2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை முன்னேற்றுவதில் சுவீடன் ஆதரவு’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 மே 25 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால யுத்தம் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகிய பெண்களை முன்னேற்றுவதில் சுவீடன் அரசாங்கமானது அதிக ஆதரவாக  உள்ளது என சுவீடன் நாட்டின் இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கான அரசியல் விவகாரங்களுக்கான கவுன்ஸிலர் அன்னா உக்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும்; மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனமான வீ எபெக்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டப வளாகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பெண்களை ஊக்குவிக்கும் சந்தைக் கண்காட்சியும் மற்றும் விற்பனையும் இங்கு ஒன்பதாவது வருடமாக நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

'சுவீடன் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் ஊடாக இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் வெற்றியளித்துள்ளன என்பதையே இத்தகைய கண்காட்சி வெளிப்படுத்தி நிற்கின்றது' என்றார்.

'மேலும், பெண்களை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அத்தனை கருமங்களிலும் நாம் கைகோர்த்து ஆதரவுக்கரம் நீட்டியிருக்கின்றோம்.

'அதன் அடிப்படையில் இந்த மாதிரியான வாழ்வாதார தொழில் முயற்சி ஊக்குவிப்பு மற்றும் சந்தை வாய்ப்புத் திட்டங்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்டுப் போயிருக்கின்ற பெண்களையும் அவர்களின்; குடும்பங்களையும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்த பெருந்துணை புரியும் என்பது எமது நம்பிக்கை.

'வறுமை ஒழிப்பிலும் அபிவிருத்தியிலும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அந்த வகையில், இந்த வகையான திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும் என்பது எமது அரசாங்கத்தின் நம்பிக்கை ஆகும்.

'பாதிப்புக்குள்ளான இலங்கைப் பெண்களை முன்னேற்றுவதில் நாம் இலங்கை அரசாங்கத்தின் பெண்களுக்கான வலுப்படுத்தல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.
இனிமேலும் பெண்களை வலுவூட்டுவதிலும் இன்ன பிற அபிவிருத்தித் திட்டங்களிலும் நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .