2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்த அரசாங்கமிருந்திருந்தால் சிறுபான்மை சமூகம் பாரிய நெக்கடியை சந்தித்திருக்கும்: ரிசாத்

Sudharshini   / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மஹிந்த அரசாங்கம் இன்னும் இருந்திருந்தால் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்கள் பாரிய நெக்கடியை சந்தித்து இருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான பொறியிலாளர் சிப்லி பாறூக்கின் தலைமையில் காத்தான்குடி கடற்கரையில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,


கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ முழுப்பலத்தினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தினார். எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக மஹிந்த என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்தார். யார் எதைக்கேட்டாலும் கொடுப்பதுக்கு தயராக இருந்தார்.


மஹிந்தவின் அரசை மாற்ற வேண்டும் என்று சமூகம் எடுத்த அந்த முடிவு சமூகம் ஒன்றுபட்டதன் ஊடாக சமூகத்தின் உணர்வை உணர்ந்தன் ஊடாக நாங்கள் இந்த தேர்தலில் எவ்வாறு முடிவெடுப்பது என்று ஆழமாக சிந்தித்துக் கொண்டு, ஓரிரு கூட்டங்களை நடாத்தி மைத்திரியை ஆதரிப்பது என்று முடிவெடுத்த போது கடந்த அரசாங்கம் அதிர்ந்தது. அரசில் இருந்தவர்கள் எங்களை தேடி தேடி வந்தார்கள். அரசை விட்டு போகவேண்டாம். எது வேண்டுமானாலும் தருகின்றோம் என்றார்கள். எங்களை விலை பேசினார்கள். அதற்கு நாங்கள் இடம்கொடுக்க வில்லை. இறுதியில் அச்சுறுத்தினார்கள், பயமுறுத்தினார்கள், உயிரை எடுப்போம் என்றார்கள்.


மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எங்களுக்கு எதிராக என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்வோம் என்று அச்சுறுத்தினார்கள்.  இறைவனின் உதவியினால் எமது உயிர்கள் போனாலும் பராவாயில்லை என்றுதான் நாங்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினோம்.


தம்புள்ள பள்ளிவாயல் முதல் அளுத்கம வரை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான சகலவற்றையும் அரங்கேற்றினார்கள். பொலிஸார் பார்த்துக்கொண்டு நிற்க, பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட வரலாறு மஹிந்த அரசில் அரங்கேறியது.


சமூக நலனுக்காகவே; எமது கட்சி இந்த முடிவை எடுத்தது. அதன் பின்னர் தான் ஏனைய முஸ்லிம் கட்சிகள் முடிவெடுத்தன. இந்த ஒற்றுமையும் உறுதியும் எப்போதும் நம்மிடத்தில் இருக்க வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு கொடுக்காது என்றுதான் சிலர் நினைத்திருந்தார்கள்.


எமது கட்சி முடிவெடுப்பதுக்கு முன்னரே, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மஹிந்தவை காத்தான்குடிக்கு அழைத்து வந்து அவருக்கான பிரச்சாரக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து நடாத்தினார்.


அதே போன்று எமது கட்சியின் பிரதி தலைவர் சட்டத்தரணி சஹீட் ஊடகங்களுக்கு சென்று மஹிந்தவுக்கு சார்பாக பேசிக் கொண்டிருந்ததை கண்டோம்.


எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியல் முலம் நாடாளுமன்ற உறுப்பின் பதவியொன்றை தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்கள். நான்கு வருடங்களுக்கு முன்னர் கடந்த அரசாங்கம் இந்த தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை தருவதாக வாக்குறுதியை தந்தது.


கட்சியின் செயலாளரினால் தேசியப்பட்டியலில் எமது கட்சி சார்ந்தவரின் பெயரும் போடப்பட்டிருந்தது. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எல்லாக் கட்சிகளுக்கும் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை கொடுத்தார்கள்.


வாக்குறுதியை மீறியவர்கள் மஹிந்த அரசாங்கமும் பசில் ராஜபக்ஷவும் தான். அதன் பிறகு கடந்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கியவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை விலக்கி அந்த எம்.பி.பதவியை எடுக்குமாறு கூறினார்கள்.


நாங்கள் அது தொடர்பில் ஒரு வார காலம் இதை எடுப்பதா இல்லையா என்பது பற்றி ஆலோசனை செய்தோம். பின்னர், நாங்கள் முடிவெடுத்தோம் எமது கட்சிக்கு தருவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்த பதவி இன்றுதான் நிறைவேற்றப் போகின்றார்கள். இது எங்களுக்குரிய எம்.பி.பதவியாகும். அதனால் அதைப் பெற்றுக் கொள்வோம் என்றுதான் நாங்கள் அதை எடுத்தோம்.


அமீர் அலிக்கு பிரதியமைச்சர் பதவியினை தருவதுக்கு கடந்த அரசாங்கத்தில் முற்பட்டார்கள் அதை நாங்கள் எடுக்க வில்லை. அந்த பிரதியமைச்சுப்பதவியை எடுப்பதுக்கு அந்த நேரத்தில் எங்களது உள்ளம் இடம்கொடுக்கவில்லை சமூகத்தின் உணர்வினால் அந்த பிரதியமைச்சுப்பதவியை நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை.


பதவிகளுக்காக பணத்துக்காக அல்லது அட்டகாசங்களுக்காக அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை. எல்லோரும் சேர்ந்து எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசைப்பலப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


இதில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .