2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பந்தனின் வருகையுடன் தமிழர் தரப்பு அரசியல் சூடு பிடிக்குமா?

Super User   / 2011 மார்ச் 29 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.சஞ்சயன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த வாரம் நாடு திரும்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 4ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா உறுதிப்படுத்தியுள்ளார்.

இரா. சம்பந்தன் இதய சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஓய்வு நிலையில் இருந்து வந்தார்.

அவர் இங்கு இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளுக்கு மாவை.சேனாதிராசாவே தலைமை தாங்கினார்.

இப்போது மீளவும் நாடு திரும்பும் இரா.சம்பந்தன் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்பது தெரியவில்லை.

இதய சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் பொதுவாக அதிக அழுத்தங்களுடன் பணியாற்றுவதை மருத்துவர்கள் விரும்புவதில்லை.
ஓய்வு நிலையில் இருப்பதே அதிகம் நல்லதென்று அவர்கள் ஆலோசனை கூறுவதுண்டு.

இரா.சம்பந்தனின் உடல்நிலை தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்ற கேள்வி இருந்தாலும், அவரது வருகைக்காக பல முக்கிய பணிகள் காத்துள்ளன என்பது உண்மை.

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி அரசாங்கத் தரப்புடன் நடத்தப்படவுள்ள ஐந்தாவது சுற்றுப்பேச்சுக்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வு தொடர்பான திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளது.

இந்தத் திட்டத்தில் காணி, பொலிஸ் மற்றும் வனங்களைப் பராமரிக்கின்ற அதிகாரங்கள் தேவை என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்தத் தீர்வுத்திட்டம் இரா.சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் மாவை.சேனாதிராசா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இப்போது எத்தனை தீர்வு யோசனைகள் இருக்கின்றன என்றே தெரியவில்லை. ஏனென்றால், ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் கூட ஒரு தீர்வு யோசனை கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்டது.

அப்போது அது பற்றி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினை கிளப்பியது நினைவிருக்கலாம்.அதற்குப் பிறகும்இ ஒரு தீர்வு யோசனை தயாரிக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் இணைந்தும் ஒரு தீர்வு யோசனை தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

அவற்றில் எதுவுமே இப்போது கைவசம் இல்லாத நிலையில் தான், புதிதாக ஒன்றை அவர்கள் தயாரிக்கப் போகின்றனரோ என்ற கேள்வி எழுகிறது.
அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கின்ற தீர்வுத்திட்டம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

ஆனால் காணி, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு,கிழக்கு மாகாணசபைகளுக்கு கோருவதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது.

ஏனைய மாகாணங்களின் அதிகாரப்பகிர்வு பற்றியல்லாமல் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே தாம் அரசுடன் பேசுவதாகவும் அண்மையில் கூறியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அவரே தான் கூட்டமைப்பின் அரசியலமைப்பு, சட்டம் சார்ந்த விவகாரங்களை கையாண்டு வருகிறார். அரசாங்கத் தரப்புடனான பேச்சுக்களிலும் பங்கேற்கிறார்.

இரா.சம்பந்தனின் வருகையுடன் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை கூட்டமைப்பு இறுதி செய்து எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இதுவரை காலமும் அரசாங்கம் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அறிவிக்கப் போவதாக கூறி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ, இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப் பகிர்வு யோசனைக்காகக் காத்திருப்பதாக அவர் கடந்தவாரம் அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தவறுவதால் தான் காலம் இழுபடுவது போன்ற தோற்றத்தை உருவாக்க அவர் முனைகிறார் என்பது வெளிப்படையாகிறது.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

அதாவது தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கான யோசனை ஒன்றை விரைவாக முன்வைக்க வேண்டியுள்ள கடப்பாடும் பொறுப்பும் அதிகரித்துள்ளது. அதை விரைவில் செய்ய வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது.

இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இந்தச் சிக்கலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டும். அதாவது அதிகாரப்பகிர்வு யோசனையை விரைந்து இறுதி செய்து அரசிடம் சமர்ப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கடுத்து, இன்னொரு முக்கிய பணியும் அவருக்கு இருக்கிறது. அது தான் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கும் பணி.
நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியம் அளிக்காது என்றே கூறப்பட்டது. ஆனால், பின்னர் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் சாட்சியம் அளிப்பார் என்று கூறப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுடம் சமர்ப்பிப்பதற்காக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இத்தகைய நிலையில் தான் இதய சத்திரசிகிச்சைக்காக இந்தியா சென்றார் இரா.சம்பந்தன். பல மாதங்களாக அவர் இந்தியாவில் தங்கியிருந்த நிலையில், இதுவரை கூட்டமைப்பு சார்பில் எந்தவொரு பிரமுகரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பொது அமர்வுகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களை ஆய்வு செய்து அறிக்கைகள் தயாரிக்கும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டது. மே மாத இறுதிக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக இதுவரை முக்கிய அரசியல் புள்ளிகள் எவரும் சாட்சியம் அளிக்கவில்லை.2002 தொடக்கம் 2004 வரை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சாட்சியம் அளிக்கவில்லை. அவர் இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மாட்டார் என்றும், இந்த ஆணைக்குழு ஒரு ஏமாற்று நாடகம் என்றும் கூறியுள்ளது ஐ.தே.க.

அந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவும் சாட்சியமளிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் இதுவரை எவரும் சாட்சியம் அளிக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சாட்சியம் அளிக்கவில்லை. அதைவிட அரசாங்கத்தின் சார்பில் அதாவது ஜனாதிபதி சார்பிலும் சாட்சியம் அளிக்கப்படவில்லை.

முக்கியமான அரசியல் தலைவர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்க முன்வராததையிட்டு அதன் உறுப்பினர்கள் அண்மையில் வருத்தம் வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் நாடு திரும்பியதும் இரா.சம்பந்தன் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பார் என்று கூறியுள்ளார் மாவை. சேனாதிராசா.

இதன்மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அவர் சாட்சியம் அளிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதுவும் கூட இப்போது சம்பந்தனின் முன்னால் உள்ள முக்கியமான பணியாக உள்ளது.

அதைவிட, எதிர்வரும் மே முதல் வாரத்தில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீது தீர்ப்பு அளிக்கப்பட்டதும், வடக்கு கிழக்கில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு ஜுன் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் வடக்கு மாகாணசபைக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இவையிரண்டும் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய சவால்களாகவே உள்ளன.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கூட்டமைப்பு அதிக சபைகளைக் கைப்பற்றியுள்ள போதும் அதன் வாக்கு வங்கி திருப்திகரமான நிலையில் இல்லை என்பது வெளிப்படை.

வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவு இருந்தாலும் அதற்கு சவால்களும் அதிகம் உள்ளதென்பதை மறுக்க முடியாது. அதற்கிடையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான போட்டி பூசல்களும் அவ்வப்போது பொருமி வெடிக்கின்றன.

இவையெல்லாவற்றையும் சமாளித்து தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் ஈடுபட வேண்டிய தேவையும் இரா.சம்பந்தனுக்கு உள்ளது. இவைபோன்ற பல சவால்களும் கடமைகளும் உள்ள நிலையில் தான் இரா.சம்பந்தன் அடுத்த வாரம் நாடு திரும்பப் போகிறார்.

அவரது வருகையுடன் தமிழர் தரப்பின் அரசியல் முனைப்புகள் மேலும் களைகட்டும் என்கின்றன கூட்டமைப்பு வட்டாரங்கள். ஆனால் அந்தளவுக்கு அவரது உடல்நிலை தீவிர அரசியலுக்கு ஒத்துழைக்குமா என்பதைப் பொறுத்தே பல விடயங்களைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

இன்றைய நிலையில் தமிழர் தரப்பின் வலிமைமிக்க தலைவராக இரா.சம்பந்தனே உள்ள நிலையில், அவர் மீதான அழுத்தங்களும், வேலைப்பளுக்களும் அதிகரிப்பது அவரது உடல்நிலைக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. அதேவேளை, தற்போது அவருக்கு முன்னால் உள்ள கடமைகளையும் தட்டிக் கழிக்க முடியாது.

எவ்வாறாயினும், அரசியல் களத்தில் இப்போது இரா.சம்பந்தனின் வருகை முக்கியமானதொன்றாகவே கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இருந்து வந்த தொய்வு நிலையை இவரது வருகை மாற்றும் என்ற நம்பிக்கை கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களிடம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .