2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

15 சிக்ஸர்களை விளாசி, ஷேன் வட்ஸன் உலக சாதனை

Super User   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுளால் வெற்றியீட்டியது.  அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வட்ஸன் ஆட்டமிழக்காமல் 185 ஓட்டங்களைக் குவித்தார்.

மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமீம் இக்பால் இம்ருள் காயீஸ் ஆகியோர் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

முஸ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்றார்.  சஹாரியர் நபீஸ் 56 ஓட்டங்களையும் முஹ்மதுல்லா 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் மிட்சல் ஜோன்ஸன் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியில் பிரட் ஹாடின் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால், ஷேன் வட்ஸன் அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். 96 பந்துவீச்சுகளை எதிர்கொண்ட அவர்  ஆட்டமிழக்காமல் 185 ஓட்டங்களைப் பெற்றார். இவற்றில் 15 சிக்ஸர்கள் 15 பௌண்டரிகள் ஆகியனவும் அடங்கும். ரிக்கி பொன்டிங் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணியின் உபதலைவர் வட்ஸனின் 15 சிக்ஸர்கள், ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் புதிய சாதனையாகும். இதற்குமுன் மேற்கிந்திய வீரர் ஷேவியர் மார்ஷல் 2008 ஆம் ஆண்டு கனேடிய  அணிக்கு எதிராக 12 சிக்ஸர்களை அடித்தமையே உலக சாதனையாக இருந்தது.

அதேவேளை, வட்ஸனின் 185 ஓட்டங்கள் ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் அவுஸ்திரேலிய வீரரொருவர் பெற்ற அதிககூடிய ஓட்டங்களாகும். இதற்குமுன் 2007 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக மத்தியூ ஹைடன் 181 ஓட்டங்களைப் பெற்றமையே ஆஸி வீரர் ஒருவரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 26 ஓவர்களில்  வெற்றி இலக்கை அடைந்தது. இத்தொடரின் முதலாவது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது. இதனால் 3  போட்டிகள் கொண்ட இத் தொடரின் வெற்றியையும் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

3 ஆவது போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X