2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தை அரசுடைமையாக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்)

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தினை அரச உடமையாக்கி அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி இன்று மண்டூரில் பேரணியொன்று நடத்தப்பட்டு வெல்லாவெளி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இப்பேரணியில் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் அதிகாரிகளே இவ் ஆலய சொத்தை அரச சொத்தாக மாற்றுங்கள், ஊழல் நிறைந்த நிருவாகம் மாறவேண்டும். மண்டூர் முருகன் ஆலயம் சமூகத்துக்கு என்ன பணிசெய்கிறது? கணக்காளர்களே கணக்கு வழக்குகள் எங்கே? ஊழல் நிருவாகம் வேண்டாம் போன்ற வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

12ஆம் நூற்றாண்டில் உருவான ஆலயத்திற்கு ஒரு கணக்கறிக்கையோ, யாப்புகளோ, இல்லை என்பதுடன் வங்கிக்கணக்கு கூட இல்லை. அது போன்ற பல்வேறு குறைபாடுகள் இவ் ஆலயத்தில் உள்ளன. அதனால் எமது ஆலயத்தினை அரச சொத்தாக மாற்றி அனைவரும் பயன் பெறும் வகையில் செயற்படுத்துங்கள் என பேரியில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக கணக்குகள் எதுவும் காண்பிக்கப்படாமலும், நிருவாகத்தில்  மாற்றங்கள் எதுவும் இல்லாதிருப்பதால், அதில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதுடன், நிதி சார்ந்த முறைகேடுகள் நிறுத்தப்பட்டாகவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "இலங்கைத் திருநாட்டிலே புகழ்பூத்த ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

இது தவிர கந்தசஷ்டி, கார்த்திகைத்திருவிழா, பிள்ளையார் விரதம் போன்றவையும் நடைபெறுகின்றன. விழாக்களின் போது பல பிரதேசங்களிலுமிருந்தும் மக்கள் வருகின்றபோதும் மக்களுக்கான எவ்வித வசதிகளும் நிருவாக சபையினரால் ஏற்படுத்தப்படவில்லை.

விழாக்கள், ஏனைய நாட்களிலும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களால் கிடைக்கின்றன வருமானங்களுக்கு கணக்குகளோ, பற்றுச்சீட்டுகளோ இல்லை, ஆலயத்துக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் ஏலத்தில் விடப்படாது செய்கை பண்ணப்படுகின்றன. இந்த வருமானங்கள் குறித்து எவ்வித அறிவித்தல்களும் இல்லை.

இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சினைகள் காணப்படும் ஆலயத்தின் செயற்பாடுகளை சீரான முறையில் நடத்துவதற்கு ஆவனம் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிபபிடப்பட்டுள்ளது. பேரணியில் கலந்து கொண்டவர்களின் மகஜர்கள் வெல்லாவெளி பிரதேச சபைத் தலைவர் சிறிதரனுக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதே வேளை அரசாங்கத்திடம் கையளிக்கவோ, தற்போதைய நிருவாகத்தினரை மாற்றவோ வேறு நிருவாகம் அமைக்கவே தேவையில்லை என மண்டூர் 3ஆம் குறிச்சி மற்றும் கோட்டைமுனை ஆகிய பிரதேசங்களைச் செர்ந்த மக்கள் பதாதைகளை ஏந்தி ஊர்வலம் நடத்தியதுடன்  மகஜர்களையும் கையளித்தனர்.

இதேவேளை வெல்லாவெளிக்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயமுரளிதரனை வெல்லாவொளி பிரதேச செயலகத்தில் இரண்டு தரப்பினரும் சந்தித்த கலந்துரையாடிய போது ஆலயத்தின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X