2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டாரிலிருந்து கட்டுநாயக்க திரும்பியோர் அந்தரிப்பு

Editorial   / 2017 ஜூன் 07 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரிலிருந்து இலங்கைக்குத் திரும்பியோர், தாம் கொண்டுவந்திருந்த கட்டார் றியாலை, இலங்கை ரூபாய்க்கோ அல்லது அமெரிக்க டொலருக்கோ மாற்றமுடியாமல் பெரும் சிரமப்பட்டனர்.  

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் மற்றும் அரச வங்கிகளில், அடுத்த கட்ட அறிவிப்பு விடுக்கப்படும் வரையிலும் கட்டார் றியால் பணப்பரிமாற்றம் செய்யப்படமாட்டாது என்று அந்த விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பை, மத்திய வங்கி விடுத்திருந்ததாகவும் கடமைநேர முகாமையாளர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் வந்தடைந்த பெரும் எண்ணிக்கையிலானோர் பெரும் சிரமம்பட்டனர். இதேவேளை, சிங்கப்பூர் வங்கிகளும் கட்டார் ரியாலை மாற்றுவதற்கு மறுத்துவிட்டன.  

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை, மத்தியக் கிழக்கில் உள்ள ஆறு நாடுகள் முறித்துக்கொண்டமையை அடுத்தே, இவ்வாறான நெருக்கடி நிலைமை தோன்றியது.  

விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற கடைகளிலும், கட்டார் றியால் பணப்பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.  

இவ்வாறான நெருக்கடி நிலைமை காரணமாக, கட்டாரிலிருந்து நாடு திரும்பிய பெருந்தொகையானோர், தேவையான பணத்தை மாற்றி, பொருட்களைக் கொள்வனவு செய்யமுடியாமையால், தங்களுடைய வீடுகளுக்குச் செல்லமுடியாத நிலைமையே ஏற்பட்டிருந்தது.  

எனினும், கட்டார் றியாலை, இலங்கை ரூபாய்க்கும் அமெரிக்க டொலருக்கும் மாற்றவேண்டாமென விடுத்திருந்ததாக கூறப்படும் செய்தியை, இலங்கை மத்திய வங்கி, நேற்று (06) முற்பகல் 11 மணியளவில் மறுத்துவிட்டது. 

இதனையடுத்தே, கட்டார் ரியால் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதுவரையிலும், விமான நிலையத்தில் காத்திருந்த, கட்டாரிலிருந்து நாடு திரும்பியோர், சுமார் 9 மணிநேரத்துக்கு பின்னர் வெளியேறியிருந்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .