2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்களின் ஏற்பாட்டில், யாழில் தற்பொழுது நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வு போராட்டம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, வெள்ளவத்தையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ள அழைப்பு, பின்வருமாறு... 

இடம்: கொழும்பு 06, வெள்ளவத்தை (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்)

காலம்: பெப்ரவரி 15, 2015. ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை 

யாழ். குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய் கழிவுகளின் கலப்பினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகின்றது.

நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ். குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.

அதுபோல, எண்ணெய் கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும் துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். 

இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.

இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும்.

இன்று யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கெனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைக்கின்றோம்.

-சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .