2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்ணீருடன் விடைபகர்ந்தார் டோட்டி

Editorial   / 2017 மே 30 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி கால்பந்தாட்ட ஜாம்பவானா பிரான்ஸெஸ்கோ டோட்டி, கண்ணீருடன் விடைபகர்ந்தார். தனது வாழ்நாளில் ஒரேயொரு கழகத்துக்காக மட்டும் விளையாடிய டோட்டி, றோமா கழகத்துக்கான தனது இறுதிப் போட்டியில், நேற்று முன்தினம் (28) விளையாடியிருந்தார்.  

ஜெனோவுக்கெதிரான குறித்த போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற றோமா, “சீரி ஏ” தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்று, சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில் தமது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.  

இப்போட்டியின் 54ஆவது நிமிடத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய டோட்டி, றோமாவில் அவர் இறுதியாக விளையாடிய போட்டியை நினைவுபடுத்தும் முகமாக இடம்பெற்ற பரிசளிப்பில் கண்ணீர் மல்கியிருந்தார். பரிசளிப்பின்போது, டோட்டியின் சீருடை இலக்கமான 10 என்ற இலக்கம் பதிக்கப்பட்ட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டிருந்தது.  

தனது 16ஆவது வயதில், றோமாவில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட, தற்போது 40 வயதாகும் டோட்டி, றோமாவுக்காக 786 போட்டிகளில் விளையாடி, 307 கோல்களைப் பெற்றுள்ளார். றோமா சார்பாக அதிக போட்டிகளில் விளையாடியவர், அதிக கோல்களைப் பெற்றவர் டோட்டி ஆவார். இது தவிர, 25 “சீரி ஏ” பருவகாலங்களில் டோட்டி விளையாடியுள்ளார். டோட்டி தவிர ஏ.சி மிலன் கழகத்தின் பலோலோ மல்டினி மட்டுமே, 25 “சீரி ஏ” பருவகாலங்களில் விளையாடியுள்ளார்.  

இனி, றோமாவின் பணிப்பாளராக டோட்டி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், கடந்த வாரத் தகவல்களின்படி, வேறு எங்காவது டோட்டி விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இப்பருவகால “சீரி ஏ” தொடரின் இறுதி நாளிலேயே டோட்டியின் றோமாவுக்கான இறுதிப் போட்டி இடம்பெற்ற நிலையில், ஜுவென்டஸ் ஏற்கெனவே சம்பியனான நிலையில், றோமா இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, நாப்போலி நான்காமிடத்தைப் பெற்றது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X