2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பனம்காமம், மூன்றுமுறிப்பு கிராமங்கள்: ஏன் இந்த நிலை?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

 

 

மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், ஓரளவு வசதி படைத்தவர்கள், தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம், வன்னியில் மிகவும் பழைமை வாய்ந்த பல விவசாயக் கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.

இதனால், இவ்வாறான கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏனைய  வறிய மக்கள், வாழ்வில் அன்றாடம் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மிகவும் பின் தங்கிய பிரதேசமாகக் காணப்படும் மாந்தைகிழக்கு பிரதேசத்தில், பனங்காமம், மூன்று முறிப்பு போன்ற பழைமை வாய்ந்த கிராமங்களில் இருந்து, கடந்த 10 வருடங்களாக, வசதி வாய்ப்புகளை நோக்கி, மக்கள்  குடி பெயர்து செல்லும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக, இந்தப் பிரதேசங்களில் மாணவர்களுக்கான உரிய கல்வி வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி போன்றவை இன்மை என்பன, இவ்வாறு குடிபெயர்வதற்குப் பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.

மாந்தைகிழக்கில் 1962ஆம் ஆண்டுகளுக்கு பிற்பகுதியில், பாண்டியன்குளம், கரும்புள்ளியான், விநாயகபுரம், பாலிநகர், கொல்லவிளான்குளம், சிவபுரம்  போன்ற கிராஙம்கள் உருவாகுவற்கு முன்னுள்ள வரலாற்றுத் தொன்மை கொண்ட, பனங்காமம், மூன்று முறிப்பு போன்ற கிராமங்கள், எதிர்காலத்தில் இல்லாது போய் விடுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பனங்காமம், மிகவும் பழைமையான வன்னியின் பழம்பெரும் கிராமமாகும். அதாவது, கி.மு ஏழாம்  நூற்றாண்டு முதல் இலங்கையின் கரையோர மாகாணங்களில், பெரும் கற்காலப் பண்பாட்டு மக்கள் குடியேறி வாழ்ந்தனர் என்றும் அக்காலப்பகுதியில் பண்டமாற்று முறைமை உட்பட, குறுநில அரசுகள் உருவாகின என்றும் அறியமுடிகின்றது.

அவ்வாறு உருவாகிய கிராமங்களில், ஒன்றுதான் பனங்காமம் பற்று என்றும் 17ஆம்  18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர், ‘அடங்காப்பற்று’ என்பதை, வன்னி என்று குறிப்பிட்டனர்  என்றும் இதில் பனங்காமம், கரிக்கட்டுமூலை, கருநாவல் பற்று, முள்ளியவளை மேல் பற்று, தென்னைமரவாடி என்ற ஆறு பிரிவுகள் காணப்பட்டன என்றும், பனங்காமம் பகுதியில் அமைந்துள்ள பஞ்சிங்கேஸ்வரர் கோவில் வரலாற்று நூலின் வாயிலாக அறியமுடிகின்றது.

இதேவேளை, ‘பாணன்கமம்’ என்ற பெயரே காலப்போக்கில் ‘பனங்காமம்’ என்று மருவி வந்துள்ளதையும்  அறியமுடிகின்றது. அதாவது, இராவனேஸ்வரனின் தம்பியின் பரம்பரையினர், இலங்கை இராசதானியில் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் இருந்து  வந்த பாணன் குலத்தைச்சேர்ந்த அந்தகன் ஒருவர், அரசன் முன்னிலையிலே யாழ் வாசித்து பரிசில் பெற்றான் என்றும் அவனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கமம் என்பதே மருவி, காலப்போக்கில் பனங்காமம் என்று பெயர் பெற்றுள்ளதாகவும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வாறு வரலாற்றுத்தொன்மை கொண்ட பனங்காமம், மற்றும் அதனை அண்டியப பழம் பெரும் விவசாயக் கிராமங்களான மூன்றுமுறிப்பு, வீரப்பராயர் குளம், இளமருதன்குளம், கொம்புவைத்தகுளம் போன்ற கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதையில், எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லை.

 மாறாக, மாலை நான்கு மணியில்இருந்து மறுநாள் காலைவரையும் காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பு, கிராமங்களில் கல்வி வசதிகள் எதுவுமில்லை. மருத்துவ வசதிகள், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் விவசாய விளை பொருட்களைச் சந்தைப்படுத்தவும் போக்குவரத்து வசதியில்லை.  சீரான வீதியின்மை என்ற போராட்டத்துக்கு மத்தியில் 20, 25 கிலோமீற்றர் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில், மேற்படி பழம் பெரும் கிராமங்களில் மீள்குடியேறி வாழ்ந்த 80 சதவீதமான குடும்பங்கள், அண்மைக் காலமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்துள்ளன.

இந்நிலையில், வருமானம் குறைந்த மற்றும் வறுமை நிலையில் வாழும் பல குடும்பங்கள், குறித்த கிராங்களில் வாழ்ந்து வருகின்றன. இங்கிருந்து பெருமளவான குடும்பங்கள் வசதி வாய்ப்புகளைத் தேடிச்சென்றுள்ள நிலையில், மேற்படி குடும்பங்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும் பிள்ளைகளின் கல்விக்காகவும் மருத்துவ தேவைகளுக்காகவும் அன்றாடம் பல்வேறு  துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனை விட, இரவு வேளைகளில் காட்டு யானைகளின் தொல்லை, வாழ்வாதார பயிர்களைப் பாதுகாக்க முடியாத நிலை, ஏனைய விலங்குகளால் தொல்லை உயிரச்சுறுத்தல்கள் என்று, பல்வேறு துன்பங்களை இக்கிராமங்களில் வாழும் மக்கள், அன்றாடம் எதிர்நோக்கி வருகின்னர்.

இங்கு, அபிவிருத்தி என்பதில் மின்சாரம் மாத்திரமே  98 சதவீதமான மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஏனைய தேவைகள் என்பது, இது வரை நிறைவேறியதாக கருதமுடியாது.  

இவ்வாறான கிராமங்களில், அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்து தருமாறு, மேற்படி கிராம மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .