2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய - சீன வல்லரசுகளின் சதுரங்க ஆட்டம்

Editorial   / 2022 ஜனவரி 09 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


- டெசா
 

இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுக்கொண்டுள்ள காலகட்டம் இது. இலங்கையின் தேசிய அரசியலிலும் சரி,  இலங்கை சார்ந்த  சர்வதேச அரசியலிலும் சதுரங்க ஆட்டங்கள் மிகக் கச்சிதமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் சார்ந்த சர்வதேச நகர்வுகள் மீதே பார்வையை திருப்ப வேண்டியுள்ளது. இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ  இலங்கை வந்துள்ளார்.ஆனால் இது அவரது இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் அல்ல. அவரது விஜயத்தில் இலங்கையும் ஒரு தரிப்பிடம் அவ்வளவுதான்.


இம்முறை சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீயின் பயணமானது எரித்திரியாவில் ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் கென்யா, கொமொரோ தீவுகள் சென்று அப்படியே இலங்கை வந்து இறுதியாக  மாலைதீவுகள் செல்கின்றார். இம்முறை அவர் விஜயம் மேற்கொண்டுள்ள நாடுகளை அவதானித்துப்பார்த்தல் முதலில் எரித்திரியாவை எடுத்துக்கொள்வோம், எரித்திரியா இறுக்கமான இராணுவ ஆட்சியை கொண்ட நாடு மட்டுமல்ல, சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு ஆபிரிக்க நாடாகும். எரித்திரியாவின் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் சீனாவே மூடி மறைப்பதுடன் சர்வதேச தரப்பில் அவர்களை பாதுகாத்தும் வருகின்றது. அதேபோல் கென்னியாவை எடுத்துக்கொண்டால் பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நாடாகும். கென்னியாவின் கடன்களில் முக்கால்வாசியை சீனா தள்ளுபடி செய்வதாக கூட ஒரு அறிவிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது, அப்படியென்றால் கென்னியாவை முழுமையாக அவர்களின் பொறிக்குள் சிக்க வைக்துவிட்டனர் என்பதே அதன் அர்த்தமாகும்.


அடுத்ததாக கொமொரோ தீவுகள் பற்றி சற்று ஆழமாக சகலராலும் அவதானிக்கப்படுகின்றது. கொமொரோ தீவுகள் சீனாவுக்கு மிக முக்கியமான தீவாகும். இந்தத்தீவும் முற்று முழுதாக சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதுமட்டுமல்ல நீர்முழ்கிக்கப்பல் தொடர்புகள் முதற்கொண்டு சீனா கொமொரோ தீவுகளின் ஊடாகவே கையாண்டு வருகின்றது என்பது அத்தீவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. தற்போது அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், அடுத்ததாக மாலைதீவுகள் சென்று அங்கும் தமது திட்டங்களுக்கான கண்காணிப்புகளை மேற்கொண்டுவிட்டு வோங் யீ சீனாவுக்கு செல்வார் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீயின் இலங்கை விஜயத்தின் போது அரச மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், இலங்கை சீன அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், இலங்கையின் கடன் நெருக்கடிகளுக்கான நிவாரண சலுகைகள் அல்லது மேலதிக கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இது பொதுவான நிகழ்ச்சி நிரலும் கூட,  அதில் என்ன இருக்கப்போகின்றது என்பது சாதாரணமாக எழுப்பப்படும் கேள்வியாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டிய பல நகர்வுகள் இந்த விஜயத்தின் பின்னணியில் உள்ளது. அந்த நகர்வுகளையும் தாண்டி  இந்தியாவிற்கு சீனா வழங்கும் மிக முக்கியமான செய்தியொன்றும் உள்ளது. அது வேறு ஒன்றும் அல்ல  தமிழர் விவகாரத்தில் சீனாவின் புதிய கரிசனையேயாகும்.

