2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெற்றுக் கொண்ட வெற்றி, முக்கியமான வெற்றியாக அமைந்தது என, பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹ்மட் தெரிவித்ததோடு, பந்துவீச்சாளர்களுக்கும் களத்தடுப்பாளர்களுக்கும், பாராட்டுச் சேர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், தமது முதலாவது போட்டியில், இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, படுமோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. இதனால், உலகின் முதல்நிலை ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியான தென்னாபிரிக்க அணிக்கெதிராக, பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் இல்லையென்றே கருதப்பட்டது.

எனினும், முதலில் பந்துவீசப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, பலமான தென்னாபிரிக்க அணியை, 6 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்கள் நிலைக்குக் கொண்டு வந்ததோடு, இறுதியில் தென்னாபிரிக்க அணியால், 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களையே பெற முடிந்தது.

துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 75 (104), குயின்டன் டீ கொக் 33 (49), கிறிஸ் மொறிஸ் 28 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹஸன் அலி 3 விக்கெட்டுகளையும் ஜுனைட் கான், இமாட் வசீம் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

220 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டியைக் கொண்டு நடத்த முடியாமல் போக, டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில், போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதன்போது, பாகிஸ்தான் அணி, 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் பக்கார் ஸமான் 31 (23), பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 31 (51) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பும், முன்னேற்றமடைந்து காணப்பட்டது. அது குறித்துக் கருத்துத் தெரிவித்த சப்ராஸ் அஹ்மட், “அனைத்துத் துறைகளிலும், நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டோம். முன்னைய போட்டியில், நாங்கள் சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. [களத்தடுப்புப் பயிற்றுநர்] ஸ்டீவ் றிக்சன், மகிழ்ச்சியாக இருப்பார்” என்று தெரிவித்தார்.

போட்டியின் நாயகனாக, ஹஸன் அலி தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .