2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்தேகநபருக்கு டின்னர் பருக்கிய பொலிஸார்; மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் பொலிஸாரால் டின்னர் பருக்கிச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரை, சட்டவைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக, அபாயகர ஔடதங்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரை இம்மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும், நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் - அரியாலை, மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது -36 ) என்ற குடும்பஸ்தர்,   யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றில் வைத்து, அன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில், யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ என்பவரால் கைது செய்யப்பட்டு, யாழ்பப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏற்கெனவே, இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸாரால் தேடப்பட்ட நிலையிலேயே, விக்டர் சுந்தர் கைது செய்யப்பட்டார் என்று, பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

சந்தேகநபரின் மனைவி, வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது, வீடு பூட்டப்பட்டதை அறிந்து தேடிய நிலையிலேயே, கணவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு அவர் சென்றபோதும், கணவரைப் பார்க்க பொலிஸார் அனுமதிக்கவில்லை. கணவர் தாக்கப்படுவதை அறிந்த அவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில்,  முறைப்பாட்டை வழங்கினார்.

அது தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் இணைப்பாளர் கனகராஜ், துரிமாகச் செயற்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச்  சென்றுள்ளார்.

அங்கு சந்தேகநபர் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்திலிருந்து அன்றையதினம் மாலை 6 மணியளவில் சந்தேகநபரை மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக இருவேறு குற்றச்சாட்டுகளின் கீழ் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

ஆயிரத்து 800 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு வழக்கும் நபர் ஒருவரைத் தாக்கிக் காயம் விளைவித்த குற்றச்சாட்டில் மற்றொரு வழக்கையும் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

அவை தொடர்பில் சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு சென்று யாழ்ப்பாணம் நீதவான் ஏ.பீற்றர் போல், விசாரணைகளை முன்னெடுத்தார்.

"சந்தேகநபரை பொலிஸ் நிலையத் தடுப்பில் வைத்து தாக்கவில்லை. அவர், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக, வேறு பல வழக்குகள் இருந்தன. அவர், இதுவரை காலமும் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்” என்று, பொலிஸார் மன்றுரைத்தனர்.

“சந்தேகநபருக்கு, பொலிஸ் தடுப்பில் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. டின்னர் பருக்கிவிட்டுத் தாக்கியுள்ளனர்” என்று, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வினோராஜ் மன்றுரைத்தார்.

இருதரப்பு விவாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபருக்கு சித்திரவதை இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அவரை சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X