2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 02

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 19 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வதாயின், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவின் அடிப்படையையும் அதன் நீட்சியாக, சீனாவின் அயலுறவுக் கொள்கை எவ்வாறானதாக அமைந்து வந்திருக்கிறது என்பதையும் நோக்குவது அவசியம். 

கடந்தவாரம், சீனாவின் அயலுறவுக் கொள்கையின் அடிப்படைகள் என்ன என்பதையும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை உறுதிபட வைத்த ‘அரிசி, இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, 1950களிலும் 1960களிலும் சீனாவின் அயலுறவு நடத்தை பற்றிய பார்வை முக்கியமானது. அதிலும் குறிப்பாக, இந்தியாவுடனான உறவு முக்கியமானது.  

சீனாவின் அயலுறவுக் கொள்கை, தொடர்ச்சியாக இந்தியாவினதோ அமெரிக்காவினதோ கொள்கைகளில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இருந்து வந்திருக்கின்றது. இந்த வேறுபாட்டை, சீனப் புரட்சியின் பின்னரான முதல் மூன்று தசாப்தங்களில் அதன் நடத்தையினூடு அவதானிக்கலாம். 

கொலனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்திய விடுதலைப் போராட்டங்களை, சீனா நிபந்தனையின்றி ஆதரித்து வந்தது. அதேவேளை, தான் ஆதரித்த விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்ற பின்னர், யார் ஆட்சி அமைக்கவேண்டும் என்று எங்கேயும் எவரையும் வற்புறுத்தியதில்லை. இதை, பங்களாதேஷிலும் இலங்கையிலும் இந்திய நடத்தையுடன் ஒப்பிட்டால், முக்கியமான வேறுபாடுகள் விளங்கும். 

அதேபோல, எந்தச் சுதந்திர நாட்டினதும் இறைமையை மதித்தே, சீனா நடந்து வந்தது. எந்த நாட்டிலும் ‘ஆட்சி மாற்றம்’ ஒன்றைச் சீனா பரிந்துரைத்ததில்லை; அதற்கான காரியங்களில் இறங்கியதுமில்லை. இதை அமெரிக்காவின் கடந்த அரைநூற்றாண்டு கால அயற்கொள்கையுடன் ஒப்பிடுவது தகும். 

1949ஆம் ஆண்டு சீன விடுதலையின் போது ஹொங்கொங், மக்காவ் ஆகிய கரையோரப் பகுதிகள் முறையே பிரித்தானியாவிடமும் போர்த்துக்கல்லிடமும் இருந்தன. சீனா அவற்றை விடுவிக்க அவசரப்படவுமில்லை; அதற்காகப் போர்தொடுக்க முயலவுமில்லை. அப்பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே, சீன அணுகுமுறையாக இருந்தது. 

ஏழு நூற்றாண்டுகளாகச் சீனாவின் பிரதேசமாக இருந்து வந்துள்ள திபெத் மீது, சென்ற நூற்றாண்டு முதல், பிரித்தானியாவுக்கு இருந்துவந்த விருப்பு இரகசியமல்ல. பிரித்தானிய கொலனிய விஸ்தரிப்பு வாதிகளது அணுகுமுறையைப் பின்பற்றிய இந்திய ஆட்சியாளர்கள், திபெத்தைப் தமது பூரண செல்வாக்குக்கு உட்படுத்த விரும்பினர். இதுவே, சீன -  இந்திய நல்லுறவின் சிதைவுக்குத் தொடக்க காரணமாயிற்று. 

சீனாவும் இந்தியாவும் உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடுகள். கொலனி ஆட்சியில் இருந்து இந்தியாவும் அயல் ஆதிக்கத்திலிருந்தும் பிரபுத்துவத்திலிருந்தும் சீனாவும் பெற்ற விடுதலைகள், கொலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட நாடுகளுக்கும் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த நாடுகளுக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தன. 1950களில் விருத்திபெற்ற இந்திய-சீன நட்பும் அணிசேரா நாடுகளின் உருவாக்கமும் அந்நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்தின. ஆனால், பின்னர் இந்திய-சீன உறவில் ஏற்பட்ட கசப்பு, நம்பிக்கைகளின் தளர்வுக்கும் முன்னாள் கொலனி ஆதிக்க நாடுகளின் களிப்புக்கும் காரணமாயின.

