2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாமரை மொட்டை கைவிடுகிறது கை?

Ilango Bharathy   / 2021 ஜூலை 22 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் அழுத்தம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப-தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சுதந்திரக் கட்சி ஆளுந்தரப்பால் ராஜபக்‌ஷ புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

சு.கவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற அக்கட்சியின் மத்தியச் செயற்குழு
கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என்றார்.

ஒன்று அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற
வேண்டும். இல்லை என்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர்களை தொடர்ந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கூறிவிட்டு,
கட்சியின் ஏனையவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி கட்சியைக் கட்டியெழுப்ப
வேண்டுமெனவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்றார்.

அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும், அரசாங்கத்தில் நம்மை
இணைத்துக்கொள்ளவில்லை. அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு
நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் இறுதியில் எமக்கு
என்ன கிடைத்தது எனவும் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ இதன்போது
வினவியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆயிரத்துக்கும் அதிகமான பிரதேசசபை
உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அபிவிருத்தித் திட்டங்களை
முன்னெடுப்பதற்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்வதில்லை எனவும் தெரிவித்த அவர்,
ஆளுங்கட்சியினருக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, 20
இலட்சம் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்குகின்ற போதிலும், சு.கவினருக்கு
அந்த நிதி கிடைப்பதில்லை என்றும் அங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களை சு.கவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி
ஜயசேகர வெளிப்படையாகக் கூறினார். அதன் பின்னர் அவரை ஆளுங்கட்சியினர்
விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். எமது கட்சியில் உள்ள எவரும் தயாசிறிக்கு
ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசாங்கத்தில் நீங்கள் இருங்கள். நாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகி,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகப் பணியாற்றுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்,
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் பிரதான பங்காளி, கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .