2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'யாழ். இசை விழா 2011' இல் மேடையேற்றிய தமிழ் கலைகள் பற்றிய அறிமுகம்...

Kogilavani   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிராமத்தின் மண் வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது  கூத்துக் கலை. கலைகள் எனும்போது அவை சமூகத்திற்கு செய்தி சொல்பவையாக அமைவதுண்டு. அதேபோல கூத்துக்களும் பல்வேறு செய்திகளை தற்போதைய சமூகத்திற்கு ஏற்றவகையில் கூறவே செய்கின்றன.

முற்காலத்தில்  வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பை போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாக தோற்றம் பெற்றன. அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடிய இந்த நடனம் இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றது.

நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்த கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கூத்துக்களின் கதையம்சமும் அந்தக் கூத்துக்களினூடாக கூறப்படும் செய்தியும் தற்போதைய சமூகத்தினரை ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.

'யாழ். இசை விழா 2011' இல் மூவின மக்களினது பாரம்பரிய கலைகள் மேடையேற்றப்பட்டாலும் அதில் அதிகமாக தமிழர்களின்  பாரம்பரிய கலைகளே மேடையேற்றப்பட்டிருந்தன. இக்கலைகளை வெறுமனே அரங்கிற்கு முன்பாக அமர்ந்து பார்த்தால் மட்டும் புரிந்துவிடப்போவதில்லை. அந்தக் கூத்துக்கள் பற்றிய அறிவு நிச்சயம் தேவைப்படுகின்றது.

யாழ். இசை விழா 2011 இல் மேடையேற்றப்பட்ட தமிழர்களின் கலைகள் பற்றிய அறிமுகத்தை வழங்க இந்தக் கட்டுரை முயல்கிறது.

கோவலன் கூத்து

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் இக்கூத்து ஆடப்படுகின்றது. 150 வருட காலம் பழமை வாய்ந்த இக் கூத்து, சிலப்பதிகாரத்தை கதைக்கருவாக கொண்டுள்ளது.

வட்டக்களரியில்,  ஆடப்படும் இக்கூத்தின் ஆட்டவகைகள் மிகவும் இறுக்கமான தன்மை கொண்டன. இதனை 'முல்லை மோடி' ஆட்டம் என்றும் அழைக்கின்றனர். இதில் குறிஞ்சிப் பகுதியில் வரும் குறத்திய நடனம், சகுண காட்சிகளில் வரும் செம்மான், செம்மாத்தியின் ஆட்டம், பாண்டியன் ஆட்டம் என பல ஆட்டங்கள் காணப்படுகின்றன.

இக் கூத்திற்குரிய ஆடையமைப்பானது மிகவும் எடை நிறைந்ததாக காணப்படுகின்றது.

இக் கூத்தினை ஆன்மீகம் சார்ந்த விடயமாக அவர்கள் உணர்வதால் 40 நாட்கள் கடும் விரதம் இருந்து இதனை ஆடுகின்றார்கள். இக்கூத்தினை ஆடும் காலம் நெருங்கும் வேளை, கூத்தாடுபவர்களின் கனவுகளில் இறைவன் காட்சி கொடுப்பது, பாம்பின் மீது விழுவதுபோன்ற கனவுகள் ஏற்படுவதாக இக்கூத்தினை பயிற்றுவிக்கும் அண்ணாவியர்- தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இக் கூத்தில் பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடிக்கின்றனர்.

மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இக் கூத்து காலை 6 மணியளவில் நிறைவு பெறுகின்றது.

இக்கூத்தில் இன்னும் நவீன முயற்சிகள் உள்வாங்கப்படவில்லை. இக் கூத்தின் பழமைத் தன்மை இல்லாது போய்விடும் என்பதற்காக அவர்கள் இதில் புது முயற்சிகளை உள்வாங்கவில்லையென்று தெரிவித்தனர்.  

உழவர் நடனம்

உழவுத்தொழிலை மையமாகக் கொண்ட இந்நடனம் முற்று முழுதாக கிராமிய மண்வாசனையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

உழவுத்தொழிலின் ஆரம்பம் முதல் இறுதி வரையான அம்சங்கள் இதில் சித்திரிக்கப்படுகின்றன. இதில் நடன அமைப்பு, உடையமைப்பு, இசை என்பன முற்று முழுதாக கிராமிய மண்வாசனையை பிரதிபலிக்கின்றது.

முருகன் நடனம்

பளை - புலோப்பளை கிழக்கின் பிரதான கலையம்சமாக விளங்குகின்றது முருகன் நடனம். வில்லிசையுடன் ஆடப்படும் ஒரு நடனம் இந்த முருகன் திரு நடனம். இதனை உருவாக்கிய பெருமை வள்ளிபுரம் செல்லத்துரையைதான் சேரவேண்டும். 45 வருடங்களுக்கு முன்னர் இவர் இந்த திரு நடனத்தை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கோயில் திருவிழாவின்போது இந்த திருநடனமும் இடம்பெறுகிறது. வில்லிசையுடன் ஒருசாரர் பாடிக்கொண்டிருக்க, அந்த வில்லிசையில் கூறப்படும் பெயர்களுக்கு ஏற்ப தெய்வங்கள் வந்து திருநடனம் புரியும்படி அமையப்பெற்றுள்ளது இந்த திருநடன அளிக்கை.


இதில் காவடி, கரகம், கும்மி போன்ற நடனங்கள் இடம்பெறுகின்றன. இதில் ஒவ்வொரு தெய்வங்களின் பெயர்களையும் கூற அதற்கேற்ற விதத்தில் தெய்வ வேடமிட்டு ஒவ்வொருவராக ஆடிவருவார்கள். இதன்போது பயன்படுத்தப்படும் இசை உண்மையில் பக்தி நிலைக்கு பார்வையாளர்களை இழுத்துச் செல்வதை மறுத்துவிடமுடியாது.

இந்த திருநடனத்திற்கு முக்கியமாக அமைவது வில். இதை தவிர இங்கு கடம், வயலின், உடுக்கு, தாளம் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்குழுவில் மொத்தமாக 7 பேர் அங்கம் வகிப்பர். மூவர் பிரதான குரல் கொடுக்க ஏனைய நால்வரும் இசைக் கருவிகளை வாசிப்பர்.

மகுடிக் கூத்து

முள்ளியவளை பிரதேசத்தின் கலையம்சமாக விளங்குகின்றது இந்த மகுடிக் கூத்து. இக்கூத்திற்கென ஓர் ஐதீகம் உண்டு. முற்காலத்தில் ஆலயமொன்றில் திருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, வேற்று மதத்தவர்கள் கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டு இவ்வூரை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் வியாபார நோக்கம் கருதி வந்ததால் அவ்விடத்திலே கொட்டகைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


அவ்வேளையில் ஆலயத் திருவிழாவிற்கான பொருட்களை வாங்குவதற்காக குருக்களும் இன்னும் சிலரும் இவர்களது கடைகளை நோக்கி சென்றுள்ளனர். கடையில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தும்போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வியாபாரி 'அவசரம் இல்லை பணத்தை பிறகு எடுத்துக் கொள்ளலாம்' என்று கூற, குருக்களும் அந்த குழுவினரும் ஆலயத்தை நோக்கி சென்றுவிட்டனர்.

இரு தினங்கள் கழித்து குறித்த வியாபாரி பணத்தை பெற்றுக்கொள்வதற்காக கருவாட்டுடன் ஆலயத்திற்குள் நுழைந்து, குருக்கள் பூஜை செய்து கொண்டிருக்கும் வேளையில் சத்தமிட்டு பணத்தை கேட்டுள்ளார்.

வியாபாரி கருவாட்டுடன் ஆலயத்தில் நுழைந்ததும் இல்லாமல், தனது சிவ பூஜையையும் கெடுத்துவிட்டான் என்ற கோபத்தில் ஆலயத்தை விட்டு வெளியேறு என்று குருக்கள் பலமாக கத்தியுள்ளார்.

கோபம் வந்த வியாபாரி, "என்னையா ஆலயத்தை விட்டு வெளியேறச் சொல்கிறாய்? இரு உன்னை துர்சக்திகளைக் கொண்டு அழிக்கின்றேன் " என்று கூறி , தனது பெரிய தந்தையை நோக்கி சென்றுள்ளார்.

விடயமறிந்த அந்த வியாபாரியின் பெரிய தந்தை, துர்சக்தியை ஆலயத்தை நோக்கி ஏவி விட்டாராம். ஆலயத்தை நோக்கிச் சென்ற துர்சக்தியும் அந்த வியாபாரியும் ஆலய முன்றலில் வைக்கப்பட்டிருந்த கும்பத்தை உடைக்க முற்பட்டபோது பிராமனருக்கு கோபம் வர, இறைவனை நினைத்து விபூதியை தூவி விட்டுள்ளார். உடனே அந்த வியாபாரியும் துர்சக்தியும் நிலத்தில் வீழ்ந்தனர். இதனை கேள்வியுற்று வந்த வியாபாரியின் பெரிய தந்தை, குருக்களிடம் தான் செய்தது பிழை  எனவும், மன்னித்து விட்டுவிடும்படியும் குருக்களின் காலில் வீழ்ந்து கதறி அழுதுள்ளார்.

பின்பு குருக்கள் இறைவனின் மகிமையை அந்த வியாபாரியின் பெரிய தந்தைக்கு எடுத்துக் கூறி, இனி தவறு செய்ய வேண்டாமென அறிவுறுத்தி மன்னித்து விடுகின்றார்.

இதுவே இந்தக் கூத்தின் பிரதான கதையாக விளங்குகின்றது.

இதில் குருக்கள், வியாபாரிகள் பிரதான பாத்திரமாக விளங்க, பல துணை பாத்திரங்கள் வருகின்றன. இக்கூத்தின் ஆரம்பமாக திருவிழா அமைவதால்- திருவிழாவின்போது ஆடப்படும் காவடி, கோலாட்டம் போன்ற ஆட்டங்கள் கூத்தின் ஆரம்பத்தில் ஆடப்படுகின்றன.

இதைத் தவிர அந்த வியாபாரிகள் வேற்று மதத்தினர் என்பதற்காக அவர்கள் தனியாக விளங்கும் வகையில் ஆடையமைப்பும், நடன அமைப்பும் காணப்படுகின்றது. இதற்குரிய உடையமைப்புகள் பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வானது வட்டக்களரியில் இரவு முழுதுமாக ஆடப்படும். இக்கூத்தினை இப்போது 7 ஆவது சந்ததியினர் தொடர்ந்துகொண்டு செல்கின்றனர்.

சிந்து நடைக் கூத்து

சிந்து நடை கூத்து - யாழ். நீர்வேலி வடக்கு பகுதி மக்களால் ஆடப்படும் கூத்தாக காணப்படுகின்றது. இக்கூத்தினை சிந்து நடை காத்தவராயன் கூத்து என்று அழைப்பர். இலங்கையில் மிகவும் பிரபலமாக பேசப்படும் கூத்துக்களில் இக்கூத்தானது முக்கிய இடம்பிடிக்கின்றது.

அவலச் சுவை மிகுந்த இக் கூத்தானது பார்வையாளர்களை வெகுவாக ஈர்தெடுக்கும் கூத்து என்பதில் சந்தேகமில்லை.

100 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கூத்தானது தனக்கென கதையம்சத்தை கொண்டுள்ளது. அதாவது மக்களுக்கு பல கொடுமைகளை புரிந்து வந்த வதுராசன் என்ற அரக்கனை முத்துமாரியம்மன் துவம்சம் செய்கிறார். இதன் பின் மக்கள் மகிழ்வுடன் வாழ்கின்றனர். இப்படியிருக்கையில் முத்துமாரியம்மனுக்கும் ஈஸ்வரனுக்கும் மகனாக பிறக்கின்றார் காத்தவராயன்.

காத்தவராயனுக்கு பல கட்டளைகளை வித்திக்கின்றார் முத்துமாரியம்மன். காத்தவராயன் அந்தக் கட்டளைகளை பல சவால்களை எதிர்கொண்டு நிறைவேற்றி முடிக்கின்றார்.

இதில் ஒரு சவாலாக ஆயிரம் பேரின் தங்கையான ஆரிய பூமாலையின் கணையாழியை எடுத்துக் கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார்.

கணையாழியை எடுப்பதற்காக ஆரிய பூமாலையின் அரண்மனை நோக்கி கிளி வடிவில் சென்று எடுக்க முயல்வதும், பின் ஆரிய பூமாலை கதை அறிந்து அவரை சிறைசெய்வதும், அதன் பின் நடக்கும் நிகழ்வுகளுமே இக் கூத்தின் கதைக் கருவாகும்.

முற்றுமுழுதாக துன்பியல் நிறைந்த பாத்திரமாக காத்தவராயன்  எனும் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. சிவன், அம்மன், காத்தவராயன், நாரதர், என 16 பாத்திரங்கள் இக்கூத்தில் இடம்பெறுகின்றன. இதில் சிந்து நடை ஆட்டமே பிரதானமாகக் காணப்படுகின்றது. இதனாலே இதனை 'சிந்துநடைக் கூத்து' என்று கூறுகின்றனர்.  வட்டக்களிரியில் இக்கூத்து இரவில் நடைபெறுகின்றது.

வசந்தன் வீரபத்திரர் கூத்து

வசந்தன் வீர பத்திரர் கூத்து- கட்டுவன் பிரதேச மக்களாலே மிகவும் சிறப்பாக ஆடப்பட்டு வருகின்றது. வீர பத்திரர் ஆலயத்தின் புகழை இக்கூத்து பாடுகின்றது. கட்டுவான் பிரதேசத்தில் 1862ஆம் ஆண்டு விசுவப் புலவர் சட்டம்பியால் வீரர்பத்திரர் ஆலயம் கட்டியெழுப்பபட்டது.


உழவுத்தொழிலை பிரதான விவசாயமாக செய்யும் மக்களுக்கு வீர பத்திரரின் அருட்கடாட்சம் சிறப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த வீரப்பத்திரர் வசந்தன் கூத்தை வீரர் பத்திரர் புகழ் பாடும் கூத்தாக இது வரை ஆடிவருகின்றனர்.

மழையில்லா காலங்களில் மழை பெய்யச் செய்யவும், நோய் நொடிகள் நீங்கி மக்கள் நிம்மதி வாழ்வு வாழவும் இக்கூத்து ஆடப்படுகின்றது. ஆரம்பத்தில் இக்கூத்து இக்கிராமத்திலே வெகு சிறப்பாக ஆடப்பட்டு வந்தது. நாளடைவில் இது ஏனைய பிரதேசங்களுக்கும் பரவ தொடங்கியது.

வட்டக்களரிக்கு வெளிப் பிரதேசத்தில் சுற்றிவர தீப் பந்தங்களை கொழுத்திவிட்டு மணற்தரையிலே இதனை ஆடுவார்கள். இதனால் இக்கூத்து 'புழுதிக் கூத்து' என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் 24 பாடல்கள் மொத்தமாக பாடப்படுகின்றன. அதற்கேற்ற விதத்தில்,  நின்ற  நிலையில் ஆடுதல், நிழல் மாறல், களரியை சுற்றியாடல், வட்டமாக ஆடுதல் என பல கோணங்களில் நின்று கைகளில் சிறு தடிகளை வைத்துக்கொண்டு கோலாட்ட சாயலில் இதனை ஆடுகின்றார்கள்.

இந்தக் கூத்தானது நெற் கதிர் அறுவடை முடிந்து மக்கள் ஓய்வாக இருக்கும் காலமான ஆவணி மாதத்தில் ஆலயத்தின் முன்றலில் ஆடப்படுகின்றது.

காமன் கூத்து

மலையகத்தில் ஆடப்படும் கூத்துக்களில் மிக முக்கியமான கூத்தாக காமன் கூத்து காணப்படுகின்றது. மலையகத்தில் பதுளை, நோர்வூட், டயகம, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, பொகவந்தலாவ, மஸ்கெலிய போன்ற பல பகுதிகளில் இக்கூத்தினை சிறப்பாக ஆடிவருகின்றார்கள். இக் கூத்தானது ரதி- மன்மதனது கதையை அடிப்படையாக கொண்டு ஆடப்படுகின்றது.

தக்கனது யாகத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக சிவ பெருமான் கடும் தவம் செய்கின்றார். சிவன் கடும் தவத்தில் ஆழ்ந்துவிட்டால் வாரிசென்ற ஒன்று இல்லாமல் போய்விடும் என்பதற்காக தேவர்கள் இணைந்து சிவனது தவத்தை கலைப்பதற்காக மன்மதனை அனுப்புகின்றனர்.

மன்மதன் தவத்தை கலைப்பதற்கு செல்ல ஆயத்தமாவதற்கு முன்பாக மன்மதனின் கனவுகளில் பல சகுனங்கள் தென்படுகின்றன. அதேபோல் ரதிக்கும் பல சகுனங்கள் ஏற்படுகின்றன. இதனால் மன்மதனை மனைவி ரதி போகவேண்டாமென்று தடுக்கின்றார். ஆனால் ரதியின் பேச்சை மீறி மன்மதன் பயணிக்கின்றார்.

சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருப்பதை அவதானித்த மன்மதன், அவரை நோக்கி மலர் அம்பு தொடுக்கின்றார். தவம் கலைந்துபோன  கோபத்தில்  சிவபெருமான் கண்ணை திறந்து பார்க்க, மன்மதன் அந்த இடத்திலே சாம்பராகிப் போகின்றார்.

இதை அறிந்த ரதி -சிவபெருமானின் கால்களில் வீழ்ந்து கதறுகிறார். மன்மதனை மன்னித்து விட்டுவிடும்படி மன்றாடுகிறார். ரதியின் கதறலை கேட்ட சிவபெருமான் ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும்படி வரம் கொடுத்து அவரை மீண்டும் உயித்தெழுப்புகின்றார்.

இக் கூத்தில் மொத்தமாக 64 வேடங்கள் போடப்படுகின்றன. இதற்கென பல ஆட்டவகைகள் காணப்படுகின்றன. தாளக்கட்டுகள், பாடல்வகைகள் என ஒவ்வொரு வேடத்திற்கும் வித்தியாசப்படுகின்றன.

இக்கூத்து காமன் முற்றத்தில் (வட்டக்களரி) இடம்பெறுகின்றது. இதனை காமன் மாஸ்டர் என்பவர் வழி நடத்துகின்றார். இக்கூத்தில் பெண்களது பாத்திரத்தை பெண்களே ஏற்று நடிக்கும் மரபு காணப்படுகின்றது. அதைவிட இக்கூத்தில் பரம்பரை வழி தாக்கம் மிகக் குறைவாக காணப்படுகின்றது.

இங்கு பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு நிறத்திலான ஆடைகள் வழங்கப்படுகின்றன.

 

பறைமேளக் கூத்து

கிராமிய தெய்வ வழிபாடுகளில் பறைமேளக் கூத்து முக்கிய இடம் வகிக்கின்றது. அதிலும் பெண் தெய்வ வழிபாடுகளிலே அதிகமாக இந்த பறைமேளக் கூத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வட்டமாக கூடி நின்று பறைமேளத்தை இசைப்பது பறைமேளக் கூத்து எனலாம். பறைமேளக் கூத்தானது அதிகமாக திருவிழாக் காலங்களில் பெண் தெய்வ ஆலயங்களில் பரவலாக ஆடப்படுகின்றது.



இறைவனை குளிர்ச்சியடைச் செய்வதற்காக பறைமேளம், சொர்னாலி, தம்பட்டம் ஆகிய இசைக்கருவிகளை ஒரே நேரத்தில் இசைக்கச் செய்கின்றனர். இந்த மூன்று கருவிகளும் ஒருங்கே முழக்கும் போது எழும் ஒலி உண்மையில் இறை உணர்வை ஏற்படுத்துகின்றது.

பறைமேளக் கூத்தில் மொத்தமாக 18 வகை தாளக்கட்டுகள் காணப்படுகின்றன. அந்த தாளக்கட்டுகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவர். வட்டமாக சுற்றி நின்று இசைப்பது, ஒருவருக்கொருவர் போட்டிக்காக இசைப்பது, இசைக்கேற்ப முகபாவனை செய்வதென பல அம்சங்கள் இதன்போது இடம்பெறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மிகவும் பிரசித்தமாக பறைமேளக் கூத்து இடம்பெறும் இடமாக களுதாவளை கிராமம் காணப்படுகின்றது. இங்கு பரசுராமன் என்ற குழுவினரே இந்த பறைமேளக் கூத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இதில் ஆண்களே பாத்திரமேற்கின்றனர். இவர்களுக்கான ஆடையமைப்பு ஏனைய கூத்துக்களிலும் பார்க்க வித்தியாசமானது.  சேலையை பாவாடை வடிவில் அணிந்து, மேலங்கி அணிந்து,தலைப்பாகை கட்டி, திருநீறு, சந்தனம், திலகம் நெற்றிக்கு அணிந்து பறையை இசைக்க ஆரம்பிக்கின்றனர்.

இக் கூத்தானது பல காரணங்களால் வழக்கொழிந்துக்கொண்டு போகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராவணேசன்

பேராசிரியர் வித்தியானந்தனால் உருவாக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட்டதே இராவணேசன் கூத்து. அதனை மீளுருவாக்கம் செய்தவர் பேராசிரியர் சி.மௌனகுரு. இவர் இந்த இராவணேசன் கூத்தை சமகாலத்திற்கு ஏற்றவாறு போரையும் அதனது இழப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளுருவாக்கம் செய்து வழங்கியுள்ளார். இராவணன் போருக்காக செல்வதும், மண்டோதரி அவரை தடுத்து போரின் கொடுமையையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் சொல்வதே இந் நாடகத்தின் முக்கிய அம்சமாகும்.

வடமோடி ஆட்டமும் அதற்காக பயன்படுத்தப்படும் கறப்பு ஆடைகளும் இக் கூத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. வடமோடிக் கூத்துக்குரிய தாளக்கட்டுடன் வடமோடிக் கூத்துக்குரிய ஆட்டவகைகள் இந்தக் கூத்தில் இடம்பெறுகின்றன. இராவணேசன், மண்டோதரி, இராமர், இலக்குவணன், அங்கதன், இந்திரஜித்தன் என பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.

பப்பிரவாகம் கூத்து

பப்பிரவாகம் -சுழிபுரம் மக்களால் ஆடப்படுகின்ற கூத்து. இந்தக் கூத்தானது கடந்த 20 வருடங்களின் பின் யாழ். இசை விழா 2011 இல் மேடையேற்றப்பட்டது. மகாபாரத்தின் ஒரு பகுதியை அடிப்படையாக கொண்டு இக் கூத்து உருவாக்கப்பட்டுள்ளது.  இக் கூத்தானது மகாபாரதத்தில் வரும் முக்கிய பாத்திரமான அர்ச்சுணனுக்கும் அவனது மகன் பபிரவானுக்கும் இடையில் இடம்பெறும் போர் பற்றியதாகும்.

ஆலய திருவிழாவின் போது இக் கூத்து இடம்பெறுகிறது. அண்ணாவியர் பாடலை இசைக்க அதற்கேற்ற வகையில், ஒவ்வொரு பாத்திரங்களும் நடனமாடி வருகின்றனர். அரசர்களுக்குரிய ஆடையே  இதில் பிரதானமாக அமைகின்றது.

 

கப்பல் பாட்டு

வடமராட்சியில் இந்த கப்பல் பாட்டு நாடகம் மிகவும் பிரபலமாக உள்ளது. வடமாரட்சி, நாகர்கோவிலிற்குட்பட்ட பிரதேசத்தில் இந்நாடகத்தை மேடையேற்றி வருகின்றார்கள். நாகதம்பிரானுடைய புகழை பாடும் வகையில் இந்நாடகம் அமைந்துள்ளது. இதற்குரிய கதையம்சமும் நாகதம்பிரானின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



சோழர் ஆட்சிக் காலத்தில் அந்நிய நாட்டின் படையெடுப்பு அதிகமாக காணப்பட்டது. இதன்போது இந்த பிரதேசத்தில் குடியிருந்த மக்களை பலவந்தமாக அந்நிய படையினர் கூலிகளாக கொண்டு செல்வதற்கு முயன்றுள்ளனர். இவர்களை கப்பலில் பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றபோது கப்பல் புறப்பட மறுத்துள்ளது. அந்நிய நாட்டு படையினர் பல வகையில் முயன்றபோதும் அந்தக் கப்பல் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

இவ்வாறு இருக்கையில், அந்தக் கூட்டத்தில் ஒருவரின் மீது நாகதம்பிரான் உரு ஏற்றம் கொண்டு, இந்தக் கப்பலில் உள்ளவர்களை வெளியேற்றினால்தான் இந்த கப்பல் போகும் என்று கூறியுள்ளார்.

பின்பு அந்நியப் படையினர் எல்லோரையும் கரையில் இறக்கிவிட்டு கப்பலை செலுத்த முயலும்போது மீண்டும் கப்பல் புறப்பட மறுக்கின்றது. மீண்டும் நாகதம்பிரான்,  'அந்த கப்பலில் சிறுகுழந்தையும் அதனது வளர்ப்புப் பிராணியான பூனையும் இருக்கிறது. அதனை இறக்கிவிட்டால் மட்டுமே இந்தக் கப்பல் புறப்படும்' என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். உடனே அந்த அந்நியப் படையினர் கப்பலிலிருந்த சிறுபிள்ளையையும், பூனைக் குட்டியையும் இறக்கிவிடுகின்றார்கள். பின்பு அவர்கள் கப்பலை செலுத்த  கப்பல் புறப்படுகிறது.

பேரதிர்ச்சியில் உறைந்துபோன அந்நிய நாட்டு படையினர்- நாகதம்பிரான் உரு ஏற்றம் கொண்டவரது கால்களில் வீழ்ந்து வணங்கி தாங்கள் செய்த பிழைகளை பொறுத்தருளுமாறு மன்றாடுகின்றனர்.

எனவே, வந்த துன்பத்திலிருந்து நாகதம்பிரான் தம்மைக் காத்தருளினார் என்று நாகதம்பிரானின் புகழ் பாடுவதாக இந்த நடனம்
 அமைந்துள்ளது.

அண்ணாவியர் பாடலை இசைக்க, அதற்கேற்றவிதத்தில் பாத்திரமேற்பவர்கள் ஆடுவார்கள். இதில் பாடல், கதை, நடிப்பு, நடனம் என நான்கும் ஒரே நேரத்தில் அரங்கேறும்.  

12 இற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இதன்போது வேசம் கட்டுகின்றனர். ஒவ்வொருவரது பாத்திரங்களுக்கு ஏற்ப உடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.  

களி கம்பாட்டம்

இஸ்லாமிய சமூகத்தின்  பிரதான ஆற்றுகை களி கம்பாட்டம். அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இக் களிகம்பாட்டம் சிறப்பாக ஆடப்பட்டு வருகின்றது. நடனம், இசை, பாடலென மூன்றும் ஒருங்கே இணைந்து இக் களிக்கம்பாட்டம் அளிக்கைச் செய்யப்படுகின்றது.

கோலாட்ட சாயலில் அமைந்த இந்த ஆட்டம், மேடையைச் சுற்றி ஆடப்படுகின்றது. இதில் 10இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொள்கின்றனர். தலைப்பாகை அணிந்து, அவர்களுக்கே உரிய பாரம்பரிய ஆடையை அணிந்து இதில் பங்குகொள்கின்றனர்.

மேடையின் நடுவில் கம்பம் அமைக்கப்பட்டு அதனைச் சுற்றிவர நடனத்தை இவர்கள் ஆடுவார்கள்.

இவ்வளவு பாரம்பரியங்கள் நிறைந்த பல கூத்துக்களை உள்ளடக்கி இடம்பெற்ற 'யாழ். இசைவிழா-2011' உண்மையிலேயே அனைவருக்கும் பார்க்கக் கிடைத்தமை ஒரு வரப்பிரசாதமே.

(Pix by: Kushan Pathiraja)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X