பிரித்தானிய கொலனி ஆட்சி, பல நாடுகளுக்கு இடையில் விட்டுச் சென்ற எல்லைப் பிரச்சினைகள் போல், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கிய பிரச்சினையை இரு நாடுகளும் தீர்க்கத் தவறியமை, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை மோதல்களுக்கும் ஈற்றில் 1962இல் ஓர் எல்லைப் போருக்கும் காரணமானது. அதன் விளைவுகளிலிருந்து, இரு நாடுகளும் இந்து சமுத்திரப் பிராந்தியமும் இன்னமும் விடுபடவில்லை. இவ்விடத்தில், ஒரு விடயத்தை நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது. இந்திய-சீனப் பகையாகத் தெரிவதன் அடிவேரெனச் சிலர் கருதும் எல்லைப் பிரச்சினையையும் போரையும், திறந்த மனதுடன் விசாரிக்கும் தேவை நமக்குண்டு. 

எல்லைத் தகராறைப் பேசித் தீர்த்திருக்க இயலாதா? போரைத் தவிர்த்திருக்க இயலாதா? மோதல்களும் போரும் ஏன் தவிர்க்கப்படவில்லை? இவை இரு நாடுகளின் மக்களும் விசாரிக்க வேண்டிய உண்மைகள் மட்டுமல்ல, இப்பிராந்திய மக்கள் அனைவரும் அறிந்து, அக்கறை காட்டவேண்டிய உண்மைகள் ஆகும்.

இந்தப் பிரச்சினை தொடர்பான உண்மைகள், தொடர்ச்சியாக மறைக்கப்பட்டு வந்துள்ளன. இது குறித்து ஆய்வாளரான ஏ.ஜி. நூரானி, சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய India-China war: A true story என்ற கட்டுரை வாசிக்கத் தகுந்தது. அதில், அவர் சுட்டிக் காட்டுகின்ற ஓர் அம்சம், ‘அந்தப் போர், இந்தியாவின் போர் அம்சத்தை விட, இராஜதந்திர அம்சத்தைப் பற்றிய பல விடயங்களைச் சொல்கின்றன. பேசித் தீர்த்திருக்கக்கூடிய பிரச்சினை ஒன்றைப் போரால் தீர்ப்பதென்ற நேருவின் முடிவு, இந்திய அயலுறவுக் கொள்கையின் மனநிலையைக் காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதே மனநிலை இன்னமும் இந்திய அயலுறவுக் கொள்கையை ஆளுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சீனாவுக்கு ஏனைய நாடுகளுடன் முரண்பாடுகள் இருந்துள்ளன. ஆனால், அவை தீர்க்கவியலாத பகையாக மாறாத வண்ணம், அதன் அயலுறவுக் கொள்கை இருந்துவருகிறது. மிகவும் நெருக்கடியான காலத்தில்கூட, அயலுறவுக் கொள்கை அடிப்படைகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக, 1968 இல் செக்கோஸ்லாவாக்கியா மீதான சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பை, சீனா வன்மையாகக் கண்டித்தது. தத்துவார்த்த ரீதியில் சோசலிசத்துக்கான பாதை பற்றிய விவாதத்தின் விளைவான, சீனாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான முரண்பாடு, 1961 இல் முற்றிய பின்னணியில், சீனாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை, சோவியத் ஒன்றியம் எடுத்த போதும், 1969 வரை இராணுவ மோதல் நிகழவில்லை. 

சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பை விமர்சிப்பதில், சீனாவின் நிலைப்பாடு மூன்றாமுலகிலும் வரவேற்பைப் பெற்றது. அதன் விளைவாகவே சீனாவின் வடக்கு எல்லையில் உள்ள வுசூலி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தீவைப் பற்றிய தகராறை, சோவியத் ஒன்றிய அரசாங்கம், சீனாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு வசதியாக்கியது. இம்மோதல் மூலம் சீனா, சோவியத் ஒன்றிய உறவு மேலும் முறுகலுக்கு உள்ளானது.

இதேபோலவே, ஹோசிமின் காலத்தில் மிக நெருக்கமாயிருந்த சீனா-வியட்நாம் உறவு, 1970இல் சோவியத் ஒன்றிய சார்பாளர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்பு குறிப்பாக, 1975 இல் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்ட பின்பு, வியட்நாமில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வலுப்பட்டது. 

அதுமட்டுமன்றி, தென்கிழக்காசியாவில் சீனச் செல்வாக்கைத் தடுக்கின்ற விதமாக, வியட்நாமைப் பயன்படுத்த சோவியத் ஒன்றியம் முற்பட்டது. வியட்நாமியப் படைகள், கம்போடியாவுக்குள் நுழைந்தமை அதில் நடுப்பகுதியாகும். இப்பின்னணியில் 1978 இல் சீன - வியட்நாமிய மோதல் ஒன்று நிகழ்ந்தது. 

இந்த இரண்டு உதாரணங்களும் சொல்கின்ற யதார்த்த அரசியல்  யாதெனில், போரை முதன்மைப்படுத்தாத, விரும்பாத அயலுறவுக் கொள்கையில் கூட, சில சந்தர்ப்பங்களில் போர் தவிர்க்க முடியாதாகி விடுகிறது. ஆனால், அப்போரிலிருந்து சுமூகமான உறவுக்கு எவ்வாறு மீள்வது என்பது, அயலுறவுக் கொள்கையிலும் அதன் நடைமுறைப்படுத்தலிலும் தங்கியுள்ளது. இவ்விடயத்தில், சீனா கவனமான நடந்துள்ளது. 

எந்த மோதலும், நிரந்தரமாக நீடித்த எல்லை மோதலாகாமல் கவனித்துக் கொள்ளப்பட்டதோடு, அவை குறுகிய காலத்திலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதைவிடச் சீனாவை அண்டியுள்ள பாகிஸ்தான், மியான்மார், கொரியா, வியட்நாம், லாரஸ், தாய்லாந்து, மொங்கோலியா, ரஷ்யா உட்பட்ட எல்லா நாடுகளுடனும் தரை எல்லைகள் பற்றிய முரண்பாட்டைச் சுமூகமாகவே தீர்த்துள்ளது எனலாம்.

1976இல் மாவோவின் மறைவைத் தொடர்ந்து, முதலாளித்துவப் பாதையில் சீனா நடக்கத் தொடங்கியது. இது சீனாவின் உள்ளார்ந்த சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலியது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு அவை அப்போது நடைமுறையில் இருந்த சீனாவின் அயலுறலுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. 

அதேவேளை, 1978இல் இலங்கையில் ஏற்பட்ட பாரிய அயலுறவுக் கொள்கை மாற்றம், முழுமையான அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை, இலங்கை எடுக்க வழிகோலியது. இது சீனாவை ஒருபுறமும் இந்தியாவை மறுபுறமுமாக எதிர்த்தது. 

இலங்கையின் அமெரிக்கச் சார்பு நிலைப்பாடும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகமும் சீன-இலங்கை உறவில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தின. இதில் முக்கியமானது, 1952 முதல் இருந்து வந்த ‘அரிசி, இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை ஆகும். 

அரிசி உற்பத்தியில், இலங்கை தன்னிறைவு அடைந்துவிட்டது என்ற காரணம் காட்டப்பட்டு, 1982இல் அது நிறைவுறுத்தப்பட்டது. அதேயாண்டு, இலங்கையில் இனமுரண்பாட்டின் புதிய அத்தியாயம் தொடங்கியது. 

இருநாடுகளுக்கும் இடையிலான ‘அரிசி - இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’யை சாத்தியமாக்கிய ஆர்.ஜி. சேனாநாயக்க, இதுதரப்புப் பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவைக்கு வழங்கிய குறிப்பில், சீனாவின் நடத்தை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:‘சீனத் தரப்பு குறித்த உடன்படிக்கை பற்றிப் பேரம்பேசுவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால், சின்னச் சின்ன விடயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தார்கள் என்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதேவேளை, அவர்கள் தங்கள் நடத்தையூடாக, பெரிய மனது உடையவர்களாகவும் வௌிப்படையானவர்களாகவும் இருந்தார்கள்’.     

  (அடுத்தவாரம் தொடரும்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .