2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சரீபா: முதுசங்களைக் காப்பவர்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

முன்னோர்களிடமிருந்து கிடைக்கும் சொத்துக்களை 'முதுசம்' என்பார்கள். சொத்துக்கள் என்பது பொருட்களாக மட்டும்தான் இருக்க வேண்டுமென்றில்லை. எமது முன்னோர்கள் எமக்காக விட்டுச்சென்றுள்ள கல்வி, கலை போன்றவையும் முதுசங்கள்தான். ஆனால், அவற்றினை எம்மில் அதிகமானோர் பேணிப் பாதுகாத்து, உயிர்ப்புடன் வைத்திருப்பதில்லை. தனது பாட்டன் அல்லது தகப்பன் தெரிந்து வைத்திருந்த கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு எம்மில் எத்தனை பேர் ஆர்வமாக இருக்கின்றோம் என்கிற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டால், அதற்குக் கிடைக்கும் பதில் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும்.

சரீபா - நம்பிக்கை தரும் பெண்ணாக இருக்கிறார். தனது தந்தை அறிந்து வைத்திருந்த பாம்பு விஷக்கடிக்கான சித்த, ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியத்தைக் கற்றுக் கொண்டுள்ளார். தனது முதுசத்தைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். அது அழிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

சரீபா - சம்மாந்துறையைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் முகம்மது சுல்தான். அவர் புகழ்பெற்ற சித்த, ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியர். பாம்பு விஷத்துக்கு வைத்தியம் செய்வதில் விசேடமானவர். 1965ஆம் ஆண்டு இந்த வைத்தியத்தைப் கற்கத் தொடங்கியுள்ளார். பாம்பு கடித்து விட்டால் அதற்கு மூலிகைகள் மூலம் வைத்தியம் செய்வதில், அந்தப் பிராந்தியத்தில் முகம்மது சுல்தான் பிரபல்யமானவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. 2012ஆம் ஆண்டு வைத்தியர் சுல்தான் மரணித்து விட்டார்.

பாம்பு விஷ வைத்தியராக மட்டும் வைத்தியர் சுல்தான் இருக்கவில்லை. அவர் சித்த ஆயுர்வேதத்தில் ஏனைய பல நோய்களுக்கு சிகிச்சை செய்யும் வைத்தியராகவும் இருந்தார். பாம்பு விஷக் கடிக்கு வைத்தியம் செய்வதில் அவர் விசேடமானவர். ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியராக சுல்தான் இருந்திருக்கின்றார். வைத்தியர் சுல்தான் மரணித்த பிறகும். அவர் கற்று வைத்திருந்த அந்தக் கல்விச் செல்வம் உயிருடன் இருக்கிறது. அவரின் மகள் சரீபா - தனது தந்தையின் வைத்தியம் அழிந்து விடாமல் செய்து வருகிறார்.

'எனது தந்தை கோளாவில் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரிடம் இந்த வைத்தியத்தைக் கற்றிருந்தார். எனது தந்தையிடமிருந்து அனுபவ ரீதியாக இந்த வைத்தியத்தை நான் கற்றுக்கொண்டு, பின்னர் மேலதிக விடயங்களைத் தேடிப் படித்தேன். எனக்கு 16 வயதாக இருக்கும்போது, தந்தையின் வைத்தியத்தைக் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆயுர்வேத வைத்திய சபையில் தற்போது பதிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியராக நான் உள்ளேன்' என்கிறார் சரீபா.

சித்த, ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியத் துறையில், தனது தந்தை பெற்றிருந்த அறிவையும் அனுபவங்களையும் கைமாறிப் பெற்றிருக்கும் சரீபா, ஆங்கில மருத்துவத் துறையில்  பொதுச் சுகாதார மருத்துவ மாதுவாகக் கடமையாற்றுகின்றார் என்பது ஆச்சரியமான தகவலாகும். ஆங்கில மருத்துவத்துறையிலும் ஆயுர்வேத வைத்தியத்திலும் சமாந்தரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றார்.

சித்த, ஆயுர்வேதத்துறையில் பாம்பு விஷ பாரம்பரிய வைத்தியர்களாக பெண்களைக் காண்பது மிகவும் அரிதாகும். அதிலும், முஸ்லிம் சமூகத்தில் அநேகமாக அவ்வாறானவர்களைக் காணக் கிடைப்பதில்லை. அந்த வகையில், சரீபா தனித்துவம் மிக்க ஒருவராக இந்தத் துறையில் திகழ்கின்றார். தமது மூதாதையர்களின் கல்வி மற்றும் கலைகளை கற்றுக்கொள்வதற்கு ஆண் மக்கள் கூடப் பின்னடிக்கும் காலகட்டத்தில், தனது தந்தையிடமிருந்து கிடைத்த முதுசத்தை சரீபா - கட்டிக் காத்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

சரீபாவின் ஆண் சகோதரர் ஒருவரும்  தனது தந்தையின் வைத்தியத்தைக் கற்றுள்ளார். அவரும் பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியராகச் செயற்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய வைத்தியர்கள் என்போர்  பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களல்லர். அவர்கள் தமது முன்னோர்கள் அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்த மூலிகை வைத்தியங்களை அவர்களுடனிருந்து அனுபவ ரீதியாக கண்டும் கேட்டும் கற்றுக்கொண்டவர்களாக உள்ளனர். பாரம்பரிய வைத்தியத்துறையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் இவ்வாறானவர்களை ஆயுர்வேத வைத்திய சபையின் கீழ் பதிவு செய்து பாரம்பரிய வைத்தியத்துக்கான அங்கிகாரத்தினை அரசாங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சரீபாவை இந்தக் கட்டுரைக்காகச் சந்தித்தபோது, அவருடைய தந்தையார், நோயாளிகளைத் தங்க வைத்து வைத்தியம் செய்து வந்த இடமொன்றுக்கு அழைத்துச் சென்றார். சரீபாவின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அந்த இடம் உள்ளது. அங்கு ஒரு பழைய கட்டடம் அமைந்திருக்கிறது. அதை யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை. அந்தக் கட்டடம் அமைந்திருக்கின்ற வளவு முழுக்கவும் புற்கள் வளர்ந்துள்ளன. 'ஏன் இந்த இடத்தை இவ்வாறு புற் புதர்கள் வளர்ந்து கிடக்கும் வகையில் வைத்திருக்கிறீர்கள்' என்று சரீபாவிடம் கேட்டோம். 'இங்கிருக்கின்றவற்றில் அநேகமானவை புல்களல்ல. மூலிகைத் தாவரங்கள்' என்றார் சரீபா. அத்தோடு நின்று விடாமல், அங்கு வளர்ந்திருக்கும் மூலிகைத் தாவரங்கள் ஒவ்வொன்றினையும் அடையாளம் காட்டி, அவற்றின்  பெயர்களையும் எந்த நோய்க்காக அவற்றினைப் பயன்படுத்துவது என்பதையும் எமக்கு விவரித்தார்.

புற்கள் வளர்ந்திருப்பதாக நாம் நினைத்த அந்த இடம், கிட்டத்தட்ட ஒரு மூலிகைத் தோட்டமாக இருந்தது. வன்னவரி, பால் சொத்தி, நாகதாளி, நாயுருவி, ஓரிலைத் தாமரை, யானை வணங்கி, நாய்க்கடுகு, சித்தாம்பட்டி, மூக்கிறைச்சி, காட்டுக் கொத்தமல்லி, முடிதும்பை, கஞ்சாங்கோரை மற்றும் வேலிப்பருத்தி என்று அந்த இடம் முழுக்க மூலிகைத் தாவரங்கள் வளர்ந்து படர்ந்துள்ளன.

'முன்னர் ஒரு காலத்தில் பாம்புக் கடிக்கு வைத்தியம் செய்யும்போது, மூலிகைகளுடன் மந்திரங்களையும் பயன்படுத்துவார்கள். இப்போது நாம் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகின்றோம். இந்த வைத்தியத்தை அனுபவபூர்வமாகவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மூலிகைத் தாவரங்களை எல்லோராலும் அடையாளம் காண முடியாது. ஒரு மூலிகைத் தாவரம் போல், வேறொரு தாவரமும் இருக்கும். அவற்றில் எது உண்மையான மூலிகை என எல்லோராலும் அடையாளம் காண முடியாது' என்று கூறும் சரீபா, தனது வீட்டு வளவிலும் ஏராளமான மூலிகை மரங்களை வளர்த்து வருகின்றார்.

சரீபாவுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் ஆண், இளையவர் பெண் பிள்ளை, இருவரும் 10, 12 வயதுக்கு உட்பட்டவர்கள். கணவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். சரீபாவை நாம் சந்திக்கச் சென்றிருந்தபோது, அவருடைய கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். சரீபாவுடைய பிள்ளைகளும் தாயுடன் சேர்ந்து சில மூலிகைத் தாவரங்களின் பெயர்களைக் கூறி, எமக்கு அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருந்தது.

அந்தப் பிள்ளைகளிடம் நாம் கண்டு வியந்த, அந்த விடயம் குறித்து சரீபாவிடம் பேசினோம். 'பிள்ளைகளுக்கும் மூலிகைகள் தொடர்பான அறிவு உள்ளது. கண்டதை, கேட்டதை அறிந்து வைத்துள்ளார்கள். எனது தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட இந்த வைத்தியத்தை எனது பிள்ளைகளிடம் கையளிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்' என்றார்.

பாம்பினால் கடியுண்ட நிலையில், வைத்தியம் பெற வருகின்றவர்களுக்கு என்ன வகையான பாம்பு கடித்துள்ளது என்பதை காயத்தின் தோற்றத்தை வைத்து, தங்களால் கண்டுபிடித்துவிட முடியும் என்று சரீபா சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. 'ஓர் உதாரணத்துடன் சொல்லுங்கள்' என்று கேட்டோம். 'பாம்புகளில் பல இனங்கள் உள்ளன. 'சங்குபாலன்' என்கிற ஒரு பாம்பு உள்ளது. அது நல்லபாம்பு இனத்தைச் சேர்ந்தது. அந்த வகைப் பாம்பு கடித்தால், அதனால் ஏற்படும் காயம் பிறை வடிவில் இருக்கும். அந்தக் காயத்தின் வடிவத்தினை வைத்து, என்ன வகையான பாம்பு கடித்துள்ளது என்பதை அறிய முடியும்' என்று விளக்கம் தந்தார்.

இந்த பாம்பு விஷ வைத்தியத்தினை சரீபாவின் தந்தை சுல்தான் வைத்தியரும் சரீபாவும் தர்மமாகவே செய்து வருகின்றனர். வைத்தியம் செய்வதற்குப் பரிகாரமாகச் சிகிச்சை பெற்றுக்கொண்டவரிடம் இவர்கள் பணம் எதையும் கேட்டுப் பெற்றுக்கொள்வதில்லை என்பது இவர்களின் வைத்தியத்திலுள்ள மற்றுமொரு சிறப்பம்சமாகும். அநேகமாக, இவ்வாறான வைத்தியத்தினை மேற்கொள்கின்றவர்களில் கணிசமானோர் தமது வைத்தியத்துக்காகப் பணம் கேட்டுப் பெறுவதில்லை. அவ்வாறான பலரை நாம் கண்டுள்ளோம்.

ஆயுர்வேத வைத்திய சபையில் இந்த வைத்தியத்துக்காக அனுமதி பெற்றுக்கொண்ட அனுபவத்தினையும் சரீபா எம்முடன் பகிர்ந்துகொண்டார். '2003ஆம் ஆண்டு ஆயுர்வேத வைத்திய சபையினால், எனக்கு அனுமதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்காக, அதே ஆண்டு வாய்மொழி மூலமான நேர்முகப் பரீட்சையொன்றுக்குத் தோற்றியிருந்தேன். அதனையடுத்து, அதே வருடம் எனக்கு அனுமதி இலக்கம் வழங்கினார்கள்'.

