2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2012இல் அனைவருக்கும் மின்சாரம்!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மின்சாரம் இல்லையேல் நம் வாழ்க்கையே பாழ் என்ற இன்றைய நிலையில், அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தினை நோக்கி இலங்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இவ்விடயம் தொடர்பாக அண்மையில் குறிப்பிடும்போது ‘4593 மின்சார திட்டங்களை 2012ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். இத்திட்டத்தின்மூலம் 2012இல் அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மொறட்டவை பல்கலைக்கழகத்தில் மின்னியல்துறை பொறியியலாளராக பட்டம்பெற்ற பாட்டாளி சம்பிக்க ரணவக்க, இலங்கை மக்களுக்கு எவ்வகையிலான மின்சார தீர்வுகள் தேவை என்பதை நன்குணர்ந்து வைத்திருக்கின்றார். ஏற்கனவே இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியபோதும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தவகையில் இயற்கைக்கு பாதிப்பில்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் பல வழிமுறைகளை அமைச்சர் தற்சமயம் அறிமுகப்படுத்தி வருகின்றார்.

அதன் முதற்கட்டமாக ஏற்கனவே அரசினால் ஆரம்பிக்கப்பட்ட காற்றலை மின்னுற்பத்தி மிகவும் முக்கிய இடம்வகிக்கிறது. பொதுவாக இலங்கையினை பொறுத்தமட்டில் காற்றோட்டமான தீவு என வர்ணிக்கப்படுகிறது. எப்பொழுதும் காற்றின் வேகம் சீராகவே காணப்படும் அழகான தீவுதான் இலங்கை. இந்த கருப்பொருளை மையமாகக்கொண்டு, காற்றலை மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு அரசு தயாராகியிருக்கிறது.

புத்தளம்- முள்ளிபுரத்தில் இரண்டு காற்றலை மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. சுமார் 4,250 மில்லியன் ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இம்மின்னுற்பத்தி நிலையம் மூன்றரை கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டது. அண்மையில் இந்த காற்றலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு சென்றிருந்தபோது அதன் முகாமையாளர் சமிர புத்தி குணவர்த்தனவிடம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

‘இந்த காற்றலை மின்னுற்பத்தி நிலையத்தில் 25 காற்றலைகள் இருக்கின்றன. இவற்றினை இரண்டு தளங்களாக பிரித்திருக்கின்றோம். முதலாவது செகுவந்தீவு காற்றலை மின்னுற்பத்தி நிலையத்தில் 12 காற்றாடிகள் இருக்கின்றன. இரண்டாவதாக விதானைமுனை காற்றலை மின்னுற்பத்தி நிலையத்தில் 13 காற்றாடிகள் இருக்கின்றன. தலா ஒவ்வொரு காற்றாடியிலிருந்தும் ஆகக்கூடியளவாக 800 கிலோவோற்ஸ் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். அதற்கமைய இந்த 25 காற்றாடிகளிலிருந்தும் 20 மெகாவோற்ஸ் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியம் இருக்கிறது…’ என அவர் குறிப்பிட்டார்.

சமிர புத்தி குணவர்த்தனவின் கூற்றுப்படி, புத்தளம் பிரதேசத்திற்கான மின்சார தேவையினை பூர்த்திசெய்யக்கூடிய மின்சாரத்தினை இந்நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறியமுடிகிறது. செகுவந்தீவு, விதானமுனை ஆகிய இரண்டு காற்றலை மின்னுற்பத்தி நிலையங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் கல்லடி மின்சாரசபைக்கு வழங்கப்படுகிறது. அங்கிருந்து கலாவத்தை, ஆனைமடு போன்ற பிரதேசங்களுக்கும் ஏனைய புத்தளம் மாவட்ட பிரதேசங்களுக்கும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவக்காற்றினை மையமாகக்கொண்டே இந்த காற்றலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக புத்தளம் மாவட்டம் அதீத காற்றோட்டத்தினை கொண்ட மாவட்டம் என்பதால், காற்றலைகள் சீராக இயங்குவதற்கு வழி கிடைக்கின்றன. ஒரு காற்றலையிலிருந்து அதன் அதிகூடிய உற்பத்தியான 800 கிலோவோற்ஸ் மின்சாரத்தினை பெறவேண்டுமானால் செக்கனுக்கு 12 மீற்றர் வேகம் என்ற அடிப்படையில் காற்றின் வேகம் இருக்க வேண்டும். செக்கனுக்கு 12 மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசுமானால் இந்த 25 காற்றலைகளிலிருந்தும் 20 மெகாவோற்ஸ் மின்சாரத்தினை நாளொன்றுக்கு பெறக்கூடிய சாத்தியமிருக்கிறது. செக்கனுக்கு 3.5 மீற்றர் வேகத்திற்கு குறைவாக காற்று வீசினால் தானாகவே காற்றாடிகள் இயங்குவது நின்றுவிடும். தற்போதைய புள்ளிவிபரத்தின்படி இந்த காற்றலை மின்னுற்பத்தி நிலையத்தில் சராசரியாக செக்கனுக்கு 11.3 மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசுகிறது. ஆகையினால் இவர்கள் எதிர்பார்ப்பதுபோல் பூரண மின்னுற்பத்தியினை இந்த நிலையங்களிலிருந்து பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

ஒரு காற்றாடியின் உயரம் 60 மீற்றர்களாகும். ஒரு காற்றாடியில் மூன்று செட்டைகள் இருக்கின்றன. ஒவ்வொரு செட்டையும் 27 மீற்றர் நீளம் கொண்டவை. ஒரு தடவை இந்த காற்றாடி சுழலும்போது 59 மீற்றர் விட்டத்தினை உருவாக்குகின்றது. இந்த பிரம்மாண்ட காற்றாடிகள் இயங்குவதற்கு முற்றுமுழுதாக காற்றின் சக்தியே பயன்படுத்தப்படுகிறது என்பது சிறப்பானதாகும். இந்த காற்றாடிகள் இயங்குவதால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. காற்றாடி சுழலுகின்ற சத்தமும் மிகக் குறைவானதே. ஆகையினால் சூழல் பாதிப்பில்லாமல் மின்சாரம் தயாரிக்கின்ற இலகுவான முறை காற்றலை மின்னுற்பத்தியே என அங்கு கடமையாற்றுகின்ற பொறியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டதுபோல் '2012ஆம் ஆண்டு அனைவருக்கும் மின்சாரம்' என்ற தொனிப்பொருளை மெய்யாக்குமுகமாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக காற்றலை மின்னுற்பத்தி நிலையங்களை ஹம்பாந்தோட்டையிலும் நிறுவவுள்ளனர். அதேபோல் மலையகத்தின் சில காற்றழுத்தமிக்க பகுதிகளிலும் காற்றலை மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவவுள்ளனர். அமைச்சரின் மற்றுமொரு கூற்றுப்படி 2020ஆம் ஆண்டளவில் 1,000 மெகாவோற்ஸ் மின்சாரம் கிடைப்பதற்காக இப்பொழுதே அடித்தளங்கள் இட்டுவருகின்றமை சிறப்புக்குரியதே.

-மதுமதி

Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0

  • shan Monday, 30 August 2010 10:59 AM

    திட்டமும் நல்லம் செயலும் நல்லம், நடந்தால் வெற்றிதான். ஆனால் மின்சார கட்டணம் இரண்டு மடங்கா கூடாமல் இருந்தா நல்லம் பாருங்கோ? எப்போ கூடின கட்டணம் குறையும் திட்டம் அமுலுக்கு வரும்...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .