2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடாளுமன்றில் தனித்துச்செற்படுவேன்: வி.இராதாகிருஷ்ணன் எம்.பி.

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தன்னுடன் எந்த விதமான தொடர்பையும் பேணாமல்  தன்னைத்தொடர்ந்து ஒதுக்கி வைக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதால் தனக்கு வாக்களித்த மக்களுக்குச்  சேவையாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் தனித்துச்செயற்படப்போவதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியுடன் இணையப்போவதாக செய்தி வெளியாகியிருந்தது.  அச் செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் மறுப்புத் தெரிவித்திருந்தார் . இவ்வாறானதொரு சூழ்நிலையில், தற்போதைய அவரின் அரசியல் செயற்பாடுகள் குறித்து கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :

"நான் இ.தொ.கா.விலிருந்து மலையக மக்கள் முன்னணியுடன் இணையவுள்ளதாக வெளியான தகவல் தான் இ.தொ.கா.வுக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடென்று சிலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அவ்வாறில்லை. பொதுத்தேர்தல் முடிந்து குறுகிய காலத்துக்குள்ளேயே நான் இ.தொ.கா.விலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டேன்.

ஜனாதிபதி அமைச்சுப்பதவி வழங்கிய போது நான் எனக்கும் பிரதி அமைச்சுப்பதவி ஒன்றைப்பெற்றுத்தருமாறு இ.தொ.கா.வின் உயர்பீடத்திடம் கேட்டிருந்தேன். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுமில்லை. எனக்கு பதிலளிக்கவுமில்லை. ஆனால், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனக்கு நெருக்கமான ஒருவரிடம் எனக்கு எவ்விதத்திலும் பிரதி அமைச்சுப்பதவி ஒன்றைப்பெற்றுத்தர மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

நான் அவரிடம் பிரதி அமைச்சுப்பதவி கேட்டதால் என்னை ஓரங்கட்ட நினைத்து இ.தொ.கா.வின் எந்த விழாவுக்கும் என்னை அழைக்கவில்லை. மத்திய மாகாணத்தில் நான் பலவருடங்களாக அமைச்சராகவிருந்த அனுபவமிருந்ததால் தான் எனக்கு வாக்களித்த மக்களுக்குச்சேவை செய்வதற்காக அமைச்சுப்பதவி கேட்டேன். இதுதான் நியாயம். இதற்காக என்னை ஓரங்கட்டி விடடார்கள்.

இந்த நிலையில் இ.தொ.கா.வுடன் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கு பலமுறை முயற்சித்தப்போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கத்திடமும் இதுபற்றி தெரிவித்த போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

இ.தொ.கா.வுக்கு நான் எழுதிய கடிதத்திற்கும்  இதுவரை பதில் கிடைக்கவில்லை.
 
 இவ்வாறானதொரு நிலையில் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் என்னை சந்திக்க விரும்பினார்.

இந்தச்சந்திப்பின் போது மலையக மக்கள் முன்னணியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுங்கள் என்று எனக்கு அவர் அழைப்பு விடுத்தப்போது நான் எனக்கு வாக்களித்த மக்களுடன் பேசித்தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தேன்.  'இதனை ஊடகங்கள் நான் மலையக மக்கள் முன்னணியுடன் இணையப்போவதாக செய்தி வெளியிட்டு விட்டன. எனக்கு அவ்வாறானதொரு எண்ணமிருக்கவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றில் நான் தன்னிச்சையாக செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்காக திட்டமொன்றைச் செயற்படுத்தவுள்ளேன். எனவே, எனக்கு வாக்களித் மக்கள் எவருக்கும் அஞ்சத்தேவையில்லை. என்னுடன் எப்போதும் தொடர்பு கொண்டு எனது சேவையைப்பெற்றுக்கொள்ள முடியும்' என்று தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .