2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது?

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 07 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. 

அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை. 

யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களாகக் கருத விரும்புகிறார்கள்.ஆனால், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களை ஈழத்தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்புகிறார்களா என்ற கேள்வி இயல்பானது. அகஒடுக்குமுறைகள் நிரம்பிக் கிடக்கின்ற சமூகமொன்றில், புறஒடுக்குமுறையின் காரணமாக, அகஒடுக்குமுறைகளை மிகக் கொடூரமான முறையில், அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த ஒரு சமூகம் எம்முடையது என்ற உண்மையை ஏற்க, நாம் இப்போதாவது தயாராக இருக்கிறோமா?

இலங்கையில் வாழும் தமிழரின் கடந்த ஒரு நூற்றாண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசவோ, சுயவிமர்சனம் செய்யவோ நாம் தயாராக இல்லாதவரை, ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கோஷம் வலுவற்றது. 

பொன்னம்பலம் இராமநாதன், ஆறுமுகநாவலர் ஆகியோரில் தொடங்கி, வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை இதயசுத்தியோடு நாம் சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். ஒரு ஜனநாயகப் பண்புள்ள சமூகத்தின் முக்கியமான குறிகாட்டி அது. தந்தையாகட்டும் தமையனாகட்டும் தம்பியாகட்டும், எவருமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!

கடந்த ஒரு நூற்றாண்டில், தமிழ்த் தேசியவாதம் பல்வேறு வடிவங்களை எடுத்தாலும், அது வலியுறுத்தி வந்த நலன்கள் வசதிபடைத்த, சமூகத்தின் மேல் நிலையிலிருந்து வந்தவர்களினதும் மேல் நிலையாக்கம் பெற்றவர்களினதும் நலன்களாகவே இருந்து வந்துள்ளன. 

தமிழ் மக்கள், ஒடுக்கப்பட்ட சனங்கள் என்பதை, நமது தலைமைகள் என்றுமே விளங்கிக் கொண்டதில்லை. தமிழ்த் தலைமைகள், இன விடுதலையைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், அது முழுச் சமூகத்தினதும் விடுதலையைப் பற்றியதாக இருந்ததில்லை. 

உண்மையில், தமிழ்ச் சமூகத்துக்குள் இருந்து வரும் பல சமூகக் கொடுமைகளையும் அநீதிகளையும் பற்றிப் பேசுவது, தமிழரின் ஒற்றுமைக்குக் கேடானது என்று தான் நமக்குச் சொல்லப்பட்டு வந்துள்ளது. இன்னொரு புறம், ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற தேசிய கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்தத் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பொதுவாக, தமிழ் மொழியை விட, வேறெந்தச் சமூக அரசியல் அடையாளமும் முன்வைக்கப்படவில்லை. உண்மையில், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கை, அந்த மக்களின் ஏகப் பெரும்பான்மையினரின் நிலையைப் பற்றிக் கவனம்காட்டவில்லை. 

1956இல், ‘சிங்களமே அரசகரும மொழி’ என்ற அரசியல் கோஷம் எழுந்ததையொட்டி, தமிழ்த் தேசிய அரசியல் வெறும் ‘மொழி உணர்ச்சி’ அரசியலாகியது. தமிழ் மக்களின் இருப்பை மிரட்டலுக்கு உட்படுத்திய திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், நடைமுறையில் பயனுற எதுவுமே செய்யப்படவில்லை. அதற்கான முக்கிய காரணங்களில் சில, குடாநாட்டின் சமூக அமைப்புடன் தொடர்புடையவை. 

தென்னிலங்கையில் ஒரிரு நகரங்களில் (குறிப்பாகக் கொழும்பில்) வாழ்ந்துவந்த வசதிபடைத்த தமிழர்களைப் பற்றிய கவலையை விட்டால், குடாநாட்டுக்கு  வெளியே வேறெந்த அரசியல் அக்கறையும் அற்றதாகவே, தமிழ்த் தேசியவாதச் சிந்தனை தோற்றம் பெற்றது. 

அது, ‘தமிழீழம்’ என்றோ தேசிய சுயநிர்ணய உரிமை என்றோ, தன்னை அறிவிக்காது தமிழினம், தமிழ் மக்கள் என்று பேசிய காலத்திலும், அதன் அரசியல் யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்தியதாகவே இருந்தது. மொழியைப் பற்றிப் பேசப்பட்டாலும், தொடக்க நிலையில் சைவ-வேளாள உயர் வர்க்க நலன்களை விட, வேறெதற்கும் அரசியல் முக்கியத்துவம் இருக்கவில்லை. 

விலக்கான ஒரு போக்காக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இருந்தது. அது, ஒரு புறம் இலங்கை என்ற அடிப்படையிலும் இன்னொரு புறம், தமிழ்ச் சமூகத்துக்குள் சமூக அநீதியைப் பற்றியும் பேசியது. முழு இலங்கையும் கொலனிய ஆட்சியில் இருந்து விடுதலை என்ற கருத்தை, முதன் முதலில் முன்வைத்த அமைப்பு என்ற பெருமையும் அதற்குரியது. அதன் வீழ்ச்சியும் அதனிடத்தில் தமிழ் காங்கிரஸின் வருகையும் பழைமைவாத அரசியலின் வெற்றியை அடையாளப்படுத்தின. 

தமிழரசுக் கட்சியின் வருகை, யாழ்ப்பாண மையப்பட்ட அரசியலிருந்து நாடளாவிய அரசியலை நோக்கிய நகர்வு என்பது, வெறும் மாயை என்பது 1956க்கும் பின்பு வேகமாகவே தெளிவாகியது. 

தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் என்பதுடன், அவர்களது விடுதலையும் விமோசனமும் பல்வேறு தளங்களில் ஒற்றுமைப்பட்ட போராட்டங்களை வேண்டி நின்றன என்ற உண்மை, எந்தத் தமிழ் தலைமைக்கும் உறைக்கவில்லை. 

சமஷ்டி வேண்டி நின்ற போதும் தமிழீழம் வேண்டி நின்ற போதும், இன்று அயல் நாடுகளின் தயவிலே தான் தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுத் தர இயலும் என்று புலம்புகிற நிலையிலும், தமிழ் மக்கள் தமது விடுதலையை வெல்ல யாருடன், எந்த அடிப்படையில் ஐக்கியப்படுவது என்பதைப் பற்றித் தமிழ்த் தலைவர்கள் பேச மறுத்தே வந்துள்ளனர். 

முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழருக்கும் தலைமைதாங்கி வழிநடத்தும் தகைமையோ உரிமையோ, தமிழ்த் தேசியவாதிகளுக்கு அன்றும் இல்லை; இனியும் இல்லை. ஆனாலும், இன்றும் கூட, முஸ்லிம்களினதும் மலையகத் தமிழரினதும் தனித்துவத்தையும் தேசிய இன அடையாளத்தையும் ஏற்க மறுக்கிற போக்குத் தொடர்கிறது.  

அச்சமூகங்களைத் தேசிய இனங்களாக ஏற்க ஆயத்தமாக உள்ளவர்கள் இடையிலும், அவர்களது விடுதலையையும் தமிழ் மக்களுடைய விடுதலையையும் எப்படி இணைப்பது என்ற சிந்தனை எதுவும் இல்லை. இந்த இயலாமை, இத் தேசிய இனங்கள் இரண்டும், பயனற்றதும் சுயநலமும் கொண்ட  தலைமைகளின் ஆதிக்கத்தில் தொடர்ந்தும் இருக்கவே உதவியுள்ளன. 

தமிழ் மக்களின் ஒன்றுமையைப் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால், தமிழ் மக்கள் நடுவே பண்பாட்டின் பேராலும் மரபின் பேராலும் பெண்கள் மீதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதும் ஆதிக்கமும் அடக்குமுறையும் தொடருகின்றன. 

அவற்றைப் பற்றிப் பேசுவற்குத் தடை விதிப்பதன் மூலம், அவை இல்லாமல் போய்விட மாட்டா. “அதைப் பேசி, ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்” என்ற குரல், புலம்பெயர்ந்தோரிடமிருந்தே இன்று அதிகமாக ஒலிக்கிறது. அதன் நோக்கம் அக்கறையல்ல; உள்ஒடுக்குமுறையைத் தொடர்வதில் உள்ள விருப்பின்றி வேறெதுவாக இருந்துவிட முடியும்.

சில புலம்பெயர் குரல்களில் தெரிகின்ற காலாவதியான தன்மை, நகைப்பையே ஏற்படுத்துகிறது. போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ‘வட்டுக்கோட்டை முதல் முள்ளிவாய்க்கால் வரை’யான வரலாற்றை மனந்திறந்து பேசுவதற்கு, எல்லாத் தமிழ்த் தேசியவாதிகளும் அஞ்சுகின்றனர். அவ்வாறு பேசுவது, தமிழ்த் தேசியவாத அரசியலின் 70 ஆண்டுகால வெறுமையை அம்பலப்படுத்துமென அவர்கள் அறிவார்கள். 

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தேடும் ஆற்றலின்மையை, மக்களிடமிருந்து மறைக்கவும் தமிழ் மக்களின் அரசியலைத் தமது குறுகிய நலன்சார் வரையறைகளுக்குள் கட்டுப்படுத்தவும், பல்வேறு நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. ஒரு பகுதியினர் போர்க்குற்ற விசாரணைகளை மிக வலியுறுத்துகின்றனர். இன்னொரு பகுதியினர் அதை அடக்கி வாசித்தாலும், விசாரணைகளின் தேவையை வசதி கருதிப் பேசுகின்றனர். 

ஒரு பகுதி, தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் என்று இரு தேச அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கோருகின்றனர். இவர்கள் வெளிப்படையாய் பிரிவினையை வலியுறுத்தத் தயங்கினாலும், அவர்களுடைய சைகைகள் யாவும் விடுதலைப் புலிகளின் அரசியலைத் தொடரும் முனைப்பைத் தமிழ் இளைஞர்களுக்கும் அதிருப்தியாளர்களுக்கும் மட்டுமன்றித் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும் உணர்த்துகின்றன. 

தமிழ் மக்களுக்கான ஆபத்து, எல்லாத் தரப்புகளிடம் இருந்தும் காத்திருக்கின்றது என்பதுதான் அவலம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லும் எதிர்த்தரப்பும் அரசாங்கத்தில் அங்கம் வசிக்கும் ஆளும்தரப்புத் தமிழ்ப் பிரதிநிதிகளும், ஏமாற்றுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார்கள். 

தமிழ்ச்சமூகம் மனந்திறந்து பேசவேண்டும். அதற்கான களங்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ்ச் சமூகம் என்பது, பரந்துபட்டதும் பலகுரல்கள் கொண்டதும் என்ற உண்மையை இனியாவது ஏற்போம். ‘ஒரே குரலில் பேசுவது’ என்பது சாத்தியமாகாது. “ஒரே குரலில் பேசவேண்டும்” என்று கேட்பதும் ஒருவித பாசிச மனநிலையாகும்.

சிங்கள பௌத்த பேரினவாதம், தனது கொடுங்கரங்களால் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களை ஒடுக்குகிறது. இதற்கு முகங்கொடுப்பது இன்று தலையாய பிரச்சினை. இதனை இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் இணைவதன் மூலம் எதிர்கொள்ளமுடியும். 

அந்த இணைவை சாத்தியமாக்க இயலாதபடி, இனவாதம் அனைத்து சமூகங்களிலும் வேரூன்றி உள்ளது. சிறுபான்மைச் சமூகங்கள் தமக்குள்ளும் ஏனைய சமூகங்களுடன் மனந்திறந்த உரையாடலைச் செய்தாக வேண்டும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X