2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

படம் பார்க்க சென்றவர்களுடன் அநாகரிகமாக செயற்பட்ட ஊழியர்கள்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்றவரை திரையரங்க ஊழியர்கள் தகாத வார்த்தை பிரயோகம் பிரயோகித்து அநாகரிகமாக அவருடன் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில்,

யாழில் உள்ள குறித்த திரையரங்கில் சனிக்கிழமை (24) திரைப்படம் பார்க்கச் சென்றவர்களுக்கு நுழைவு சீட்டுடன் மேலதிகமாக ஆங்கில எழுத்துடன் கூடிய இலக்கம் கொண்ட துண்டு ஒன்றும் வழங்கப்பட்டது. அது என்ன என ஊழியர்களிடம் வினாவிய போது இருக்கை எண் என கூறப்பட்டது.
 
அதன்போது நாம் நீங்கள் விரும்பிய இருக்கைகளில் நாம் இருக்க முடியாது. இவ்வாறு நீங்கள் இருக்கை ஒதுக்குவது என்றால் திரையரங்கினுள் உள்ள இருக்கைகளின் மாதிரி எமக்கு காட்ட வேண்டும் அவ்வாறு காட்டினால் நாம் விரும்பிய இருக்கைக்கு உரிய நுழைவு சீட்டினை பெற்றுக்கொண்டு திரைப்படம் பார்ப்போம் என கூறினோம்.

அதேநேரம் திரையரங்கினுள் உள்ளே சென்று பார்த்த வேளை முன்னதாக நுழைவு சீட்டு எடுத்து சென்ற எமக்கு திரைக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. பின் பகுதியில் பல இருக்கைகள் ஆட்கள் அற்று இருந்தன. அந்த இருக்கைக்கு உரிய ஆட்கள் எங்கே? அவர்கள் இல்லை தானே, நாம் அந்த இருக்கைகளில் உட்கார போகின்றோம் என கூறிய போது அவை முற்பதிவு செய்யப்பட்டு உள்ளது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

உங்கள் திரையரங்கில் முற்பதிவு செய்ய முடியாதே என திரும்ப வினாவிய போது, 'இல்லை. நாம் யாழ்.மாவட்ட செயலகத்தினர், யாழ்.மாநகர சபையினர், யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் எமது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அவர்கள் உறவினர்களுக்கு முற்பதிவு செய்வோம்' என கூறினார்கள்.

நாம், 'அது எவ்வாறு அவர்களுக்கு மாத்திரம் இந்த விசேட நடைமுறை' என வினாவியவேளை, ஊழியர்கள் எம்மை நோக்கி தகாத வார்த்தை பிரயோகங்களைப் பிரயோகித்து, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை அழைத்து எம்மை திரையரங்கை விட்டு அகற்றுமாறு கூறினார்கள்.

அவ்வேளை, அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் எம்மை வீடியோ, புகைப்படம் எடுத்து எம்மை அச்சுறுத்தும் வகையில் நடத்து கொண்டார்கள். இவை குறித்து நாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

அதில் எம்மை திரையரங்கு உத்தியோகஸ்தர்கள் தாகாத முறையில் பேசி எம்மை அவமானப்படுத்தும் விதமாக செயற்பட்டமை, திரையரங்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வீடியோ புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் பதிவு செய்துள்ளோம் என மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறன சம்பவமென்று, ஏற்கெனவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .