2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும்: இலங்கை

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைத் தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என்பதை மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் தீர்மானிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

சுதந்திர தமிழீழத்தை நாடும் புலம்பெயர்ந்தவர்களா, அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமாதானத்தை விரும்பும், இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்தத் தயாராகவுள்ள தமிழ் மக்களா  இலங்கை தமிழர்களுக்காக பேசுகிறார்கள் என்பது தொடர்பாக மேற்குலக அரசாங்கங்களும் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்.

பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில், ஐரோப்பாவில் எல்.ரி.ரி.யின் திட்டங்கைள தோற்கடித்தல் எனும் தலைப்பல் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதித்துறை, பொலிஸ், புலனாய்வுத்துறை, இராணுவம் முதலான துறைகளைச் சார்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்ட பின்னர் எல்.ரி.ரி.ஈ.யின் சொத்துக்கள், ஆளணி மற்றும் செயற்பாடுகளுக்கு பிரத்தியேக உரிமையுள்ள இடமாக ஐரோப்பா மாறியுள்ளது எனவும் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறினார்.

கடந்த 15 மாதங்களில் ஜேர்மனி, நெதர்லாந்து, நோர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் ; 32 எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்களும், பிரான்ஸில் 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் வலையமைப்புக்கு பொறுப்பான நெடியவன், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உயிர்தப்பியுள்ள தலைவரான விநாயகம், பிரச்சார பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்சகோதர் இமானுவல் ஆகியோர் ஐரோப்பாவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X