளும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

ஆண்களுக்கான மல்யுத்தம் நீர்கொழும்பு மரிஸ்ரெலா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் 220 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
    
ஆண்கள் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 250 வீரர்களும் பெண்கள் பிரிவில் 250 வீராங்கனைகளுமாக சுமார் 500 பேர் கலந்து கொள்ளவுள்ளார்கள் . இந்தப் போட்டியிலும் வடமாகாணப் பாடசாலை அணிகள் எவையும் கலந்து கொள்ளவில்லையென்பதும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

ஆண்கள், பெண்களுக்கான கபடிப் போட்டிகள் நீர்கொழும்பு மரிஸ்ரெலா கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் ஆண்கள் பிரிவில் இருந்து 288 வீரர்களும் பெண்கள் பிரிவில் இருந்து 288 வீராங்கனைகளுமாக 576 பேர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
 
ஆண்கள் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் கொழும்பில் உள்ள சாந்தபெனடிக் வித்தியாலய மைதானம் மற்றும் சாந்தஜோசெப் பெண்கள் வித்தியாலயம் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர்மட வித்தியாலய மைதானங்களில் இடம்பெறவுள்ளது. ஆண் வீரர்கள் 300 பேரும் பெண் வீராங்கனைகள் 300 பேரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
    
ஆண்கள் பெண்களுக்கான நீச்சல் போட்டிகள் கொழும்பு நாரன்பிட்டிய பொலிஸ் நீச்சல் தடாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 200 பேரும் பெண்கள் பிரிவில் 200 பேருமாக 400 வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளார்கள். வடமாகாணத்தில் இருந்து முதல் தடவையாக நீச்சல் போட்டியில்  ஆண்களுக்கான 17 19 வயதுப் பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பூம்புகார் கண்ணகி வித்தியாலயம் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆண்கள், பெண்களுக்கான கரம் போட்டிகள் நுகேகொட சாந்தஜோன் வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஆண்கள் பிரிவில் 200 வீரர்களும் பெண்கள் பிரிவில் 200 வீரங்கனைகளுமாக 400 வீர வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

ஆண்கள் பெண்களுக்கான டெனிஸ் போட்டிகள் கொழும்பு டெனிஸ் சங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன. ஆண்கள் பிரிவில் 120 வீரர்களும் பெண்கள் பிரிவில் 120 வீராங்கனைகளுமாக 240 பேர் கலந்து கொள்ளவுள்ளார்கள். வடமாகாணத்தில் இருந்து இந்தப் போட்டிகளில் எந்தப் பாடசாலையும் கலந்து கொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆண்களுக்கான கட்டழகன் போட்டி மற்றும் ஆண்கள் பெண்களுக்கான பாரம் தூக்கும் போட்டிகள் கொழும்பு 11 இல் அமைந்துள்ள ஆனந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளன. கட்டழகன் போட்டியில் 50 வீரர்களும் பாரம் தூக்கும் போட்டியில் ஆண்கள் பிரிவில் 100 வீரர்களும் பெண்கள் பிரிவில் 100 வீராங்கனைகளுமாக 250 வீர வீராங்கனைகள் இரு போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .