2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையில் உள்ள 18 மாநகரங்களில் மட்டக்களப்பு மாநகரமே இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது –முதலமைச்சர் கவலை

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எல்.தேவ்)


இலங்கையில் 18 மாநகரங்கள் இருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாநகரமே இருள் சூழ்ந்த நிலையில் மிக மோசமான மாநகரமாக காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற, சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மின் விநியோகம் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

மிக நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கிய ஒரு நிறுவனமான இலங்கை மின்சாரசபை இன்று தான் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மின்சாரத்தையும் மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு நெருக்கடியினை சந்தித்துவருகின்றது. இது தொடர்பில் மக்கள் பல்வேறு பட்ட முறைப்பாடுகளை தினமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மின்சார சபையில் நான் பிழை காணும் விடயம் உள்ளது. என்னவென்றால் இலங்கையில் 18 நகரங்கள் உள்ளது. அதில் மட்டக்களப்பும் ஒரு மாநகரம். என்னவென்றால் இலங்கையில் உள்ள மாநகரங்களில் மட்டக்களப்பு மாநகரம் தான் இலங்கையிலேயே மிகவும் இருள் சூழ்ந்த மாநகரமாக காணப்படுகின்றது.

இரவு நேரங்களில் மிக மோசமான ஒரு நிலையை எமது மாவட்டம் தாங்கி நிற்கின்றது. இரவு வேளைகளில் வீதிகளில் மாடுகள் நின்றால் கூட தெரியாத நிலையே காணப்படுகின்றது. இது மட்டக்களப்பு மாநகரசபையின் குறைபாடாகவும் காணப்படுகின்றது. இருந்தாலும் மின்சாரசபை அதிகூடிய கவனம் செலுத்தி பிரதான வீதியிலாவது மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏனென்றால் திருகோணமலையில் இருந்து பொலநறுவை ஊடாக மட்டக்களப்புக்கு வரும் போது பொலநறுவையில் ஒவ்வொரு மின் கம்பத்திலும் மின்குமிழ்கள் எரிவதைக் காணலாம். ஆனால் மட்டக்களப்பை அடைந்தால் அவ்வாறான ஒரு நிலையினை காணமுடியாது. ஒன்றுமே இராது.

ஆகையினால் இது ஒரு மோசமான பிரச்சினையாக காணப்படுகின்றது. எனவே இங்குள்ள கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் உட்பட மாவட்ட முகாமையாளர் இதற்கு கூடிய கவனம் செலுத்தி உங்களின் திணைக்களத்தின் ஊடாகவும் அரசியல்வாதிகள் ஒதுக்கும் நிதியினைக்கொண்டும் மிக விரைவாக ஏனைய மாநகரங்களைப் போல் மட்டக்களப்பு மாநகரத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய மின்சார சபையின் கிழக்குமாகாண பிரதி பொது முகாமையாளர் தவனேஸ்வரன்,

இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட மின் தடங்கள்களுக்கு மிக விரைவில் தீர்வினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்காக வாழைச்சேனை ஊடாக மட்டக்களப்புக்கு புதிய இணைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.அவை பூர்த்தியாகும் பட்சத்தில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் மின்சார வினியோகம் தொடர்பிலான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அத்துடன் வவுனதீவு பிரதேசத்தில் புதிய மின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான இடம் தொடர்பிலேயே தற்போது சில சிக்கல்கள் காணப்படுகின்றன.

அந்த சிக்கல்கள் நீக்கப்படும் பட்சத்தில் வவுனதீவில் அமைக்கப்படும் மின்நியைலத்தின் மூலமும் மட்டக்களப்புக்கு மின்சாரம் கொண்டுவரப்படும்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசத்திலும் மின் வினியோகம் தொடர்பில் ஏதேனும் கோரிக்கை இருப்பின் அது தொடர்பில் எழுத்து மூலமாக எமக்கு தெரிவிக்கலாம்.

அவற்றுகான தீர்வை விரையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில பகுதிகளில் புதிய பிரதேசங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு மின்சாரம் வழங்குவதில் பல சிக்கல்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அமைக்கப்படும் பிரதேசம் தொடர்பில் சரியான வரைவுகள் அறிக்கைகள் கிடைக்குமாயின் மின் திட்டங்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.

தற்போது நிதி கிடைத்துள்ளதால் அவ்வாறான அறிக்கைகளை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மின்சார விநியோகம் தொடர்பிலும் மின்சாரத்தை வழங்குதற்கு ஏதிராக இருக்கும் காரணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வூ காணப்பட்டது.

மாவட்ட உதவி அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திகாந்தன், கிழக்கு மாகாண போக்குவரத்து மின்சார மற்றூம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண உதவி பொதுமுகாமையாளர் தவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X