2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ண காய்ச்சலுக்குப் பின்னால்...

Super User   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் ஒருவித காய்ச்சல் தெற்காசியாவைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது. இது சூரியன் உச்சத்துக்கு வந்திருப்பதால் வந்த வெப்பக் காய்ச்சல் அல்ல.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்துக்கு இலங்கை- இந்திய அணிகள் தகுதி பெற்றதும் சூடுபிடிக்கத் தொடங்கிய காய்ச்சல் இது.

கடந்த 2 ஆம் திகதி இரவு இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் வரை இதன் வெப்பம் குறையவில்லை.

இலங்கையும் இந்தியாவும் மோதிய அந்தப் போட்டி தெற்காசியாவில் வாழும் பெரும்பாலான மக்களைத் தன் வசம் கட்டிப் போட்டிருந்தது.
இருதரப்பு அணிகளின் வெற்றிக்காக, அவற்றின் ரசிகர்கள் மட்டுமன்றிஇ அரசியல் தலைவர்களே கோவில் கோவிலாக ஏறிப் பிரார்த்தனை செய்தனர்.

இது இந்தக் காய்ச்சலின் உச்சம் எனலாம்.

இந்தக் காய்ச்சல் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்கும் நிலையை மாற்றி விடுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே அதற்கு ஒரு தனியான விறுவிறுப்பு இருக்கும்.
அதற்குக் காரணம் அரசியல் தான்.

இந்த இரு நாடுகளும் வெளியே நட்புப் பாராட்டினாலும் உள்ளுக்குள் பகை ஓயவில்லை.

அரசியலில் ஆயினும், போரில் ஆயினும், விளையாட்டில் ஆயினும் இந்தப் பகை நிலை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

இம்முறை இந்த இரு நாடுகளும் அரையிறுதியில் மோத வேண்டிய கட்டம் வந்த போது, பரபரப்பு உச்சமாகியது.

இந்தியப் பிரதமர் இந்தப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தான் பிரதமர் மொஹாலியில் நடந்த இந்தப் போட்டியைக் காண வந்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும்இ பாகிஸ்தான் பிரதமர் கியானியும் அருகருகே அமர்ந்து போட்டியை ரசித்தனர். இதை 'கிரிக்கெட் இராஜதந்திரம்' என்று ஊடகங்கள் எழுதின.

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கும்,  இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் அவ்வளவு திருப்தியான நிலை இல்லை.

இந்த நிலையில், இந்தக் கிரிக்கெட் இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் பிரதமரை அழைத்து விருந்து கொடுத்து அனுப்பி வைத்தார் இந்தியப் பிரதமர்.

இதேபோன்றதொரு அழைப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூஸிலாந்துப் பிரதமருக்கு விடுத்தார்.

இலங்கையும், நியூஸிலாந்தும் மோதிய அரையிறுதியைக் காண வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
ஆனால் நியூஸிலாநது பிரதமர் வரவில்லை.

இதனால் இலங்கையின் கிரிக்கெட் இராஜதந்திரம் தோல்வியில் முடிந்தது. இந்தியாவின் கிரிக்கெட் இராஜதந்திரம் வெற்றி பெற்றது.

அதேவேளை, இந்தக் கிரிக்கெட் இராஜதந்திரத்தை இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தக்கரே.

மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியைக் காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அங்கு சென்றிருந்தார்.

இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருக்காது போயிருந்தாலும் கூட அவரது இந்தியப் பயணம் நிகழ்ந்திருக்கும்.

ஏனென்றால் திருப்பதியில் தனது நேர்த்திக்கடனை துலாபாரம் கொடுத்து நிறைவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னரே திட்டமிட்டிருந்தார்.
இதற்கான  ஏற்பாடுகள் நடந்து வந்தபோது தான் இலங்கை அணி அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவானது.

இதையடுத்து அவர் மும்பை செல்லும் திட்டமும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற முன்னரே, மும்பையில் போட்டி நடைபெறும் அரங்கில் 40 ஆசனங்கள் ஒதுக்கி தருமாறு ஜனாதிபதி செயலகம் ஐசிசி தலைவர் சரத் பவாரைக் கோரியது. ஆனால் சொற்ப ஆசனங்களே ஒதுக்கப்பட்டன.

கட்டுநாயக்காவில் இருந்து ரேனிகுண்டா சென்று அங்கிருந்து தரைவழியாகத் திருப்பதி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , அதன் பின்னர் மும்பை சென்றார்.

அவருக்கு மும்பையில் இலங்கை அணிக்கு உலகக்கிண்ணம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவ, அதேவேகத்தில் திரும்பி வந்து விட்டார் ஜனாதிபதி.

இதனால் வெற்றிக்கிண்ணத்துடன் இலங்கை அணியுடன் நாடு திரும்பும் ஜனாதிபதியின் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதைவிட இந்தியப் பயணத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய இராஜதந்திர மரியாதைகள் கிடைக்கவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.

மொஹாலியில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை போன்று மும்பையில்மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்திய ஜனாதிபதிக்கும் அளிக்கப்படவில்லை. அத்துடன் இந்தியப் பிரதமரும் அங்கு வரவில்லை.

அதுமட்டுமன்றி இந்த உலகக்கிண்ண காய்ச்சல் உச்சம் பெற்றபோது வெளிக்கிளம்பிய சில செய்திகளும், போட்டியின் முடிவுக்குப் பின்னர் நடந்தேறிய சம்பவங்களும் இது விளையாட்டுக்கும் அப்பாற்பட்ட அரசியலைக் கொண்டதென்ற உண்மையைப் புரிய வைத்துள்ளது.

இந்தப் போட்டியில் ஆடிய இலங்கை அணிக்கு அரசியல் நோக்கம் இருந்தது என்று கூற முடியாது போனாலும், இதை அரசியலாக்கும், முயற்சிகளில் சிலர் ஈடுபட்டது உண்மை.

குறிப்பாக இந்தப் போட்டிக்கு முதல் நாள் ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பேட்டியும், அதேநாளில் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தும் தமிழ்மக்கள் பலரை முகம் கோண வைத்தது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும், சரத் பொன்சேகாவும் புலிகளுக்கு எதிரான போரை நடத்திய தளபதிகள். மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இப்போது ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி.

சரத் பொன்சேகா ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்டு சிறைக்குள் இருக்கும் முன்னாள் தளபதி. இவர் இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு கிடைக்கும் வெற்றி போரில் கிடைத்த வெற்றிக்குச் சமனானது என்றார்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவோ உலகக்கிண்ணத்தில் பெறும் வெற்றி போரில் மரணமான படையினருக்கான காணிக்கை என்றார்.

இந்த இரு கருத்துகளும் இதற்குப் பின்னால் இருந்த அரசியல் உள்நோக்கங்களை வெளிப்படுத்தியதெனலாம்.

அரசதரப்பும் சரி, சரத் பொன்சேகா போன்ற அரசியல்வாதிகளும் சரி, கிரிக்கெட் வெறும் விளையாட்டாகப் பார்க்கப்படவில்லை என்ற உண்மையை உணர வைத்தது.

கிரிக்கெட்டுக்குப் பின்னால் இன்னமும் வெளிவராத எத்தனை அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை இந்தக் கருத்துகள் ஏற்படுத்தின என்றால் மிகையில்லை.

அதுமட்டுமன்றி இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து ஹற்றனில் தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் வெடி கொளுத்தியவர்கள் மர்மநபர்களால் தாக்கப்பட்டதும், இன்னமும் இனவாதம் என்பது உயிர்ப்புடன் இருப்பதன் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் வெடி கொளுத்தியவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பதென்று தெரியாமல், பொலிஸார் அவர்கள் மீது வீதியை அசுத்தம் செய்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

போரில் அரசாங்கம் வெற்றி பெற்ற போது கொழும்பு நகரில் வெடி கொளுத்தப்படாத இடம் ஏதும் இருந்ததா? அப்போதெல்லாம் நகரை அசுத்தப்படுத்தியதாக எவர் மீதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா? யாழ்ப்பாணத்தில் மட்டும் எதற்காக இந்த நிலை?

போரின் வெற்றிக்காக தென்னிலங்கையில் வெடிகொளுத்தி நடத்தப்பட்ட கொண்டாட்டங்கள் தமிழர்களைப் புண்படுத்தியது உண்மை.
 
அதேவேளை,  அந்தப் போருக்கும், இந்தக் கிரிக்கெட் போட்டிக்கும் முடிச்சுப் போட்டதன் விளைவாகவே இத்தனை ஆரவாரத்தை தமிழர்கள் சிலர் செய்திருக்கலாம்.

அதற்காக அவர்கள் தாக்கப்பட்டதும், சட்டத்தின் பேரால் நடவடிக்கை எடுக்கப்படுவதும் தமிழர்கள் மீதான வன்மம் குறையாதிருப்பதன் அறிகுறிகளாகவே கருதலாம்.

உலகக்கிண்ணத்தை வைத்து நடத்தப்பட்ட இந்த அரசியல் நாடகம் இலங்கை அணியின் தோல்வியோடு மட்டும் முடிந்து விடவில்லை. அதன் பின்னரும் தொடர்ந்துள்ளது.

ஆனால் இந்த அரசியல் விளையாட்டு நீண்டகாலத்துக்கு நிலைக்காது. ஏனென்றால் இன்னொரு உலகக்கிண்ணப் போட்டி நடப்பதற்கு நான்கு ஆண்டுகள் செல்லும்.

அதற்கிடையில் இந்தக் காய்ச்சல் அடங்கி விடும் என்ற போதும்,  நல்லிணக்கம் பற்றிப் பேசும் அரசாங்கம் இனிமேலாவது விளையாட்டை அரசியலாக்காமல் தடுப்பதற்கு முன்வர வேண்டும்.


You May Also Like

  Comments - 0

  • asker Wednesday, 06 April 2011 05:41 PM

    தாய் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தால் இது தான் நடக்கணும் .பட்டும் திருந்தலையா தமிழர்களே

    Reply : 0       0

    EKSaar Wednesday, 06 April 2011 06:10 PM

    தமிழில் ஒரு புதிய எழுத்து நடை. ஒவ்வொரு வசனத்தையும் பந்திகளாக பிரித்து எழுதியிருப்பதைச் சொன்னேன். கவிதை என்றால் இரண்டு மூன்று வார்த்தைகள் கொண்ட துண்டென்று பலர் நினைத்திருப்பதைப்போல கட்டுரை என்றால் ஒவ்வொரு வசனமாக உடைக்கப்படவேண்டும் என்று நினைத்திருக்கிறாரா?

    Reply : 0       0

    Alga Thursday, 07 April 2011 06:12 PM

    வசனம் வசனமாக எழுதுவதால் வசிக்க இலகு. வேலை செய்யும் மக்கள் இலவுவாக வாசிக்கலாம். எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    xlntgson Thursday, 07 April 2011 09:14 PM

    ஆகா ஆகா ஓகோ ஓகோ பலே பலே, ஜிமுக்கு சிக்கா ஜிமுக்கு சிக்கா, சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, உன்னை தொட்டால் பக் பக்... இதெல்லாம் கவிதை இல்லையா புதுக்கவிதைக்கு இலக்கணம் எங்கே? குக்கூ குக்கூ ஹைகூ ஹைகூ பூவே பூவே பெண் பூவே புது பூவே வெண் பூவே பெண் பூவே மென் பூவே ரோசாப்பூவு பூவு பூ பூ பூத்த பூவு வாய் வெடிச்ச மொட்டுக்காரி தேன் குடிக்க நாக்கு முக்க சின்ன பூவைத் தானே காம்பு தாங்குது கொட்டப்பாக்கு கொழுந்து வெற்றிலை- இடம் போதாது நம் தமிழ் கவிதையை திறனாய்வு செய்ய!
    வெட்டி வேரு வாசம் நாற்றம் வேறு மணம் வேறு!

    Reply : 0       0

    Mohd Rizvi Qatar Sunday, 10 April 2011 04:18 PM

    அன்பின் வாசகர்களே தயவு செய்து உங்கள் கருத்துக்களை தெளிவான மொழியில் எழுதுங்கள் அத்தோடு இன்னொரு மனிதரையோஇ சமூகத்தையோ குறித்து தாக்கி எழுதுவது ஒரு விரும்பத்தக்கதல்ல. பத்திரிகை ஆசிரியரின் கவனத்திற்குஇ இப்படியான கருத்துக்களை இதில் பிரசுரிப்பதனை தவிர்த்துக் கொள்வது பின்விளைவுகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X