பாம்பு விஷத்துக்கு வைத்தியம் மேற்கொள்ளக்கூடிய சித்த, ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியர்கள் இப்போது மிகவும் குறைவடைந்து விட்டார்கள். முன்னோர்கள் கற்றிருந்த இந்த வைத்தியத்தினைக் கற்றுக்கொள்வதற்கு அநேகமாக அவர்களின் சந்ததியினர் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், இந்த வைத்தியம் தொடர்பில் உயர்வான பார்வை எம்மவர்களிடம் இல்லை. இவை போன்ற பல காரணங்களால், பாம்பு விஷத்துக்கான பாரம்பரிய வைத்தியத்துறையில் ஈடுபடுகின்றவர்களின் தொகை, மிகவும் குறைவடைந்துகொண்டு வருகின்றமை கவலை தரும் நிலைவரமாகும். இன்னொருபுறம், இந்த வைத்தியத்துறையில் செயற்பட்டு வருகின்றவர்களுக்கு அரசாங்கம் போதியளவு உதவிகளையும் உற்சாகத்தினையும் வழங்கவில்லை என்பது இன்னொரு பக்கக் குற்றச்சாட்டாகவும் உள்ளது.

பாம்பு விஷத்துக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதில் விசேடத்துவம் பெற்ற ஒரு பாரம்பரிய வைத்தியராக சரீபா இருக்கின்றார். மேலும், சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் மேலும் பல நோய்களுக்கும் சிகிச்சை வழங்கி வருவதாகவும் கூறுகின்றார். அந்த வகையில், இந்தத் துறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்ன என்று அவரிடம் கேட்டோம்.

'மூலிகைத் தாவரங்கள் இப்போது அருகி விட்டன. முன்னரெல்லாம் வீட்டு வளவுகளிலும் வீதியோரங்களிலும் மிகச் சாதாரணமாகக் கிடைத்த மூலிகைகளை அதிக தூரம் தேடிச் சென்று, பெற்றுவர வேண்டிய நிலைவரங்கள் உருவாகியுள்ளன. எல்லா இடங்களிலும் கட்டடங்களாகவே காணப்படுகின்றன. மூலிகைத் தாவரங்கள் வளர்வதற்கான சூழல் இல்லை. எனவே, ஒவ்வொரு பாரம்பரிய வைத்தியரும் மூலிகைத் தோட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்குரிய காணிகளை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் அருகி வரும் மூலிகைகளைப் பாதுகாப்பதுடன், பாரம்பரிய வைத்தியத்துறையினையும் கட்டிக்காக்க முடியும்.

மேலும் சித்த, ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியத்துறையானது இப்போது நவீனமடைந்துள்ளது. இயந்திரங்களைக் கொண்டு மருந்துகளைத் தயாரிக்கும் நிலைவரம் எப்போதோ உருவாகி விட்டது. ஆனால், அவ்வாறான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி எம்மிடமில்லை. இன்னும் கைகளால்தான் மருந்துகளைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே, பாரம்பரிய வைத்தியத்துறையில் ஈடுபடுகின்ற எம்போன்றவர்களுக்கு அவ்வாறான மருந்து தயாரிக்கும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று இந்தத் துறையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைகளையும் சரீபா விவரித்தார்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். இந்தத் துறையில் சரீபா சிறப்பாகச் செயற்படுவதற்கு அவருடைய கணவரின் ஆதரவும் உதவிகளும் அதிகமாக உள்ளன என்கிறார்.

சித்த, ஆயுர்வேத வைத்தியங்கள்தான் எமது தேசத்தின் சொந்த, சுதேச வைத்திய முறைகளாகும். ஆனால், அவை குறித்த ஆர்வமும் அக்கறையும் எம்மிடம் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆனாலும், தனது தந்தையிடமிருந்து கிடைத்த முதுசத்தின் பயனாக பொதுவாக ஆண்கள் மட்டுமே ஈடுபடுகின்ற பாம்பு விஷ பாரம்பரிய வைத்தியத்துறையில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சரீபா, ஆச்சரியத்தால் திரும்பிப் பார்க்க வைக்கிறார்.
சரீபாவின் வைத்தியத்தில்  அவரின் தந்தை உயிர்த்திருக்கிறார்.

   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X