2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மு.கா பேசாமல் இருந்தால், 'ஐ.தே.க, சு.க வும் அந்நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பற்றிப் பேசுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கிகரிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பற்றி அக்கட்சி பேசாமல் அமைதியாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அந்நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி எதையும்; வழங்காமல் மௌனமாகி விடுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக வடக்கு, கிழக்கில் மு.கா உரத்துப் பேசினால் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி ஏற்படும் எனவும்; வடக்கு, கிழக்குக்கு வெளியில் பேசினால் பெரும்பான்மையினச் சமூகத்தின்; மத்தியில் அதிருப்தி ஏற்படும் எனவும் நினைத்து அந்த இரண்டு சமூகங்களையும் திருப்திப்படுத்தினால், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரின் நிதி ஒதுக்கீட்டில் சமூக அமைப்புகளுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'நாட்டில் எதிர்வரும் ஆண்டில் சட்ட ரீதியான பல மாற்றங்கள் முன்மொழியப்படவுள்ளன. இச்சூழ்நிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி மு.கா தலைமைத்துவம் தெளிவாகப் பேச வேண்டும். அவர்கள் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது மிகவும் கவலையான விடயம்' என்றார்.  
 
'குறிப்பாக, எதிர்வரும் ஆண்டில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும்  தொகுதிவாரியான நாடாளுமன்றத் தேர்தல்  சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பாக திருத்தங்களைக் கொண்டுவந்து தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்க முடியுமாயின், அதையும் செய்ய வேண்டும்.

ஜனநாயக ரீதியாகப் போராட்டங்கள் நடத்தி தொகுதிவாரியான நாடாளுமன்றத் தேர்தல் முறைச் சட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை மு.கா முன்னின்று செய்ய வேண்டும். அதற்கு எம்மால் இயன்ற முழுப் பங்களிப்பையும் வழங்குவோம்.
 
இச்சட்டமூலத்தைக் தடுக்காமல் இருந்தால், நாம்; முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.  இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் முகவரியைக் கூட தொலைத்துவிடக்கூடிய நிலை ஏற்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .