2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

லா லிகாவை நெருங்கியது றியல் மட்ரிட்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 18 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் சம்பியன் கிண்ணத்தை,  றியல் மட்ரிட் நெருங்கியுள்ளது. இலங்கை நேரப்படி, நேற்று (18) அதிகாலை இடம்பெற்ற செல்டா விகோவுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றமையைத் தொடர்ந்தே, லா லிகா சம்பியன் கிண்ணம், றியல் மட்ரிட்டின் எட்டும் தூரத்துக்கு வந்துள்ளது.  

இப்போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே கோலொன்றைப் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆரம்பத்திலேயே றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கினார். ரொனால்டோ பெற்ற இக்கோலானது, ஐரோப்பாவின் முன்னணி ஐந்து லீக்குகளான, ஸ்பெய்னின் லா லிகா, இத்தாலியின் “சீரி ஏ”, இங்கிலாந்து பிறீமியர் லீக், பிரான்ஸின் “லீக் 1”, ஜேர்மனியின் புண்டெலிஸ்கா ஆகியவற்றில், அவர் பெறும் 367ஆவது கோலாகும். இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக 84 கோல்களைப் பெற்ற ரொனால்டோ, றியல் மட்ரிட்டுகாக 283 கோல்களைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம், ஐரோப்பாவின் முன்னணி ஐந்து லீக்குகளில், 1971ஆம் ஆண்டு, 366 கோல்களைப் பெற்று, அதிக கோல்களைப் பெற்ற சாதனையைப் படைத்த, செல்சி, ஏ.சி மிலன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்காக விளையாடிய இங்கிலாந்து வீரரான ஜிம்மி கிறீஸ்வின் சாதனையை ரொனால்டோ முறியடித்தார்.  

இதன் பின்னர், போட்டியின் 48ஆவது நிமிடத்தில், இஸ்கோவிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய ரொனால்டோ, றியல் மட்ரிட்டின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இதைத் தொடர்ந்து, போட்டியின் 69ஆவது நிமிடத்தில், செல்டா விகோவின் ஜோன் கிடாட்டி ஒரு கோலைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, போட்டியின் 70ஆவது நிமிடத்தில், மார்ஷெலோவிடமிருந்து பந்தைப் பெற்ற கரிம் பென்ஸீமா ஒரு கோலைப் பெற்றதோடு, போட்டியின் 88ஆவது நிமிடத்தில் டொனி க்றூஸ் பெற்ற கோலோடு, 4-1 கோல் கணக்கில், இறுதியில் றியல் மட்ரிட் வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில், 90 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு றியல் மட்ரிட் உயர்ந்துள்ளது. 87 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனா உள்ளது.

ஆக, அடுத்த போட்டியில் சமநிலை முடிவைப் பெற்றாலே, 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதன்முறையாக, லா லிகா சம்பியன் கிண்ணத்தை றியல் மட்ரிட் கைப்பற்றும். அடுத்த போட்டியில் றியல் மட்ரிட் தோல்வியடைந்தால் கூட, பார்சிலோனா தனது இறுதிப் போட்டியில் வெற்றிபெறாவிட்டால், சம்பியன் பட்டத்தை றியல் மட்ரிட் கைப்பற்றும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .