2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் டொன் பொஸ்கோ சம்பியன்

Super User   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுப்போட்டியில் நீர்கொழும்பு டொன் பொஸ்கோ கழகம் சம்பியனாகியுள்ளது. டயலொக் டெலிகொம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த திங்கட்கிழமை இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைமையத்தில் நடைபெற்றது.

ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உபதலைவரும் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினருமான மணிலால் பெர்னாண்டோ, டயலொக் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி நௌஸாட் பெரேரா, சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு சிரேஷ்ட முகாமையாளர் ரிஸ்வி ஸரூக், இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளன தலைவர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிருஷாந்த பெரேரா உட்பட பலர் இவ்வைபவத்தில் பங்குபற்றினர்.

இச்சுற்றுப்போட்டி கடந்த ஜுலை மாதம் முதல் நடைபெற்றது. 12 அணிகள் தலா 22 போட்டிகளில் பங்குபற்றின. மொத்தமாக 132  போட்டிகள் நடைபெற்றன.

இவற்றில் டொன் பொஸ்கோ கழகம் 13 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பெற்றது. 5 போட்டிகள் சமநிலையில் முடிவுற்றன. இதனால் அக்கழகம் 44 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டிலிருந்தே இக்கழகம் சம்பியன்ஸ் லீக் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவக் கழகம் 42 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது.

ரட்ணம் கழகம் மற்றும் இலங்கை பொலிஸ் கழகம் ஆகியன தலா 41 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றன.

இவ்வருடமும் முறையான ஆட்டத்திற்கான விருதை இராணுவ கழகம் பெற்றுக்கொண்டது. அதிக கோல்களை அடித்த வீரருக்கான தங்கப் பாதணி விருது இராணுவ கழகத்தைச் சேர்ந்த இளம் வீரரரான  மொஹமட் நௌபர் மொஹமட் இஸ்ஸடீன் பெற்றுக்கொண்டார்.அவர் இச்சுற்றுப்போட்டியில் 20 கோல்களை அடித்திருந்தார்.

சம்பியனான டொன் பொஸ்கோ அணிக்கு 7 லட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாமிடத்தைப் பெற்ற இராணுவ கழகத்திற்கு 5 லட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன் கிண்ணத்தை டொன் பொஸ்கோ கழக அணித்தலைவர் மஞ்சுள குமாரவிடம் டயலொக் நிறுவன பிரதம சந்தைப்படுத்தல் நௌஸாட் பெரேரா கையளிப்பதை படத்தில் காணலாம். டயலொக் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு சிரேஷ்ட முகாமையாளர் ரிஸ்வி ஸரூக், இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளன தலைவர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர எம்.பி., சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிருஷாந்த பெரேரா ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .