2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனுதாரரிடம் இரகசிய விசாரணை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பிலான வழக்குகளில் மனுதாரர்களில் ஒருவரான கந்தசாமி பொன்னம்மாவிடம் அரச தரப்புச் சட்டத்தரணியினால் இரகசியமாக குறுக்கு விசாரணைகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், இவ்வழக்கு மே மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முல்லைத்தீவு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் ஆனந்தராஜா புதன்கிழமை (02) உத்தரவிட்டார். 

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களான கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, அனந்தி சசிதரன், கந்தசாமி பொன்னம்மா ஆகியோரினால் 2009 ஆம் ஆண்டில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
தொடர்ந்து இவ்வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 5 தடவைகளும் அரச சட்டத்தரணி மன்றிற்குச் சமூகமளிக்காத காரணத்தினால் நீதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில், குறித்த வழக்கு புதன்கிழமை (02) நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்புச் சட்டத்தரணி மன்றில் ஆஜராகியிருந்தார். இதன்போது, ஐந்து மனுதாரர்களில் நால்வரை விடுத்து கந்தசாமி பொன்னம்மா என்பவரிடம் மட்டும் தனியான குறுக்கு விசாரணைகளை அரச சட்டத்தரணி மேற்கொண்டார்.

இதன் பின்னர் குறித்த வழக்கினை நீதிபதி ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X