2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரூ 730 ஐ பெற்றுக்கொடுப்பதாக இ.தொ.கா உறுதி

Kogilavani   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

கூட்டொப்பந்தத்தின்படி 730 ரூபாய் சம்பளத்தை, இதுவரை பெற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள், தன்னை வந்து சந்தித்து, நிலைமையை தெளிவுபடுத்தினால், 730 ரூபாய் சம்பளத்தை, தோட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.   

கொடக்கலையில் அமைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகத்தில், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கடமையில் இருப்பதாகவும் இத்தினத்தில் வந்து தன்னைச் சந்திக்க முடியும் என்றும் அவர் கூறினார்.  

தோட்டத் தொழிலாளர்களுக்கு, நவம்பர் மாதம் வழங்கப்பட்ட சம்பளத்திலும் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதால், தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.  

இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,   

“கூட்டொப்பந்தத்தின்படி 730 ரூபாய் என்ற அடிப்படையிலேயே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் 18 கிலோகிராமுக்கு மேலதிகமாக கொழுந்து பறித்தால் மட்டுமே, 730 ரூபாய் சம்பளத்தை முழுமையாக வழங்க முடியும் என்றும் இல்லையேல், 570 ரூபாய் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படுமென்றும் சில தோட்டங்கள், தொழிலாளர்களை பிழையாக வழிநடத்தி வந்தன.  

இதனை கருத்திற்கொண்ட இ.தொ.காவனது, அண்மையில் தோட்ட முகாமையாளர்கள், தோட்டத்தலைவர்கள், தலைவிமார், இளைஞரணி தலைவர்கள், தலைவிகளை அழைத்து, கூட்டொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நன்கு தெளிவுபடுத்தின.  

இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஹொரண, மஸ்கெலியா, மதுரட்ட, கொடக்கலை, அகரப்பத்தனை, கௌனிவெளி, தலவாக்கலை, வட்டவளை உள்ளிட்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் கடமையாற்றும் தோட்ட முகாமையாளர்களும், தோட்டத் தலைவர், தலைவிகளும் கலந்துகொண்டனர்.  

கூட்பொப்பந்தம் செய்துகொள்ளப்படுவதற்கு முன்பு, தோட்டங்களில் எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதோ அந்த முறைமையையே, தற்போதும் தோட்டங்களில் பின்பற்ற வேண்டும். அதனையே கூட்டொப்பந்தத்திலும் வழியுறுத்தியுள்ளோம். ஒரு தோட்டத்தில் 14 கிலோகிராம் பறிக்கப்பட்டிருந்தால் 14 கிலோகிராம் கொழுந்தையே தற்போது பறிக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக பறிக்கத் தேவையில்லை. இந்த விடயம் இரு தரப்பினருக்கும் நன்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த இரு தரப்பினரும் அதனை ஏற்றுகொண்டேச் சென்றனர்.  

இந்நிலையில், நவம்பர் மாத சம்பளத்திலும் குளறுபடி நடந்துள்ளதாக அறியக் கிடைத்தது. 730 ரூபாய்படி நவம்பர் மாதத்துக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள், தங்களது சம்பளத்துண்டுடன் என்னை வந்து சந்தித்தால், தோட்ட நிர்வாகத்துடன் பேசி முழுமையான சம்பளத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.  

அத்துடன், கூட்டொப்பந்தம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்றிட்டத்தையும் இ.தொ.கா எதிர்வரும் நவம்பர் மாத்திலிருந்து முன்னெடுக்கவுள்ளது. தோட்டங்கள் தோறும் சென்று தொழிலாளர்களுக்கு கூட்டொப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .