2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’அறிக்கையைக் கோரி நீதிமன்றம் செல்வோம்’

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமூக மயப்படுத்துமாறு கோரும் உரிமை, தனக்கு உள்ளதெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க, இதை மறைப்பதற்கு, கோட்டாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், இது ராஜபக்ஷர்களின் குடும்பக் காணிப் பிரச்சினை தொடர்பான அறிக்கை இல்லை என்றார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (28)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, டிசெம்பர் 8ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் தலைவரான உபாலி அபேரத்னவால்  ஜனாதிபதியிடம் கைளியளிக்கப்பட்டது.

அதில், பல  புதுமையான விடயங்கள் நடந்துள்ளன எனத் தெரிவித்த அவர், அதை நாம் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவோம்.  இந்த அறிக்கை சமர்ப்பித்து இரண்டு வாரங்களின் பின்னர், 48 பக்கங்களையுடைய முழு அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில்தான், தான் உள்ளிட்ட 22 பேருக்கு எதிராக, அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைக்க வேண்டுமென்ற பரிந்துரையின் பிரகாரம், ஜனவரி 29ஆம் திகதி அக்குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை, ஏப்ரல் மாதத்துக்குள் முன்வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. 

'அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கையளித்த அறிக்கை எங்கே?  இதைப் பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு நான் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளேன். கட்சித் தலைவர் கூட்டத்திலும் அறிவித்தேன்' என்றார். 
'தகவலறியும் சட்டத்தின் ஊடாக அறிக்கையைக் கேட்டு, ஜனாதிபதி செயலகத்துக்கு விண்ணப்பித்துள்ளோம். இது தொடர்பில் மேன்முறையீடு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளதுடன், இதன் நகலையும் கோரியிருந்தோம். இதுவரை பதிலில்லை' என்றார்.

எனவே, இந்த அறிக்கையை சமூகமயப்படுத்துமாறு கோருவதற்கு, எமக்கு சாதாரண உரிமையுள்ளதெனத் தெரிவித்த அவர், இந்த அறிக்கை ராஜபக்ஷர்களின் குடும்பத்துக்கு சொந்தமான அறிக்கையல்ல; கையில் வைத்துக்கொண்டு ராஜபக்ஷர்கள் திரிவதற்கும், அதனை ஜனாதிபதி செயலகத்தின் 'அமாஸ்' பெட்டியில் மூடி வைத்து மறைக்க உங்களுக்கு உரிமையில்லை என்றார்.
மெதமுலனேயிலுள்ள  தமது பெரிய வீட்டைப் பிரிப்பது தொடர்பான பிரச்சினை எனில், அவ்வறிக்கையை உங்களுடன் வைத்துக்கொள்வதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஜனாதிபதி இந்த நாட்டுப் பிரஜைகளின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும் எனக் கேட்டுக்கொண்ட அவர்,  3 மாதங்களாக மறைப்பதற்கான காரணம் என்ன? எனவே, இந்த அறிக்கையை விரைவில் சமூக மயப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 
சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராகவும், அந்த அறிக்கையைக் கோரியும் ஒரு வாரத்துக்குள் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்த அவர், எவர் பயந்தாலும் அடிபணிந்தாலும், எங்களுடைய கட்சி அடிப்பணியாது, நாமும் அடிபணிய மாட்டோம் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X