2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையைத் தோற்கடித்தது தென்னாபிரிக்கா

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு  கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களுடன் தடுமாற்றத்தை வெளிப்படுத்திய போதிலும், டேவிட் மில்லர், றயன் மக்லரன் இருவரும் 8ஆவது விக்கெட்டுக்காக 49 பந்துகளில் பிரிக்கப்படாத 69 ஓட்டங்களைக் குவித்தனர்.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக டேவிட் மில்லர் 72 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களையும், ஏ.பி.டி.வில்லியர்ஸ் 72 பந்துகளில் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அஜந்த மென்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், லசித் மலிங்க ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

224 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 3 விக்கெட்டுக்களை இழந்து 16 ஓட்டங்களுடன் தடுமாறிய இலங்கை சார்பாக 4வது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டு, அவ்வணி 7 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களுடன் தடுமாறியது.

அதன் பின்னர் திஸர பெரேரா தனித்து நின்று பேராடினார். குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஓவரொன்றில் பெறப்பட்ட 2வது அதிகூடிய ஓட்டங்களான 35 ஓட்டங்களைக் குவித்த திஸர பெரேரா, 49 பந்துகளில் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கையின் வெற்றி வாய்ப்பு இல்லாது பொனது.

அவர் தவிர, டினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக லொன்வபோ சொற்சொபி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், பர்ஹான் பெஹர்டியன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், றயன் மக்லரன், ஜே.பி.டுமினி, றொபின் பீற்றர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக டேவிட் மில்லர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X