2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்சி மாற்றங்கள்

Administrator   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்துவந்த  செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை அடுத்து, இவ்வாறானதொரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

 ஆனாலும், எட்டப்பட்ட முடிவு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ செயலாளர் யார் என்பது குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டது என்று, நாங்கள் திடமாக நம்புகிறோம்” என்று ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

அதாவது, சர்ச்சை முடிவடைந்து விட்டதாக அவர் நம்புகிறார். ஆனால், நம்பிக்கைகள் அனைத்தும், உண்மையாகி விடுவதில்லை என்கிற உண்மையொன்றும் இங்கு மறைந்துள்ளது. 

நடந்த கதை

முஸ்லிம் காங்கிரஸுக்கு 2015ஆம் ஆண்டு வரையிலும் அதிகாரம்கொண்ட செயலாளர் என்றோ, செயலாளர் நாயகம் என்றோ ஒருவர்தான் இருந்தார். அந்தப் பதவியினைக் கடந்த பல வருடங்களாக எம்.ரி. ஹசன் அலி வகித்து வந்தார். ஆனால், 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஒன்றினூடாக, கட்சியின் செயலாளர் நாயகம் என்கிற பதவி இருக்கத்தக்கதாக, உயர்பீட செயலாளர் எனும் பதவியொன்று உருவாக்கப்பட்டது.

 இந்த உயர்பீடச் செயலாளர்தான் தேர்தல் ஆணையாளருடன் உத்தியோகபூர்வமாகத் தொடர்பினை வைத்துக்கொள்வார்; கட்சியின் வேட்புமனுக்களில் கையெழுத்திடுவார் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அறிவித்தார்.

இதன்படி, கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரி. ஹசன் அலி, கடந்த காலங்களில் தனது பதவிக்கிருந்த அதிகாரங்களை இழந்தார். உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ. காதர் என்பவரிடம் அந்த அதிகாரங்கள் சென்றடைந்தன.

இந்த நிலையில், தனது செயலாளர் நாயகத்துக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக ஹசன் அலி ஆட்சேபனை தெரிவித்தார். உயர்பீட செயலாளருக்கு, இவ்வாறான அதிகாரங்களை வழங்குவதற்கான எந்தவொரு தீர்மானமும், கட்சிக்குள் எட்டப்படவில்லை என்று அவர் புகார் செய்தார்.

இதனையடுத்து, இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணுமாறு, மு.கா தலைவர் ஹக்கீமுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

ஹசன் அலி தொடர்பான விவகாரம் இந்தளவு பாரதூரமான நிலைக்கு வரும் என்பதை, கட்சிக்குள் கணிசமானோர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் ஹசன் அலியுடனான பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்கான முயற்சிகளில் மு.கா தலைவர் சிரத்தை காட்டியிருக்கவில்லை. 

தேர்தல்கள் ஆணைக்குழுத் தவிசாளரிடமிருந்து கடிதம் வந்த பிறகுதான், இது தொடர்பில் பலரும் அதிர்சியடைந்தனர். டிசெம்பர் 15 ஆம் திகதிக்குள் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணப்படாது விட்டால், எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடமிருந்து வந்த கடிதம் சுட்டிக்காட்டியிருந்தது.

சமரசம்

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம், கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கூட்டப்பட்டது. அதன்போது, ஹசன் அலியுடன் பேசி, ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும், ஹசன் அலி வகிக்கும் செயலாளர் நாயகம் பதவிக்கு அதிகாரங்களை வழங்குமாறும் மு.கா தலைவரை, உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து, ஹசன் அலியை உடனடியாகச் சந்திக்கும் முடிவுக்கு மு.கா தலைவர் வந்தார்.

உயர்பீடக் கூட்டம் நடைபெற்ற தினத்துக்கு மறுநாள் 15ஆம் திகதி வியாழக்கிழமை, மு.கா தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரான யு.ரி.எம். அன்வர், இந்தச் சந்திப்பினை ஒழுங்கு செய்திருந்தார். 

இதன்போது, ஹசன் அலியை எவ்வாறாயினும் சமரசப்படுத்த வேண்டிய தேவை மு.கா தலைவருக்கு இருந்தது. இந்த நிலையில், ஹசன் அலி தனது பக்க நியாயங்களை மு.கா தலைவர் ஹக்கீமிடம் கூறியுள்ளார். “தேசியப்பட்டியல் மூலமாக என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்குமாறு, இம்முறை நான் உங்களிடம் கேட்கவில்லை. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றினைத்தான் கேட்டேன்.

ஆனால், தேர்தலில் போட்டியிட வேண்டாம், தேசியப்பட்டியலில் உங்களை நாடாளுமன்ற உறுப்பினராக்குகிறேன் என்று, நீங்கள்தான் கூறினீர்கள். உண்மை இப்படியிருக்க, தேசியப்பட்டியல் கேட்டு உங்களை, நான் நச்சரிப்பதாக ஏன் கூறிவருகிறீர்கள்” என, ஹக்கீமிடம் ஹசன் அலி கேட்டுள்ளார். மேலும், தான் வகிக்கும் செயலாளர் நாயகம் பதவிக்குரிய அதிகாரங்கள், தவறான முறையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஹசன் அலி சுட்டிக் காட்டியிருந்தார்.

 அதேவேளை, ‘எனக்கு எதிராக செயற்படுமாறு கட்சியிலுள்ள பலரிடம் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்’ என்று  ஹக்கீமிடம் கூறிய ஹசன் அலி, அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவத்தினையும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்த நிலையில், மு.கா. தலைவர் ஹக்கீமும் ஹசன் அலியிடம் பேசினார். இதன்போது ஹசன் அலியின் சில குற்றச்சாட்டுக்களை மறுத்தார். அதேவேளை, தற்போதைய செயலாளர் தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காணும்பொருட்டு, சில விட்டுக் கொடுப்புகளுக்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிய வருகிறது.

விட்டுக் கொடுத்தல் 

இதற்கிணங்க, ஹசன் அலிக்கு வாக்குறுதியளித்தவாறு, தேசியப்பட்டியல் மூலமாக அவரை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு ஹக்கீம் சம்மதித்ததாக அறியமுடிகிறது. மேலும், கட்சியின் அடுத்த பேராளர் மாநாட்டின்போது, ஹசன் அலிக்கு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினை வழங்குவது என்றும் ஹக்கீம் உறுதியளித்தார் என, ஹசன் அலிக்கு நெருங்கிய வட்டாரங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸின்அதிகாரமுள்ள செயலாளர் பதவி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சிக்கலை, சமரசமாகத் தீர்த்துக் கொள்வதற்கு ஹசன் அலி இணங்கியுள்ளார். 

இதன் பிரகாரம், மறுநாள் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவை மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் சந்தித்தனர். இதன்போது தமது கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலுக்கு, சமரசமான முடிவொன்றினைக் காண்பதற்கு தாம் இணங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினரின் முன்பாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, செயலாளர் பதவி தொடர்பில் எதுவித ஆட்சேபனைகளையும் ஹசன் அலி தெரிவிக்காமல் இருந்தார். இந்த அடிப்படையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது எனத் தான் நம்புவதாக, மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல்

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியினை ராஜிநாமாச் செய்யும் பொருட்டு எழுதிய கடிதத்தின் பிரதியொன்றினை, மு.கா செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம், ஹக்கீம் கையளித்துள்ளார்.

இதனை ஹசன் அலிக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக ஹசன் அலி நியமிக்கப்படவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சல்மானின் ராஜிநாமாக் கடிதம், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவில்லை என்றும் ஒரு கதை உள்ளது.

அப்படியென்றால், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பமாகும்போது, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சல்மானின் ராஜிநாமாக் கடிதம் கையளிக்கப்படலாம். சிலவேளை, அந்தக் கடிதம் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்படாமல் போவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. 

முஸ்லிம் காங்கிரஸ், கடந்த பொதுத் தேர்தலின்போது, மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், ஐ.தே.கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டது. இதன்பொருட்டு இரண்டு கட்சிகளுக்குமிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், ஐ.தே.கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இரண்டினை, அந்தக் கட்சி - மு.காவுக்குக் கொடுத்தது. 

மேற்படி இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் மு.கா தலைவர் ஹக்கீம், தனது மூத்த சகோதரர் டொக்டர் ஏ.ஆ.ஏ. ஹபீஸ் மற்றும் நெருங்கிய நண்பர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோருக்கு வழங்கினார்.

முஸ்லிம் காங்கிரஸில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் வரையில், நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாகவே இவர்கள் இருவரையும் தான் நியமித்ததாக இதன்போது ஹக்கீம் கூறினார். 

இதனையடுத்து, சில மாதங்களின் பின்னர் தனது மூத்த சகோதரர் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜிநாமாச் செய்ய வைத்த ஹக்கீம், அந்த வெற்றிடத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் மு.கா சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தார்.

‘கழற்றி’ எடுத்தல்

ஆனால், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ‘தற்காலிகமாக’ நியமிக்கப்பட்ட சல்மான் 16 மாதங்கள் கடந்தும், அந்தப் பதவியில் அப்படியே இருந்து வருகின்றார். முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சல்மான் என்பவருக்கு வழங்க வேண்டிய நியாய - தர்மங்கள் எவையும் கட்சிக்குள் இல்லை என்று, மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் மிகப் பகிரங்கமாகவே கூறி வருகின்றார்கள். 

ஆனால், இது குறித்துக் கட்சித் தலைவர் ஹக்கீமிடம் யாரும் தட்டிக் கேட்டதில்லை. அந்த வகையில் பார்த்தால், எவ்வித நியாய தர்மங்களுமின்றி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த, மு.காவுக்குச் சொந்தமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மு.கானவின் தளப் பிரதேசத்தைச் சேர்ந்த செயலாளர் நாயகம் ஹசன் அலி ‘கழற்றி’ எடுத்துள்ளார் என்பதை, வெற்றிகரமானதொரு விடயமாகவே கட்சிக்குள் பலரும் பார்க்கின்றனர்.

இந்த நிலையில், ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு மு.கா. தலைவர் முடிவு செய்துள்ளார் எனும் செய்தி, ஊடகங்கள் மூலம் தீயாகப் பரவியுள்ளது. இதனையடுத்து, ஏற்கெனவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக மு.கா தலைவரால் வாக்களிக்கப்பட்ட பிரதேசங்கள் குழம்பத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவேன் என்று,  கடந்த பொதுத் தேர்தல் கால - பிரசார மேடைகளில் மு.கா தலைவர் வாக்குறுதி வழங்கியிருந்தார். அட்டாளைச்சேனையும் அந்த வாக்குறுதியினை மலைபோல் நம்பியிருந்தது. 

ஆனால், ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு மு.கா தலைவர் முடிவு செய்துள்ளார் என்கிற செய்தி வெளியானதையடுத்து, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பலரும், மு.கா தலைவரை மிகக்கடுமையாக விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் எழுதுவதைக் காண முடிகிறது.

மு.கா தலைவருக்கு இது இக்கட்டான காலமாகும். அவர் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும்போது, இன்னொரு பிரச்சினை உருவாகத் தொடங்கியுள்ளது. ஆனால், இவற்றினையெல்லாம் விடவும் பெரிய நெருக்கடிகளைச் சந்தித்த அனுபவம், மு.கா தலைவர் ஹக்கீமுக்கு உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் அபாயம்

இது இவ்வாறிருக்க, ஹசன் அலிக்கு அதிகாரம்மிக்க செயலாளர் பதவி வழங்கப்படும் என்கிற உத்தரவாதம் நிறைவேற்றப்படுமா என்கிற சந்தேகங்களும் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் உள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் நிருவாகத் தெரிவு மற்றும் யாப்புத் திருத்தம் போன்றவை மு.காவின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கான அங்கிகாரம், கட்சியின் பேராளர் மாநாட்டில் பெறப்படும். முஸ்லிம் காங்கிரஸின்உயர்பீடத்தில் மொத்தமாக 90 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைய நிலையில் மு.கா தலைவர் ஹக்கீமுக்கு ஆதரவானவர்கள் எனக் கூறப்படுகிறது.

அதனால், மு.கா தலைவர் ஹக்கீமுடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறுதான் கட்சியின் நிருவாகத் தெரிவு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

எனவே, நிருவாகத் தெரிவின்போது ஹசன் அலிக்கு பதவிகள் எவையும் வழங்காமல், அவரை நிருவாகத்துக்கு ‘வெளியே போடுவதற்கு’ ஹக்கீம் நினைத்தால், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஹக்கீம் அப்படி முயற்சித்தால், அதனை எதிர்கொள்வதற்கு ஹசன் அலி என்ன செய்வார் என்பது இப்போதுள்ள பெரும் கேள்வியாகும்.

 

இவை அனைத்தினையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, மு.கா தலைவர் ஹக்கீமுக்கும், செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் எரியத் தொடங்கிய தீ, அணைந்து விட்டதாகக் கூற முடியாதுள்ளது. நெருப்பு அப்படியே இருக்க - அதன் மேலால் சாம்பல் படர்ந்துள்ளது போல்தான் தெரிகிறது. 

சிலவேளை, ஹசன் அலி தொடர்பான நெருப்பு முழுவதுமாக அணைந்து விட்டாலும், மு.கா தலைவருக்கு ஆறுதல் கிடைக்குமா என்கிற சந்தேகங்களும் மறுபுறமாக எழுப்பப்பட்டு வருகின்றன. 

ஹக்கீமுக்கும், மு.கா தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையிலான ‘காட்டுத்தீ’ இன்னொரு புறமாக எரிந்து கொண்டிருப்பது தான் மேற்படி சந்தேகத்துக்கான பிரதான காரணமாகும்.அப்படிப் பார்த்தால், மு.காவுக்குள் எரியும் நெருப்பை அணைப்பதற்கு, இன்னும் விட்டுக் கொடுப்புகளும் சமரசங்களும் தேவையாக இருக்கின்றன என்பதைத்தான் நிலைவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .