2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மக்களுக்கு வைத்துள்ள ‘பரீட்சை’

எம். காசிநாதன்   / 2020 மார்ச் 16 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வயது 40 முதல் 45 வரை உள்ள இளைஞர்கள், அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்”.   
“தேர்தல் முடிந்த பிறகு, கட்சியில் பல்வேறு மட்டத்தில் உள்ள பதவிகள், அதிகம் தேவையில்லை”  

“நான் முதலமைச்சராக மாட்டேன்; வருங்கால முதலமைச்சர் ரஜினி என்று சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று, ரஜினி மூன்று முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். 
இந்த அறிவிப்புகள், தன்னை வளர்த்த ரசிகர் மன்றங்களை ரஜினி கைகழுவுகிறார் என்ற ஏமாற்றத்தையும் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

‘வருகிறார்... வருகிறார்’ என்ற ரஜினி, இப்போது வந்து விட்டார். ஆனால், அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வருவதற்கான எழுச்சியை, உருவாக்குவதற்கு வந்திருக்கிறார் என்று, எங்கும் நக்கலாகப் பேச்சும் விமர்சனங்களும் எழுவதற்குக் காரணமாகி விட்டார் ரஜினி.   

மொத்தத்தில், மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, எப்போது அரசியலுக்கு வருவேன் என்பதை, இந்தப் பேட்டி வாயிலாகவும் வெளிப்படையாக அறிவிக்காமலேயே, தனது ‘லீலா பலஸ்’ நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பேட்டியை முடித்து விட்டார் சூப்பர் ஸ்டார்.  

வரப்போகும் அரசியலுக்கு ‘மூன்று திட்டங்களை’ வித்தியாசமாக அறிவித்துள்ளார். அதில் முதலில் சொன்ன ‘ஆன்மீக அரசியல்’ பற்றி ஏதும் கூறிவிடவில்லை. 

இந்த மூன்றில் முதல் திட்டம், ‘தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன; இவை தேர்தலுக்குத் தேவை. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு தேவையில்லை; அது குறைக்கப்படும்’ என்று கூறுகிறார். 

அரசியல் கட்சிகளை, அதுவும் புதிதாக அரசியல் கட்சிகளை, இளைஞர்கள் இந்தக் காலத்தில் தேடி வருவதற்குப் பதவியே முக்கிய காரணி என்ற நிலையில், இந்த அறிவிப்பு ‘புதிய வரவுகளை’ விரட்டி அடிக்கும்.   

அது மட்டுமின்றி, ரஜினி ரசிகர் மன்றத்தை நேரடியாகப் பாதிக்கும் முடிவு ஆகும். அதனால்தான், இதற்கு முன்பு மாவட்ட செயலாளர்களிடம் பேசி விட்டு, “ஒரு விடயத்தில் எனக்கு ஏமாற்றம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்” என்று ரஜினி அறிவித்திருந்தார்.  

 ‘கட்சி பதவிகளைக் குறைக்கும் முடிவுக்கு’ ரஜினி மன்றத்திலிருந்து வந்த மாவட்ட செயலாளர்கள், எதிர்ப்புத் தெரிவித்திருக்கக் கூடும். அதைத்தான், தனக்கு ஏமாற்றம் என்று ரஜினி கூறினாரோ என்ற சந்தேகம், இப்போது ஏற்பட்டுள்ளது.  

 ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் குறியாக இருப்பது, ஏன் அதீத ஆர்வமாக இருப்பது ரஜினி மன்றத்தினர்தான். அவர்களால்தான் ரஜினி வாழ்ந்து வருகிறார். அந்த மன்றத்தில் இருப்பவர்கள், தங்களுக்குக் கட்சி பதவி கிடைக்கும் என்ற நோக்கில்தான் அரசியலுக்கு சூப்பர் ஸ்டாரை அழைக்கிறார்கள்; போஸ்டர் அடிக்கிறார்கள்.   ரஜினி ‘கட் அவுட்’களுக்குப் பால் அபிஷேகம் நடத்துகிறார்கள். 

ஆனால், இந்தக் கட்சிப் பதவி குறைப்புத் திட்டத்தால் பாதிக்கப்படுவது முதலில் ரஜினி ரசிகர் மன்றத்தினராகவே இருப்பார்கள்.  எம்.ஜி.ஆரே, தனது ரசிகர் மன்றங்களைக் கைவிட்டதில்லை. அரசியலுக்கு வந்த பிறகும் அவர், ரசிகர் மன்றத்தினருக்கு முன்னுரிமை கொடுத்தார்.  

 முசிறிபுத்தன் போன்றவர்களை, உலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவராகவே வைத்திருந்தார். எம்.ஜி.ஆரே கலைக்க நினைக்காத ரசிகர் மன்றத்தை, அரசியலுக்கு வரும் முதல் திட்டம் மூலம், ரஜினி கலைக்க நினைக்கிறார். அது அவருக்கு முதல் எதிரலைாக அமைந்துள்ளது.   

எடுத்த எடுப்பிலேயே, ரசிகர் மன்றத்தின் ஆதரவைப் பறிகொடுக்க ரஜினி ஏன் திட்டமிடுகிறார்? என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.  

இரண்டாவது திட்டம், “50 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குத்தான் 60 சதவீத இடங்களைக் கொடுப்பேன். 30 சதவீத இடங்களை, வேறு கட்சியிலிருந்து வருவோருக்குக் கொடுப்பேன்” என்பதாகும்.   

புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று விரும்பும் ரஜினி, வேறு கட்சியினருக்குப் பதவி கொடுப்பேன் என்று முதலிலேயே அறிவித்திருப்பதில் என்ன புதுமை? 

‘நேர்மையான அரசியல்’, ‘ஆன்மீக அரசியல்’ என்று பேசும் அவர், கட்சி தாவி வருவோருக்குப் பதவி என்று ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு மாறாகப் பேசியிருப்பது, அவரது தலைமைப் பண்புக்குச் சவாலாக அமைந்திருக்கிறது.   

தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் ஒரு மாற்று அரசியல் என்று முன்னிறுத்தி, செயற்பாட்டு அணுகுமுறை சரியாக இல்லை என்று, களத்துக்கு வரவிரும்பும் ரஜினி, “கட்சி தாவி வாருங்கள்; உங்களுக்குப் பதவி தருகிறேன்” என்று அழைப்பு விடுப்பது, இப்போதுள்ள அரசியல்வாதிகளை விட, எந்தவகையில் ரஜினி வித்தியாசமானவர் என்ற கேள்விக்கான பதிலை, இருட்டடிப்புச் செய்துள்ளது. அதை விட, ஆரோக்கியமான, மாண்புமிக்க ஜனநாயகத்தின் ஆணி வேரில் வெந்நீர் ஊற்றுவது போலாகும். 

இந்த அறிவிப்பின் மூலம், எப்போதோ அரசியலுக்கு வரப்போகும் ரஜினி, தன்னிடம் புதிய சரக்கு ஏதும் கொள்கை வடிவில் இல்லை என்பதை, வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறார்.   

இது, மாற்று அரசியலுக்கான நேர்மையான வழியாகத் தெரியவில்லை என்ற நினைப்பு அரசியல் பார்வையாளர்கள் மட்டத்தில் மட்டுமல்ல, நேர்மையான அரசியலை விரும்பும் பல நடுநிலையாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. 

கட்சிக்கும் ஆட்சிக்கும் வெவ்வேறு தலைமை என்று, மூன்றாவது திட்டத்தை ரஜினி அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டம், ஏதோ புதிய திட்டம் அல்ல. 

காங்கிரஸில் கூட இருந்தது. 2004 முதல் 2014 வரை கட்சிக்கு சோனியா காந்தி தலைவராக இருந்தார். ஆட்சிக்கு மன்மோகன்சிங் தலைவராக இருந்தார்.   

அதே போல் ஆட்சிக்கு வராமல், தான் சுட்டிக்காட்டிய நபரை, முதலமைச்சராக்குவது  புதிய கொள்கை அல்ல. அது, ஏற்கெனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பால் தாக்கரே கடைப்பிடித்து அமல்படுத்திய கொள்கைதான்.   

அவ்வளவு, ஏன் தமிழகத்திலேயே கூட, கட்சிக்கு ஜெயலலிதா தலைவராகவும் ஆட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைவராகவும் சில மாதங்கள் இருந்தது உண்டு. ஆகவே, ரஜினியின் மூன்றாவது கொள்கையும் புத்தம் புதிய வடிவம் அல்ல.   

மூன்று திட்டங்களும் இப்படியாக அமைந்து போக, அவர் இன்னொன்றையும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

ஆகவே, அறிவித்துள்ள மூன்று முக்கிய திட்டங்களும் ரஜினி ‘மாற்றத்துக்கான அரசியலைத் தருவார்’ என்பதை, மக்களுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கத் தவறி விட்டன.  

மாறாக, மக்களுக்கே நிபந்தனை விதித்துள்ளார் ரஜினி. “எனக்கு 71 வயது ஆகிறது. இப்போது மாற்றம் வரவில்லை என்றால், எப்போதும் வராது” என்று கூறி, “எழுச்சியை உருவாக்குங்கள்; வருகிறேன்”  என்பது, புதிதாக அரசியலுக்கு வருவோர் மீது, வரவேற்பை உருவாக்குமா என்ற நியாயமான அச்சம் ஏற்பட்டிருக்கிறது. 

அதுவும், நிபந்தனையை வாக்காளர்களுக்கு, அதாவது தமிழக மக்களுக்கு வைக்கிறார். காற்பந்தாட்டக் களத்துக்குள் வந்து, ‘கோல்’ அடிப்பதுதான் ஒரு கால்பந்து வீரருக்கு அழகு. அதை விடுத்து, ‘கோல் கீப்பர்’ எப்படி இருக்கிறார் என்று பார்க்கிறேன். பிறகு கால்பந்தாட்டக் களத்துக்குள் நுழைந்து விளையாடுகிறேன் என்று கூறுவது போல், ‘எழுச்சியை காட்டுங்கள்’ என்று நிபந்தனை அமைந்துள்ளது.   

மாற்றத்தைத் தர விரும்புபவர், முதலில் மக்களுக்கான தனது மாற்றத்துக்குரிய திட்டங்களை, ஜனநாயகம் என்ற களத்தில் விவாதத்துக்கு விட வேண்டும்.

நேற்றைய தினம், ரஜினி அறிவித்த கொள்கைகளில் ‘மக்களுக்கான திட்டங்கள்’ எதையும் சொல்லவில்லை; கட்சிக்கான திட்டங்களை மட்டுமே அறிவித்திருக்கிறார்.  

 அந்தத் திட்டங்களில் கூட, நேர்மையானதும் ஆரோக்கியமானதுமான ஜனநாயகத்துக்குத் தேவையான அரசியல் பண்புகளைக் கோடிட்டுக் காட்டவில்லை. 

ஆகவே, ‘வாருங்கள், எங்களுக்கு மாற்றத்தை தாருங்கள்’ என்று, மக்கள் ரஜினியை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, ரஜினிக்கு எதிரான அம்சமாக அமைந்து விடும்.   

தமிழக மக்களுக்கு, ரஜினி கற்றுக் கொடுக்க நினைக்கும் புதிய ஜனநாயக நடைமுறை, இதுவரை தமிழகம் கண்டதில்லை. “நான் மாற்றம் தருகிறேன்; இதுதான் மக்களுக்கான திட்டங்கள்; நல்லாட்சி தருகிறேன்; எனக்கு வாய்ப்பு அளியுங்கள்” என்றுதான், தமிழகத்தில் கட்சி தொடங்கிய தலைவர்கள் எல்லாம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 

பெரும் தலைவர்களாக இருந்த காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம், இப்படித்தான் மக்களிடம் சென்றார்கள்.   

ஆனால், சூப்பர் ஸ்டாரோ “நீங்கள் மாற்றத்துக்கு என்னை கூப்பிடுங்கள். பிறகு நான் வருகிறேன்” என்கிறார். இந்த அரசியல் எடுபடுமா என்பது, மிகப்பெரிய கேள்விக்குறி.  

ஆகவே, ரஜினி இன்னும் தமிழகத்துக்கு மாற்றம் தருவதற்கான அரசியல் களத்துக்கு நேரடியாக வரவில்லை. ‘அரசியல்’ என்ற வளாகத்துக்குள் நுழையாமல், வெளியில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டே, “மாற்றத்துக்கான எழுச்சி வரட்டும். பிறகு அரசியலுக்கு வருகிறேன்” என்கிறார்.   

அவர் கூறியிருப்பது போல், குபேரனாக இருக்கும் அ.தி.மு.கவையும் மாபெரும் சக்தியாக இருக்கும் தி.மு.கவையும் எதிர்கொண்டு, தன்னால் ஜெயிக்க முடியாது என்று தயங்குகிறார் ரஜினி.   

இவ்வளவுக்குப் பிறகும் ‘எழுச்சி பிறக்கட்டும்’ என்பது, வினோதமான அறிவிப்பாக அமைந்திருக்கிறது. மக்களுக்கு ‘நிபந்தனை’ வைத்து, பரீட்சை எழுதியிருக்கிறார் ரஜினி. இதில் அரசியலில் நுழைய, ரஜினிக்கு மக்கள் ‘பாஸ் மார்க்’ வாழங்குவார்களா என்பது கேள்விக்குறியே!    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X