2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.வதனகுமார்)

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான எம்.ஐ.உவைஸ் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையிலும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்கவின் வழிகாட்டலின் கீழும் இவர் ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாக பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிவந்துள்ள சந்தேகநபர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை, வவுணதீவு, ஏறாவூர் பிரதேசங்களில் உள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மற்றும் ஏழை மக்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று, அங்கு பெற்றோல் விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவோரிடம் தான் பொலிஸ் என அடையாளம் காட்டி மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் மீது பொற்றோல் விற்பனையில் ஈடுபட்டது களவாக மின்சாரம் பெற்றது தொடர்பில் வழக்குத் தொடரப்போவதாகவும் பணம் தந்தால் வழக்கு தொடராது சமாளிப்பதாகவும் அந்த மக்களை மிரட்டியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் இவர் தொடர்பில் வவுணதீவு பகுதியில் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், அவரது சொந்த இடமான மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் உள்ள சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில்வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த கான்ஸ்டபிள் கடந்த மூன்று மாதமாக கடமைக்கு செல்லவில்லையெனவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை ஒருங்கிணைத்துவருவதாக தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் வவுனதீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.உவைஸ் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .