2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 18 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: 

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். 


முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு ஒப்பானது. 

பிரேஸிலில் அதிவலது வன்முறை அரங்கேறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், அதாவது, ஜனவரி ஆறாம் திகதி, பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டிலோ, ஓர் அதிவலதுசாரிகளின் சதித்திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். இவை, இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரிகளின் நடவடிக்கைகள், இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதைக் காட்டி நிற்கின்றன. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடதுசாரித்துவ அலை வீசியது. அதன் குணவியல்புகளின் அடிப்படையில், அதை ‘இளஞ்சிவப்பு அலை’ (pink tide) என்று எல்லோரும் அழைத்தார்கள். 

பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிச் சார்புள்ளவர்கள், தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இது, இப்பிராந்தியத்தில் ஜனநாயகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மீது பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

கிட்டத்திட்ட அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. தேர்தல்களில் இடதுசாரிகள் சிறப்பாக செயற்படாதபடி பார்த்துக் கொள்ள, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. 

இந்த எதிர்ப்புரட்சி செயற்பாடுகளின் பிரதான அம்சமாக, தீவிர அதிவலதுசாரித்துவத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது.  இலத்தீன் அமெரிக்காவில், தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு உண்டு. ஆனால், இப்போதைய மீள்எழுச்சியானது, இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒழித்துக் கட்டுவதை நோக்காகக் கொண்டது. இலத்தீன் அமெரிக்காவில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியானது, உலக அளவில் அதிதீவிர வலதுசாரித்துவத்தின் ஒருங்கிணைப்பால் உந்தப்படுகிறது.

இடதுசாரிச் சார்பு எழுச்சிக்குக் காரணம், அவர்கள் சாதாரண மக்களை, பழங்குடிகளைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்; அவர்தம் நலன்களை முன்னிறுத்தினார்கள். இதனால், பல்தேசிய கம்பெனிகளை, செல்வந்த உயரடுக்கை எதிர்த்தார்கள். இன்று, அதிவலதுசாரி செல்வந்தர்களினதும் பல்தேசிய கம்பெனிகளினதும் அடியாளாக உள்ளது. 

இன்றைய போராட்டம் என்பது, உண்மையில் கிராமப்புற விவசாயிகள், பாரம்பரியமாக நிலத்தின் பராமரிப்பாளர்களாக இருந்த பழங்குடியினருக்கும் அவர்களை இடம்பெயரச் செய்து, அவர்களின் நிலத்தை எடுக்க விரும்புகின்றவர்களுக்கு இடையிலானது. இது உற்பத்தி வழிமுறைகளைப் பற்றியது.  

இந்தப் பெரிய நிலங்களை கையகப்படுத்துவதற்கான போராட்டத்தின் பகுதியே, அதிவலதின் எழுச்சியாகும். அதனால்தான், நிச்சயமாக, இங்குள்ள மக்கள் இயக்கங்கள் நிலத்தை ஜனநாயகமயமாக்குவதற்குப் போராடின; உற்பத்தி செய்ய நிலத்தை அணுகுவதற்குப் போராடின. இவற்றைச் சாத்தியமாக்குவதன் ஊடு, மக்கள் எங்காவது வாழ, எங்காவது வளர மற்றும் உற்பத்தி செய்ய உரிமை உண்டு. அவர்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக இருக்காது, தமக்கான உணவு உற்பத்தியைச் செய்ய முடியும்; ஏற்றுமதி செய்ய முடியும். மற்றும், பொருளாதார ரீதியாக முன்னேற, மற்ற விடயங்களைச் செய்ய முடியும். 

ஆனால் இதை தங்களது நிலங்களாகக் கையகப்படுத்தி, தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்த செல்வந்தர்களும் பல்தேசிய கம்பெனிகளும் அதிவலதுசாரிகளும் கைகோர்த்துள்ளன.  

இலத்தீன் அமெரிக்காவில், நாம் பெரும்பாலும் பார்ப்பது, கறுப்பின மக்களுக்கும் பணக்கார வெள்ளையர்களுக்கும் இனத்தின் அடிப்படையில் நடக்கும் வெறும் கலாசாரப் போரை மட்டுமல்ல! இது, நிலம் மற்றும் வளங்களுக்கான போராட்டம். 
இயற்கை வளங்களின் மீது இறையாண்மை, நிலத்தின் மீது இறையாண்மை, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவற்றை உற்பத்தி செய்ய விரும்பும் மக்களுக்கு எதிராக, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக, அந்தப் பகுதிகளுக்கு அணுகல் தேடும் நாடு கடந்த நலன்களுக்கு எதிரான போராட்டம் ஆகும். 

அவர்களின் சொந்த நலனுக்காக, தங்களுக்கு வாய்ப்பான ஆட்சியாளர்களை உருவாக்கும் எதிரான ஆட்சியாளர்களை அகற்றும் நடவடிக்கைகளுக்கு, எதிரான போராட்டம். இந்தப் பின்புலத்திலேயே அதிவலதுசாரித்துவத்தின் புதிய அலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

இலத்தீன் அமெரிக்க தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு ஒரு வரலாறுண்டு. சர்வாதிகாரத்தன்மை, கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய இராணுவத் தலைவர்கள், இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் மூன்று அலைகளை நாம் அடையாளம் காண முடியும். 

இதன் முதலாவது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு தொடங்கியது. 1930இல் ‘வோல் ஸ்ட்ரீட்’ நெருக்கடியுடன், ஆர்ஜென்டினா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் ‘பாரம்பரிய ஜனரஞ்சகவாதம்’ வெளிப்பட்டது. இது கம்யூனிசத்துக்கு எதிரான தற்காப்பாக உயரடுக்கினரால் புரிந்து கொள்ளப்பட்ட அதேவேளை, தொழிலாளர் வர்க்கத்தால் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்துக்கான வழி என்று ஏற்கப்பட்டது. 

இராணுவத்தின் ஆதரவுடன், அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோன், பிரேஸிலில் கெட்டுலியோ வர்காஸ் ஆகியோர், தீவிர வலதுசாரி, பாசிச அறிவுஜீவிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் கூட்டணிகளை நிறுவி ஆட்சிக்கு வந்தனர். இது, இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் மீது, ஐரோப்பிய பாசிச செல்வாக்கைக் காட்டிய ஒரு முக்கியமான தருணம்.பெரோன் (முன்னாள் ஜெனரல்) மற்றும் வர்காஸ் (இராணுவத்தின் நெருங்கிய கூட்டாளி) ஆகிய இருவரும் ஐரோப்பிய பாசிச ஆட்சிகளின் அபிமானிகளாக இருந்தனர். ஆனால், கூட்டணிகளை நிறுவி, நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை கிராமப்புற சமூகங்களுக்கு சில உரிமைகளை வழங்கினர். 

இந்தச் சர்வாதிகார ஜனநாயகம், பாரம்பரிய மற்றும் பிரபுத்துவ உயரடுக்குகளை மாற்றியது. அவர்களது செயற்பாடுகளின் மீது, தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வலிமையை இழந்தனர். பெரோன், வர்காஸ் ஆகிய இருவரும், சர்வாதிகார ஆட்சிகளை நிறுவினர். கம்யூனிசத்துக்கு எதிராக சிறந்த போராளிகளாக தங்களை முன்வைத்தனர். இந்நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகினர். 

தீவிர வலதுசாரிகளின் இரண்டாவது அலை, 1959ஆம் ஆண்டு கியூபப் புரட்சிக்குப் பின்னர், இலத்தீன் அமெரிக்காவில் கெடுபிடிப்போரின் தாக்கத்தோடு தொடங்கியது. 

மேல்தட்டு மக்களிடையே கம்யூனிசம் பற்றிய அச்சம், மற்றும் இடதுசாரி தீவிரமயமாக்கலுக்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை, இந்தச் சூழலை வரையறுத்தன. 60கள், 70களில் தீவிர வலதுசாரி சர்வாதிகாரங்களின் ஒரு சக்திவாய்ந்த சுழற்சி தோன்றியது. இது, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத் தலைவர்களைத் தாக்கியது, 

குறிப்பாக, தெற்குமுனை நாடுகளில் (அர்ஜென்டினா, பிரேஸில், சிலி, உருகுவே) மற்றும் மத்திய அமெரிக்காவில் கொடூரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தின் சிறந்த பிரதிபலிப்பு, சிலியில் (1973-1990) இருந்த அகஸ்டோ பினோஷேயின் சர்வாதிகாரமாகும். 

இது இப்பகுதியில் புதிய தாராளமயம் மற்றும் சர்வாதிகாரத்தின் முதல் கூட்டிணைவுக்கு உதாரணமானது. இராணுவ ஜெனரல் பினோஷே, இலத்தீன் அமெரிக்க அதி வலதின் மிக முக்கியமான தலைவராக இருந்தார், மேலும், அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகும், அவர் ஒழுங்கமைத்த அதிவலது ஒழுங்கு, சிலி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. 

இலத்தீன் அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் மூன்றாவது அலையில், நாம் தற்போது இருக்கிறோம். முற்போக்கான நவதாராளவாத எதிர்ப்பு, இடதுசாரி ஜனரஞ்சக அரசாங்கங்களின் உருவாக்கத்துக்கு எதிரானதாக, இந்த அலை இப்போது இருக்கிறது.  ஒட்டுமொத்தமாக, இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் வரலாறு, இராணுவ சக்தி, நவதாராளவாதத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவதாராளவாதமே, இன்று மக்களின் பரந்துபட்ட எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. 

‘இளஞ்சிவப்பு அலை’ ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வும் போராடுவதற்கான உந்துதலும், நவதாராளவாதத்துக்கு பெரிய சவாலாகவுள்ளது. இன்று இலத்தீன் அமெரிக்கா எங்கும் அதிவலதுசாரிகளுக்கு ஆதரவு பெற்ற வளச்சுரண்டலுக்கு எதிராக, மக்கள் போராடுகிறார்கள். இது, இடதுசாரிச் சார்புள்ள ஆட்சிகள் மீள்வதற்கு வழி செய்துள்ளது. இடதுசாரிகளின் இந்த மீள்எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், பிராந்தியத்தில் அதிவலதுசாரி இயக்கங்கள், கட்சிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மறுஉருவாக்கமும் அவை பலப்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். 

இதன் விளைவுகளின் ஒரு பகுதியே, இவ்வாண்டு தொடக்கத்தில் அரங்கேறிய நிகழ்வுகள். பிரேஸிலில் 2018இல் அதிவலதுசாரி நபர் ஜனாதிபதியானமை முக்கியமானது. இது, இலத்தீன் அமெரிக்க அதிவலதுக்கு மிகப்பெரிய ஊக்க மருந்தானது. இதில் இலத்தீன் அமெரிக்காவின் அதிவலசாரித்துவத்தின் வரலாற்றுக்கும் பங்குண்டு.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X