விஜயத்தின் பின்னணி பற்றி பார்க்க முன்னர் இந்தியாவுடன் சீனாவின் சீண்டல் என்ன என்பதை பார்த்தாக வேண்டும். இதற்கு முன்னர் இலங்கைக்குள் எவ்வாறு இந்தியா தனது இராஜதந்திர நகர்வுகளை கையாள எத்தநித்ததோ அதே பாணியில் தான் சீனாவும் அடி எடுத்து வைத்துக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் நகர்வுகள் தூர நோக்கில்லாது, இந்தியாவின் நலன்களில் எது சாதகமாய அமையும் என்பதை சரியாக விளங்கிக்கொள்ளாது பயணித்தமையே தற்போது இந்தியாவிற்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக தமிழர் விடயத்தில், தமிழ் மக்களின் அரசியல் நலன்களை கையாள்வதில் இந்தியாவிற்கு முழு ஈடுபாடு இருக்கவில்லை என்பது அவர்களின் இத்தனை கால உறவில் வெளிப்பட்டு நிற்கின்றது. ஈழத் தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகளை இந்தியா முழுமையாக செவி மடுக்கவில்லையா அல்லது இதுவரை காலமாக இந்தியாவிற்கு அது அவசியமாக இருக்கவில்லையா என்பது கேள்விக்குறியாக நிற்கட்டும். ஆனால் இனியும் அதே பாதையில் இந்தியா பயணிக்க முடியாது.

சீனா இப்போது தனது கவனத்தை வடக்கு கிழக்கு பக்கம் திருப்ப ஆரம்பித்துவிட்டது,  சீன தூதுவரின் வடக்கிற்கான திடீர் விஜயம் சாதாரணமான ஒன்றாக அமையவில்லை. அது அவசியமான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஜயமாகும், குறிப்பாக சொல்லப்போனால் தற்போதைய சதுரங்க ஆட்டத்தில் சீனா எடுத்து வைத்த கச்சிதமான நகர்வு என்றே கூற வேண்டும். நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இந்தியாவிற்கு பரந்தவுடன் அடுத்த கட்டமாக சீனத் தூதுவர் வடக்குக்கு விஜயம் செய்கின்றார், ஆனால் இந்த திட்டம் அதாவது  வடக்குக்கான சீன தூதுவரின் விஜயம் கொழும்பில் இருந்து தீர்மானிக்கப்பட்டதல்ல. இது பீஜிங்கின்  திட்டமிட்ட நகர்வாகவே அமைந்தது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளை  ஹொங்கொங் போன்று உருவாக்கி சீனாவின் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் திட்டத்தின் ஆரம்பமே இந்த விஜயம் என்பது ஒரு கருத்தோட்டமாக உள்ளது.

சீன தூதுவரின் வடக்கு  விஜயம் குறித்து இந்திய உயர் மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனாவின் தற்போதைய நகர்வானது வெறுமனே ஆக்கிரமிப்பு என்ற எண்ணக்கருவை தாண்டி இலங்கையின் அரசியலுக்குள் ஒரு காய் நகர்த்தலை  முன்னெடுப்பதாகவே இந்தியா அவதானித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஆகவே சீனா ஒருபுறம் காய்களை நகர்த்திக்கொண்டு தமது திட்டம் இரண்டை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் அதே வேளையில் இந்தியாவும் இதனை சாதாரண விடயமாக கருதாது தமது அவதானிப்பை சீன தூதுவரின் வடக்கு விஜயத்தில் திருப்பியுள்ளனர். எனவே இந்தியாவும் தனது காய்களை சரியாகத்தான் நகர்த்தியிருக்க வேண்டும்.

இந்தியா- சீனா ஆகிய இரு பெரும் பலவான்கள் தமக்குள்ள பூகோள அரசியலை இவ்வாறு நகர்த்திக்கொண்டுள்ள வேளையில் இலங்கைக்குள் திடீரென 13 ஆம் திருத்தத்திற்கான பேச்சுக்கள் மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோரி தமிழ் பேசும் கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் தலையீட்டுடன் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கூறியிருப்பதும் நிச்சயமாக இந்தியாவின் அழுத்தங்கள் இதன் பின்னால் இல்லாமலிருக்க வாய்ப்பில்லை. ஆகவே இப்போது இலங்கைக்குள் சர்வதேச சதுரங்க ஆடம் ஆரம்பித்துவிட்டது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

சீன வெளியுறவு அமைச்சரின்  விஜயம் வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததாக இருக்குமென வெளிப்படையாக கூறினாலும், வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை எவ்வாறு விரிவு படுத்தலாம் என்பது குறித்து நிச்சயமாக பேசப்படும். இலங்கை தங்களை விட்டு சென்றுவிடக்கூடாது என்பதில் சீனா மிக உறுதியாக உள்ளது. இலங்கை இந்தியாவின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதும் சீன வெளியுறவு அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக வெளிப்படுகின்றது.

அதுமட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்தியா சார்ந்த பகுதிகளில் எல்லாம் தம்முடைய ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக சீனாவின் பயணங்கள் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா அக்கறை செலுத்துவதன்  மூலமாக மட்டுமே இலங்கையில் வடக்கு கிழக்கில் இந்தியாவின் முழுமையாக ஆதிக்கத்தை கொண்டு செல்ல முடியும் என்ற கருத்தை இந்தியாவிற்கு பலர் எடுத்துக்கூற ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இதனையே ஒரு பிரதான விடயமாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் தமது அரசியல் செயற்பாடுகளில் ஈழம் சார்ந்த இந்தியாவின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவிப்பதானது தமிழர்  சீனாவின் பக்கம் சாரப்போவதில்லை என்பது வெளிப்படுகின்றது. இந்தியா ஈழத் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்குமேயானால்  தமிழர் பகுதியில் இந்தியாவை தவிர வேறு எவரையும் கால்வைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடாகும். தமிழர் பூமிக்கான விடிவுகளை இந்தியா எழுதுகின்ற பட்சத்தில் வடக்கு கிழக்கு பகுதிக்குள் வேறு எவருக்கும் இடம் கொடுக்காத விதத்தில் இந்தியாவை நாம் பாதுகாப்போம் என தமிழர் தப்பு கூறுகின்றது.

இந்த சந்தர்ப்பம் இந்தியாவிற்கு நல்லதொரு வாய்ப்பாகும். ஆகவே இதனையேனும் இந்தியா சரியாக கையாண்டால் மட்டுமே ஈழத் தமிழர்கள் இந்தியாவை ஆதரிப்பார்கள். இல்லையேல் தவிர்க்க முடியாமலேனும்  தமது வாழ்வாதாரம், அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க சீனாவின் பக்கம் தமிழர்கள் நாடும் நிலை ஏற்படும். இது நடந்தால் புவியியல் சார் அரசியல் மாற்றங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இதன்போது நன்றாக ஒன்றை கவனிக்க வேண்டும், சீனாவியன் தூதுவர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் அங்கு நல்லூர் கந்தன் ஆலையத்திற்கு தமிழர் பாரம்பரிய முறைப்படி சென்ற போதும், வடக்கில் கடலட்டை பண்ணைகளை பார்வையிட்டபோதும், வடக்கு மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்த போதும், வடக்கு முனையில் இருந்து இந்தியாவை நோட்டமிட்ட போதும் தமிழர்களோ அல்லது தமிழ் மகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளோ தமது எதிர்ப்பையேனும் பதிவு செய்யவில்லை.  

இந்தியா பலமான நாடாக இருந்தாலும் அதன் வெளியுறவுக்கொள்கை மிகப் பலவீனமானதாகும். இதனை மறுக்கவே முடியாது. ஆகவே இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை செய்தே ஆகவேண்டும். தமிழர் நலன்களில் இந்தியா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, தமிழர் பூமியில் தமிழர்களுக்கான சுய நிர்ணய ஆட்சியை உருவாக்கிக் கொடுப்பதில் துணை நிக்காது போனால், இதுவரை காலமாக கையாண்ட அதே பிற்போக்கான இராஜதந்திர கொள்கையை இனியும் கையாண்டால் நிச்சயமாக இந்தியாவிற்கே தாக்கத்தை செலுத்தும். சீனாவின் நகர்வுகள் என்னவென்பதை தெரியாது வடக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இடம் வழங்கப்படும் என்றால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2015ஆம் ஆண்டில் இந்தியாவினதும் நேரடி தலையீட்டில் ஆட்சி மாற்றமொன்று இலங்கையில் ஏற்பட்ட போது தமிழ் மக்களுக்கு இந்தியாவினால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்தியா தமிழர்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படவில்லை. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் பலவீனமான போக்காகும். உண்மையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் அண்டைய நாடுகளுடன் அவர்களின் நீண்ட கால வேலைத்திட்டம் ஒன்று இல்லாததன் காரணத்தினால் தான் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய நாடுகள் அனைத்தும் இன்று சீனாவை சாரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்தியா தனது அண்டைய நாடுகளுடன் கையாளப்போகும் நீண்டகால மற்றும் குறுகியகால வேலைத்திட்டங்கள் என்ன என்பதை இப்போதாவது வகுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கையின் விவகாரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து இந்தியாவின் நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுத்தினால் மட்டுமே தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயமானது நிச்சயமாக சாதாரண அல்லது வழமையான, நட்புறவை மேம்படுத்தும் விஜயமாக அமையவில்லை. முன்னரே சுட்டிக்காட்டியதை போன்று சீனத் தூதுவர் தனது வடக்கு விஜயத்தின் போது கச்சத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து ட்ரோன் கெமரா மூலமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் மற்றும் சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் ஆகிய இந்த இரண்டு சம்பவங்களுக்குமான பதில் வேறொரு இடத்தில் உள்ளது.

அது என்னவென்றால், அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு முக்கிய ஆவணத்தை சமர்பித்துள்ளது. மக்கள் சீன குடியரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி தலையீடுகள் என்ற தலைப்பில் இந்த ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரணி என்னவென்றால், சீனா தனது இராணுவ தளம் ஒன்றினை இலங்கையில் நிறுவ முயற்சி செய்து வருவதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையின் கச்சத்தீவில் சீனாவுக்கான இராணுவ தளம் ஒன்றினை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும், சீன தூதுவரின் வடக்கு விஜயத்தின் உள்நோக்கம் இது ஒன்று மட்டுமே எனவும் ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

ஆகவே சீனா தனது சதுரங்க ஆட்டத்தை கட்சிதமாக முன்னெடுத்து மிகச் சரியாக தனது காய்களை நகர்த்திக்கொண்டுள்ளது, நேரடியாக இந்தியாவை சீண்டுவது சர்வதேசத்தின் பார்வையில் மிகப்பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பது சீனாவுக்கு தெரியாமல் அல்ல. ஆனால் இந்தியாவின் பலம் என்ன என்பதை போலவே இலங்கை ஈழத் தமிழர்களின் பலவீனம் என்ன என்பதையும் சீனா தெரிந்து வைத்துள்ளது. ஆகவே தான் இதுவரை காலமாக யுத்தத்தின் போதும் சரி யுத்தத்திற்கு பின்னரும் சரி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஒரு சொற்பிரயோகத்தில் கூட எதிர்ப்பை வெளிப்படுத்தாத சீனா, தமிழர்களின் நலன்கள் குறித்து சிறிதும் கவனத்தில் கொள்ளாத சீனா, முதல் தடவையாக தமிழர்கள் நலன்கள் சார்ந்து தனது பார்வையை திருப்பியுள்ளது. கண்டிப்பாக இது உளமார்ந்த கரிசனை அல்ல. மாறாக இந்தியாவை சீண்டிப்பார்க்க வேண்டும் என்ற சீனாவின் ஆசை மட்டுமேயாகும்.

ஆகவே இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், தீர்வுகளை இந்தியா பெற்றுக்கொடுக்க முனைப்பாக செயற்படும் என்றால், தமிழர்களின் கரங்கள் அரசியல் ரீதியில் பலமடையும் என்றால் நிச்சயமாக ஈழத் தமிழர்கள் இந்தியாவை பாதுகாப்பார்கள். ஆகவே சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு  தமிழர்கள் இடம் கொடுப்பதும்,  தடுத்து நிறுத்துவதும் இந்தியாவின் கையிலேயே உள்ளது.

 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .